2019 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்

Share:

அநுரகுமார போன்ற ஒருவர் இங்கே சாத்தியமாக வேண்டுமானால்?


அநுரகுமார திஸாநாயக்கவை இம்ரான் கானுடன் ஒப்பிட்டு ரைட்டப் எழுதி கோஷம் போட்ட வீர வரலாற்றை இந்தத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.அப்போது எழுதி இருக்க வேண்டிய பதிவு.ஆனால் அதைக் கேட்கும் தோரணையில் யாரும் இங்கே இருக்கவில்லை.ஒருவர் அநுர வெல்வாரா என்று மெஸேஜ் அனுப்பி கிலியூட்டினார்.இன்னும் சிலர் மும்முனைப் போட்டி என்று கூசாமல் சொல்லிக் கொண்டு திரிந்தனர்..

விசயம் இதுதான்...

இம்ரான்கானின் பாகிஸ்தானில் 96 வீதமானவர்கள் முஸ்லிம்கள்.இரண்டு வீதம் இந்துக்கள்.மிச்சப் பேர் கிறிஸ்தவ, சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்கள்.மாறி மாறி ஆட்சி செய்தது எல்லாம் நவாஸ் செரீபும் பூட்டோவும்.இடையில்.இருவருக்கும் போரடித்ததால் கொஞ்சம் முஷாரப் ஆண்டார்.

அங்கே நவாஸுக்கோ பூட்டோக்கோ முஷாரபுக்கோ இனவாதம் பேச வேண்டிய தேவை இல்லை."பார் இந்துக்கள் அடுத்த பத்து வருடத்தில் பல்கிப் பெருகிக் குட்டி போடப் போகிறார்கள்.இந்தியாவின் ஆளும் பீ ஜே பி அரசின் துணையுடன் பாகிஸ்தானைக் கைப்பற்றிவிடுவார்கள்" போன்ற கோஷங்கள் எதுவும் அங்கே இல்லவே இல்லை.மாறி மாறி ஊழல் செய்து யாராவது களைத்துப் போய் ரெஸ்ட் எடுக்கும் போது இன்னொருவர் வருவார்.இந்தப் பித்தலாட்டத்தை மாற்ற வெறுத்துப் போன மக்கள் இம்ரான்கானை தேர்வு செய்தனர்.

ஆனால் இங்கே எழுபத்து நான்கு வீதம் சிங்களவர்கள்.மிச்சம் இருபத்தாறும் சிறுபான்மையினர்.இனி என்ன மக்களைப் பிரித்து அரசியல் செய்ய சொல்லவும் வேண்டுமா.தமிழர்களிடத்தில் முஸ்லிம் உன் எதிரி என்பார்கள்.முஸ்லிம்களிடத்தில் தமிழனோடு வாழவே முடியாது என்பார்கள்.சிங்களவர்களிடத்தில் "ஐயோ என் நாடு,என் மதம், என் கர்பப்பை எல்லாமே எங்களை விட்டும் போகப் போகிறது.வீறு கொண்டு எழுந்து வாருங்கள் " என்பார்கள்.

இனி யார் அநுரகுமாரவின் எழுச்சிப் பேருரைகளைக் கேட்பது.நாட்டைக் காப்பாற்ற அவர்களும் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சிறுபான்மையும் முட்டி மோதத் தொடங்கிவிடும்.அநுரகுமார போன்ற ஒருவர் இங்கே சாத்தியமாக பாகிஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையாய் முஸ்லிம்கள் இருப்பதைப் போல 98 வீதத்தில் அல்லது நூறு வீதத்தில் பெளத்தர்கள் இருக்க வேண்டும்.அப்போது நாடு பிடிக்க தமிழனோ முஸ்லிமோ வரும் கதைகள் செல்லுபடியாகாது.அநுர போன்ற அப்பழுக்கில்லாத அரசியல்வாதி மிளிர்வார்..இங்கே அப்படி ஒரு நிலமை இல்லாததால் அநுரகுமார திஸாநாயக்க என்றைக்குமே சாத்தியம் இல்லை....

(ஸபர் அஹ்மத்)
Share:

கோத்தாபயை வாழ்த்தி விட்டு பதவி விலகுகிறார் சஜித்


2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

அதேபோல், பொதுமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து, ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்த பிரதித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் தனக்கு ஆதரவளித்த அனைவருடனும், தனக்கு வாக்களித்த பொதுமக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் கலந்துரையாடி தனது அரசியல் வாழ்வின் எதிர்காலம் குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 26 வருட காலமாக தன் மீது நம்பிக்கை வைத்து தனக்காக வாக்கினை செலுத்திய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னராக காலப்பகுதியில் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சஜித் பிரேமதாச குறித்த அறிக்கையின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

(A)
Share:

அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்கிறார் ஹரீன்


தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தனது அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகிக்கும் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். எனது பதவிக்காலத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

(AdaDerana)
Share:

ஆதரவாளர்கள் வன்மத்தோடு அல்லாமல் ஆரோக்கியமாக வெற்றி தோல்விகளை வெளிப்படுத்த வேண்டும்தேர்தல்கள் வருவதும் வாக்காளர்கள் பிரிந்து வாக்களிப்பதும் ஜனநாயக மரபின் அடையாளங்கள்.

பிரச்சாரங்களின் போது வேட்பாளர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியிருப்பார்கள்.

ஆனால் முடிவுகள் வந்தபின்னர் வென்றவரும் தோற்றவரும் கைகுலுக்கி சிரித்துக்கொள்வார்கள்.

ஆதரவாளர்கள் வன்மத்தோடும், வெறுப்போடும் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளாமல் ஆரோக்கியமான பண்பாடுகளை வெளிப்படுத்த
வேண்டும்.

Mujeeb Ibrahim
Share:

முதலாவது பெறுபேறு 12.00 மணிக்கு முன்பு வெளியாகும்

இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை 18 ஆம் திகதி திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முடிந்தவரை பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சிலவேளை இது நாளை மாலைக்கு முன்னதாக கூட இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்தார்.

இதேவேளை இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு 80 சதவீதமாக அமைந்திருந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இது தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுபேறாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்திற்கும் அதிகரிக்கக்கூடும் ஏனெனில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்களிப்பையும் கவனத்தில் கொள்ளும் போது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்திற்கு அதிகமாக இருக்க கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Share:

கம்பஹா மாவட்டத்தில் 83% வாக்குப்பதிவு ; நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 80%இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி ​தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் 80 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குப்பதிவும், யாழ்ப்பாணத்தில் 66 சதவீத வாக்குப்பதிவும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குப்பதிவும், மட்டக்களப்பில 77 சதவீத வாக்குப்பதிவும், இரத்தினபுரியில் 84 சதவீத வாக்குப்பதிவும், கம்பஹாவில் 81 சதவீத வாக்குப்பதிவும் கேகாலையில் 79 சதவீத வாக்குப்பதிவும் மற்றும் திருகோணமலையில் 83 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

அததெரண 
Share:

அத்தனகல்ல தேர்தல் தொகுதி, கஹட்டோவிட்ட பிரதேசத்தில் 82.4% வாக்குப்பதிவுGS Division 369
Total =1062
Palling= 875

GS Division 369/A
Total= 1272
Palling=1049

Net total = 2334
Polling =1924

Percentage - 82.4%

Information - Rifak Ahmed

www.siyanenews.com
Share:

12 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம் (Full)


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.

இதன்படி இன்று காலை 12 மணிவரை  கம்பஹாவில் 40 சதவீத வாக்குப் பதிவுகளும், கண்டியில் 55 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் நுவரெலியாவில் 50 சதவீத வாக்குகளும், காலியில் 50 சதவீத வாக்குகளும் மற்றும் மாத்தறையில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 55% வாக்குகளும், கொழும்பில் 40% வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பொலன்னறுவையில்  52 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 50 சதவீத வாக்குகளும், பதுளையில்  60 சதவீத வாக்குகளும், மொனராகலையில் 55 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 55 சதவீத வாக்குகளும் மற்றும் புத்தளத்தில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் களுத்துறையில் 50 சதவீத வாக்குகளும், குருணாகலில் 55 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 56 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 50 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவில் 45 சதவீதமான வாக்குகளும் மற்றும் கேகாலையில் 45 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் அம்பாறையில் 39 சதவீத வாக்குகளும், யாழ்ப்பாணத்தில் 44 சதவீத வாக்குகளும் மற்றும் கிளிநொச்சியில் 49 சதவீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் மன்னாரில் 40 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பில் 33 சதவீத வாக்குகளும் மற்றும் திருகோணமலையில் 54 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
Share:

போட்டோ எடுத்தல், போன் ரிங் ஆகுதல் தடை - போனை வைத்து விட்டு செல்லவும்

வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது அலைபேசி மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
வாக்களிப்பு நிலையத்தில் அலைபேசியின் அழைப்பு மணி ஒலித்தல் மற்றும் அலைபேசியால் புகைப்படம் எடுத்தல் முழுமையான தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறுகளில் ஈடுபடுவோர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்படுவார்கள் என, தேர்தல்கள் ஆணைக்குழ தெரிவித்துள்ளது.
(தமிழ் மிரர்)
Share:

புத்தளத்திலிருந்து வாக்காளிப்பதற்காக நொச்சியாகம ஓயாமடுவ வீதியால் மன்னார் மாவட்டத்துக்கு பயணித்த பஸ்மீது தாக்குதல்
இன்று நடைபெறும் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் தேர்தல்.

இத்தேர்தலில் சிறுபான்மை மக்களுடைய வாக்காளிப்பது விதத்தை குறைப்பற்காக இவ்வாறான அராஜத்தின் மூலம் எம்மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த முனைகின்றார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் உதவியினால் எவ்வித உயிர் சேதங்களின்று எம்மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு சம்பவ இடத்துக்கு செட்டிக்குளம் பொலீஸார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மக்கள் மன்னாருக்கு பாதுகாப்பாக அனுப்பபட்டனர்.

 மேலும் பயணம் மேற்கொண்ட  பஸ்கள் மீதும் துப்பாக்கி பிரயோகங்களாலும் கற்களாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து பயணித்த பஸ்களை வழிமறிக்கும் செயற்பாடாக பாரிய மரங்களால் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் இச்சம்பவம் குறித்து உடனடியாக  பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்பாரூக் அவர்கள் செட்டிக்குளம் பொலீஸ் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்பாதையுனுடாக பயணிக்கும்  மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டியதுடன் செட்டிக்குளம் பொலீஸ் நிலையத்துக்கு அதிகாலை 1.00 மணியளவில் நேரடி விஜயம் மேற்கொண்டு இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் படுத்தியதுடன் சம்பவம் தொடர்பாக  மக்களின் அச்சநிலை தொடர்பாகவும் அப்பாதையினால் பயணிக்கும் மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் இப்பாதையினால் பயணம் மேற்கொள்ளும் மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிபடையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்  எம்மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின்முன் தாண்டிக்கப்படவேண்டும் எனவும் குழப்பங்களை ஏற்படுத்தி  ஆட்சியை  பிடிக்கவேண்டும் என துடிக்கும் இனவாத தலைவர்களுக்கு மக்கள் தகுந்த படம் இன்று கற்பிக்க ஒன்றிணைய வேண்டும்.

மேலும் எம்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இச்செயலை வண்மையாக கண்டிப்பதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்பாரூக் தெரிவித்தார்.ஊடகப்பிரிவு
Share:

58 போலி வாக்குச்சீட்டுகளுடன் ஹம்பாந்தோட்டையில் ஒருவர் கைது!58 போலி வாக்குச்சீட்டுகளுடன் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஒருவர் கைதாகியுள்ளார். ஹம்பாந்தோட்டை சுசீ தேசிய பாடசாலைக்கு வந்த வேனில் அந்த போலி வாக்குச்சீட்டுகள் இருந்துள்ளன.
முல்கிரிகல பிரதேசத்தில் இருந்து குறித்த போலி வாக்குச்சீட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. திஸ்ஸமகாராம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
Share:

வாக்களிக்கும் நிலையத்தின் முன் செல்பி எடுத்தல் தடை, கூட்டமாக இருத்தல் தடை, இன்னும்...

Police Spokesman  SSP RUWAN GUNESEKERA a  press brief at Police Head Quarters  regarding Election Law and Order on  15.11.2019  ...............


வாக்களிப்பு நிலையத்தருகில் வேட்பாளா்களது படங்கள் சின்னங்கள்் காட்சிப்படுத்துதல், தாா் வீதிகளில் சின்னங்களைக் பொருத்துதல்  வாக்குநிலையத்திற்கு முன்பு செல்பி எடுத்தல், வாக்கு போடும்போது செல்பி எடுப்பது என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்கு நிலையங்களுக்கு முன் கூடி நிற்றல் அல்லது கட்சி அலுவலங்கள் என்பன இயங்கமுடியாது  அவ்வாறாயின் பொலிசாா் நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் ஆஜா்படுத்துவாா்கள்.  11ஆயிரம் போ் நேற்றும் இன்றும் வீதிகளில் உள்ள போஸ்டா்களை அகற்றுவதற்கு நியமிக்கப்பட்டு அகற்றி வருகின்றனா். வாகனங்களில் கட்சி வேட்பாளா்கள் சின்னங்கள் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால் பொலிஸாாினால் கைது செய்யப்படுவாா்கள்.

 வாக்கு நிலையத்திற்கு முன் இருந்து 500 மீட்டருக்குள் யாரும் கூட்டமாகவோ நடமாடுதல் தடை, வாக்காளா்களை இலவசமாக போக்குவரத்து செய்தல் என்பன தடை  ஊடகவியலாளா்கள்  அமைச்சா்கள். பா. உறுப்பிணா்கள் அவா்கள் வாக்களிக்கும்போது  ஊடக ஆவரண செய்வதாயின் அரசாங்க தகவல் தினைக்களத்தில் ்இருந்து விசேட அடையாள அட்டை பெற்றிருத்தல் வேண்டும். உள் செல்ல முடியாது.   ஜனாதிபதி பிரதமா், சபாநாயகா், எதிா்கட்சித் தலைவா், வேட்பாளா்கள் வாக்கு செலுத்தும்போது மட்டும் ஊடக ஆவரணைக்கு அனுமதிக்கப்படும்.

(அஷ்ரப் ஏ சமத்)
Share:

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குத் தயார்!


பிரசாரங்கள் ஓய்ந்து, மௌன காலம் அமுலிலிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் வன்முறைகள் எவையும் நேற்றுமாலை வரையிலும் பதிவாகவில்லையென தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்கள் அறிவித்துள்ளன. 
ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் யாவும், தேர்தல்கள் செயலகம், தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்து இன்று (15) காலை முதல் அனுப்பிவைக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
ஏனைய ஜனாதிபதித் தேர்தல்கள் போலன்றி, இம்முறை தேர்தலில், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் எவருமே போட்டியிடவில்லை. எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல்களை விடவும், ஆகக் கூடியளவான 35 வேட்பாளர்கள், இம்முறை களத்தில் குதித்துள்ளனர். 
ஆகையால் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாகியுள்ளது. என்பதுடன், வாக்களிப்பு நேரம், மாலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த கால தேர்தல் வாக்களிப்புகள் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 16ஆம் திகதி நாளை சனிக்கிழமை இடம்பெறும் வாக்களிப்பில், வாக்களிப்பதற்கு, 15,992,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பொற்றுள்ளனர். 
வாக்களிக்க செல்வோரின் வசதிகளை கருத்திற்கொண்டு, தூரப்பிரதேசங்களிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்வோருக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது. 
நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள், நவம்பர் 17,18 மற்றும் 19ஆம் திகதிகளிலும் முன்னெடுக்கப்படும். 
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளில், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு உட்பட சர்வதேச இயக்கங்களும், பல நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 
கொழும்பு, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், வாக்குச்சீட்டு இம்முறை நீளமானது என்பதனால், வாக்காளர் ஒருவர், தன்னுடைய வாக்கை அளிப்பதற்கு ஆகக் குறைந்து 3 நிமிடங்கள் எடுக்கும். ஒருமணிநேரத்துக்குள் 200 வாக்குகளை மட்டுமே அளிக்கமுடியுமென கண்காணிப்புக்குழுக்கள் அறிவுறுத்தியுள்ளன.  
ஆகையால், மாலை வரையிலும் காத்திருக்காமல், காலைவேளையிலேயே சென்று, தங்களுடைய வாக்குகளை அளித்துவிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவும், கண்காணிப்பு குழுக்களும், அரசியல் கட்சிகளும், மக்களின் நல்சார் அமைப்புகளும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

(Tamilmirror)
Share:

வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்நாளை (16) நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று 915) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது மாகாண தேர்தல் அலுவலகங்கள் மூலம் வாக்களிப்பு மத்திய நிலைங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
(Tamilmirror)
Share:

தேர்தல் கடமைகளை முன்னெடுக்கும் அரச அலுவலர்களுக்கான விசேட வேண்டுகோள்ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 
நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(AdaDerana)
Share:

உண்மையில் வாக்கெண்ணும் நிலையத்தில் இடம்பெறுவது என்ன?


இன்னும் ஓரிரு தினங்களில் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலினை முகம்கொள்ளவிருக்கிறோம். இம்முறை ஜனாதிபதி தேர்தலானது  வழமையான முறைமையை விட சற்று அதிகமான எதிர்பார்ப்புடனேயே பார்க்கப்படுகிறது. காரணம்
35 வேட்பாளர்கள் ஆனால் ஜனாதிபதியோ பிரதமரோ போட்டியிடாத தேர்தல்
வாக்கெடுப்பு 5 மணி வரை நீடிப்பு
வாக்குச்சீட்டு நீளம்  26 அங்குலம்.

ஏற்கனவே யாப்பில் கூறப்பட்ட ஆனால் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் விருப்பு முறைமை கணக்கெடுக்கபடலாம்(50% + கிடைக்கபெறா விட்டால்) என்ற கணிப்பு
மேலும் பல காரணங்களை கொண்ட தேர்தலாக இது எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் 5 வகையான (மக்கள் தீர்ப்பு உட்பட )தேர்தல்கள் இதுவரையில் நடைமுறையில் உள்ளது. இவற்றில் தேர்தலுக்கு பின்னரான வாக்கெண்ணும் முறைமையில் எமக்கு பல்வேறு முன்னுக்கு பின் முரணான செய்திகள் முற்பட்ட காலத்தில் கேள்வியுற்றிருக்கிறோம்.
வாக்குப்பெட்டிகள் மாற்றிவிட்டார்கள், வாக்குசீட்டில் உள்ள அடையாளத்தை அளித்து மாற்றியுள்ளார். தீர்ப்பினை மாற்றியுள்ளார் என பல்வேறு காரணங்களை இதற்கு முன்னரான தேர்தல்களில் பேசியிருப்போம். அல்லது கேள்வியுற்றிருப்போம்  இந்த பதிவு அதற்கான சிறிய தெளிவினை வழங்குவதே.
தேர்தலுக்கு பின்னரான வாக்கெண்ணும் முறைமை
இம்முறை நாடு பூராகவும்  சுமார் 1550 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் கால எல்லைகளை விட இம்முறை 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு இடெம்பெறும்.

மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு வாக்குச் சாவடியின் மூத்த தலைமை அலுவலர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற அச்சிடப்பட்ட உறைகளுடன் கூடிய வாக்குப்  பெட்டிகளை சேகரித்து வாக்குச் சாவடியின் உதவித்தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைப்பார்.
அரசியல் கட்சிகள் ஃ சுயாதீன குழுக்களுக்கு அறிவிக்கப்பட்ட வாக்கெண்ணும் பணி தொடக்க நேரத்தில் வாக்கெண்ணும் பணி தொடங்கும். வாக்கெண்ணும் பணி  மாவட்ட செயலகங்களில் (கச்சேரி) அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச கட்டிடங்களில் எண்ணும் பணி நடத்தப்படும்.

பொதுவாக ஒரு வாக்குச் சாவடியில் சுமார் 10 வாக்குச் சாவடிகளின் (சுமார் 10000-15000 வாக்குகள் வரை) வாக்குப் பெட்டிகள் எண்ணப்படுகின்றன. இம்முறை நாடு பூராகவும் 1550 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்திற்கும்  பொறுப்பாக சிரேஷ்ட கணக்கெடுப்பு அதிகாரி,  8 உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அவர்களின் உதவி அதிகாரிகள், மற்றும் 16 வாக்குச் சாவடியின் தலைமை அலுவலர்கள்  என சுமார் 41 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களோடு சர்வதேச கண்காணிப்பாளர் உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பாக அவதானிக்க கட்சிக்கு தலா 5 முகவர்களை  என நியமிக்க அனுமதிக்கப்படுகின்றன. அஞ்சல் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தலா 2 பார்வையாளர்கள் என வாக்கெண்ணும் நிலையத்தில் காணப்படுவார்கள்.

வாக்கெண்ணும் முறைமை 3 படிமுறைகளில கட்டங்களில் இடம்பெறும்

கட்டம் ஒன்று
     
வாக்குச் சாவடிகளிலிருந்து பெறப்பட்ட வாக்குப் பெட்டிகள் தனித்தனியாக திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு மீண்டும் வாக்குப் பெட்டிகளில் இடப்படும்.
எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெட்டியில் போடப்பட்டு  அவ்வப்போது கலக்கி விடப்படுகின்றன. பிழையாக அல்லது முறையற்ற முறையில் அளிக்கப்பட வாக்குகள் நிராகரிக்கப்பட்டு அணைத்து அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் வாக்குப்பெட்டிகளிலிருந்து நீக்கப்படும். பின்னர் மீண்டும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்பட்டு மீண்டும் வாக்குச் சீட்டுகள் எண்ணப்படும்.

கட்டம் இரண்டு

இரண்டாம் கட்டத்தின் 1 வது துணை கட்டத்தில் வாக்கு பெட்டிகள் உள்ள வாக்கெண்ணும் எண்ணும் அதிகாரிகள் அமர்ந்திருக்கும் மேசையில் கொண்டு வரப்படும். பின்னர்  அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு கட்சி மற்றும் குழுவின் சின்னங்களின் ஃஅடையாளங்களின்படி வாக்குச் சீட்டுகளை வேறுபடுத்தி ஒவ்வொரு கட்சி ஃ குழுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் ஃகொள்கலனில்  வாக்குச் சீட்டுகள் போடப்படும்.

இரண்டாம் கட்டத்தின் 2 வது துணை கட்டத்தில் வாக்கெண்ணும் மேசைகளை 5 பகுதிஃகுழுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் ஃ குழுவிற்கும் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள தனித்தனியாக எடுக்கப்பட்டு அடுத்த குழு அதிகாரிகள் வரிசைப்படுத்தப்பட்ட மேசைக்கு வாக்குச் சீட்டுகளை மீண்டும் அனுப்பப்பட்டு எண்ணப்படும். பின்னர்  அடுத்த குழு அந்த வாக்குச் சீட்டுகளை 50 பகுதியாக பிரிக்கப்பட்டு பெட்டிகளில்/கொள்கலனில் இடப்படும்.

ஒவ்வொரு பெட்டிகளில்/கொள்கலனிலும் உள்ள வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை எண் மற்றும் குறியீட்டைச் சரிபார்க்கப்பட்டு மீண்டும் எண்ணப்படும். பின்னர்  ஒவ்வொரு கட்சி ஃ குழுவும் வாக்களித்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டு முடிவு பெறப்படுகிறது. அணைத்து அதிகாரிகள் கட்சி பிரதிநிதிகள் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இடெம்பெறும் .

வாக்கெண்ணும் முகவர்கள் மறு எண்ணுவதற்கு கோரினால் இரண்டு மறு எண்ணிக்கைகள் நடாத்தப்படும். ஒவ்வொரு கட்சி / குழுவால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் கீழ் நிறுவப்பட்ட முடிவுகளை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் நிலையதில்  ஒப்படைக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டம்

தேர்தலில் யாரும் 50%+ வாக்கினை எவரும் பெறவில்லை எனின் 3ம் கட்டத்திட்கு வாக்கெண்ணும் முறை செல்லவேண்டி வரும்.
விருப்பு வாக்கெடுப்பில் 2ம் கட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற முதலிரு வேட்பாளர்கள் தவிர்த்த ஏனைய வேட்பாளர்கள்  தேர்தல் போட்டியிலிருந்து  நீக்கப்பட்டு நீக்கப்பட்ட வேட்பாளர்களின்(33 பேரின்) விருப்பு வாக்குகளில் 2ம் கட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற முதலிரு வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருப்பு  வாக்குகள் மட்டும் கணக்கிடப்படும்.

ஒவ்வொரு கட்சி / குழுவின் வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக எடுக்கப்பட்டு  2ம் விருப்பத்தேர்வுகள் இ 3ம் விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு தாள் வடிவங்களில் குறிக்கப்படுகின்றன. விருப்பங்களை குறித்த பிறகு இரண்டு விபரச்சுருக்கம் தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற அனைத்து வேட்பாளர்களின்(33 பேரின்)  விருப்பங்களும் கணக்கிடப்பட்டு எண்ணிக்கையிடப்படும்.
ஒவ்வொரு கட்சி ஃ குழுவால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் மற்றைய  கட்சி ஃ குழுவால் பெறப்பட்ட விருப்புவாக்குகளின் எண்ணிக்கை இரண்டு அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் கீழ் நிறுவப்பட்ட முடிவுகளை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் நிலையதில்  ஒப்படைக்கப்படுகிறது.
முடிவுகளின் அறிவிப்பு
முடிவுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு அனைத்து எண்ணும் மையங்களிலிருந்தும் எண்ணும் அறிக்கைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த பிறகு முதலில் ஒவ்வொரு கட்சியும்ஃகுழுவும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. ஏற்கனவே மேலே கூறப்பட்டதுபோல் தேர்தலில் 2ம் கட்டத்தில் யாரும் 50மூ10 1 வாக்கினை எவரும் பெறவில்லை எனின் மட்டுமே  3ம் கட்டத்திட்கு வாக்கெண்ணும் முறை செல்லவேண்டி வரும் அவ்வாறில்லாமல் 2ம் கட்டத்தில் எந்த வேட்பாளராவது அறுதிப்பெரும்பான்மையை பெற்றிருந்தால் ஜனாதிபத ஆணைக்குழு அறியப்படுத்தும்.

எவரும் பெறவில்லை எனின  வாக்குகளின் எண்ணிக்கையின் தீர்மானிக்கப்பட்டு பின்னர் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பட்டியல்கள் தயாரிக்கப்படும் முதன்மை வேட்பாளர்களின் வாக்குகளுடன் மற்றைய காட்சிகள் மூலம் கிடைக்கப் பெற்ற விருப்பு வாக்குகளும் சேர்க்கப்பட்டு  அதன் பின்னர் இரு வேட்பாளர்களின் கூட்டுத்தொகையில் வகுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்ற வேட்பாளரை ஆணைக்குழு  ஜனாதிபதியாக    அறியப்படுத்தும் .
இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது வாக்கெண்ணும் முறைமையின் சுருக்கமே இதனை இன்னும் விரிவாக பார்க்கப்படவேண்டிய ஒரு விடயமாகும் அனால் குழப்பம்,தெளிவின்மையை கருத்திற்டிக்கொண்டு இதனை இவ்வாறு கூறியிருக்கிறேன். இதற்கான தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் மற்றும் PAFFREL என்பவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகும்.

உண்மையில் வாக்கெண்ணும் பணி பல்வேறு சிக்கல்களை கொண்டது 1 இலக்கம் மாறுபட்டாலும் அதனை மீண்டும் கணக்கிடவேண்டிய சூழல் வரும். மேலும் மேலே கூறப்பட்டது போன்று  அரசு அதிகாரிகள் சர்வதேச கண்காணிப்பாளர் உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பாக அவதானிக்க தலா 5 முகவர்கள்  மத்தியில் இடெம்பெறும் இப்பணி நடவடிக்கைகளுக்குள் வாக்குப்பெட்டிகள் மாற்றிவிட்டார்கள், வாக்குசீட்டில் உள்ள அடையாளத்தை அளித்து மாற்றியுள்ளார். தீர்ப்பினை மாற்றியுள்ளார் என கடந்த காலங்களில் சந்தர்ப்பம் இருந்திருந்தாலும் தற்போது அதற்கான சந்தர்ப்பம் மிக மிக அரிது.
எனவே 7வது ஜனாதிபதியை தெரியும் 8வது ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகமாகவும் நியாயமான முறையிலும் நடைபெறவும் எதிர்கால ஜனாதிபதி மக்களாட்சியை ஏட்படுத்தவும் இறைவனை பிராத்தித்து  அனைவரும் 16 ம் திகதி இடம் பெரும் தேர்தலில் உங்களின வாக்களிகும் உரிமையை பயன்படுத்தும் படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


தொகுப்பு
K.M. றினோஸ்
PAFFREL
Share:

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்புஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் நடத்தும் இறுதி கலந்துரையாடலாக இது அமைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெறும் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களில் உறுப்பினர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினது பிரதிநிதிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் மேலும் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று முதல் அமைதிகாலம் நடைமுறைப்படுத்தப்படுவதால் தேர்தல் வாக்குசாவடிகள் அமைந்துள்ள பிரதேசங்களில் செயற்பட்டுவந்த அனைத்து தேர்தல் காரியாலயங்களும் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல் கடமைகளுக்காக 9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

AdaDerana 
Share:

வெற்றி கன்பர்ம் ; அனைவரும் கண்ணியத்துடன் கொண்டாடவும்ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அந்த வெற்றியை கண்ணியத்துடன் அனுபவிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் இதுவரையும் எமது தேர்தல் பிரச்சாரங்களை முன்மாதிரியாகவும் மற்றும் கண்ணியத்துடனும் முன்னெடுத்துள்ளோம்.

அதேபோல், தொடர்ந்தும் தரமான மற்றும் பயனுள்ள அரசாங்கம் ஒன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்.

இதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தல் வெற்றியை மிகவும் கண்ணியத்துடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாடுமாறு பொது மக்களிடம் கோருகின்றேன்.

நாம் இதுவரை எமக்கு வழங்கப்பட்ட அனைத்து கடமைகளையும் கண்ணியத்துடன் நிறைவேற்றியுள்ளோம்.

எதிர் தரப்பினர் பல வருடமாக இந்த அரசாங்கத்தினை நடாத்திச் சென்ற போதும் பொதுமக்களுக்கு ஒன்றையும் செய்யாமல் அதிகாரத்தை கோருபவர்களாக உள்ளனர்.

அதன் காரணமாக இதுவரை பராமரிக்கப்பட்ட முன்மாதிரி நிலையையும் மற்றும் கண்ணியத்தையும் எதிர்வரும் அரசாங்கத்தின் கீழும் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அததெரண
Share:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் புலிகளின் பாடல் ; ஒருவர் கைது!தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்  புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிபரப்பிய குற்றச்சசாட்டில், கல்முனை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறுதி பிரசாரக் கூட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் இன்று (13) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பப்பட்டது.
இந்த விடயம், கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு  உடனடியாக வந்த பொலிஸார், ஒலி, ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
-பாறுக் ஷிஹான்
(தமிழ் மிரர் இணையம்)
Share:

வேட்பாளர்களின் பிரச்சார விளம்பரங்களை நிறுத்துமாறு Facebook இடம் கோரிக்கை


ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பெஃரல் (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெஃரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (13) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.

அதன்படி, இன்று நள்ளிரவின் பின்னர் மறைமுகமாக அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினர்களிடம் கோருவதாக பெஃரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி குறிப்பிட்டார்.

(AdaDerana)
Share:

குடியுரிமை தொடர்பில் பேசி யாரும் இந்த பந்தயத்தில் இருந்து வௌியேற தேவையில்லைநாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் டிஜிடல் புரட்சியினுள் குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு 30 தொழிற்பேட்டைகள், 30 புதிய தொழிநுட்ப பாடசாலைகள் மற்றும் 30 தகவல் தொழிநுட்ப பூங்காக்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நான் அசல் இலங்கையன். குடியுரிமை எனக்கு தேவையற்றது.

16 ஆம் திகதி சாதனை வெற்றியை நாம் நாடு பூராகவும் பெறுவோம்.

அதன் காரணமாக குடியுரிமை தொடர்பில் பேசி யாரும் இந்த பந்தயத்தில் இருந்து வௌியேற தேவையில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

(A.D.)
Share:

சஜித்துக்குக்குச் செல்லும் சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பது எமது நோக்கமல்ல, கோத்தாவுக்கான வாக்குகளையே குறி வைத்துள்ளோம் என சுனில் ஹந்துன்னெத்தி கூறினார்

சஜித் ஏழரை லட்சம் மேலதிக வாக்குகளால் வெல்வார்
............................................................................................................
சஜித் பிரேமதாசாவை நாம் ஏழரை லட்சம் மேலதிக வாக்குகளால் வெல்ல வைப்போம் என்றும் அதில் தமிழ்-முஸ்லிம் மக்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பாசல் காசிம் கூறியுள்ளார்.

பொத்துவில்லில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

இதுவரை கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் 65 வீதமானவர்களே வாக்களிப்பதற்குத் தயாராகி உள்ளனர்.ஆனால்,நாங்கள் 90 வீதமானவர்கள் வாக்களிக்க வேண்டும்.

இது  சமூகத்துக்கு முக்கியமான தேர்தல்.எமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேர்தல்.இதில் அஜாக்கிரதையாக இருந்துவிட வேண்டாம்.

சிலர் ஜேவிபிக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றனர்.ஆனால்,ஜேவிபியினர்கூட மறைமுகமாக சஜித்தையே ஆதரிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்துக்கு வந்த சுனில் ஹந்துன்நெத்தியைச் சந்தித்துப் பேசினேன்.சஜித்தின் வாக்குகளை தமிழ்-முஸ்லிம்களிடமிருந்து பறிப்பது  நோக்கமல்ல என்றும் இந்த மக்களிடம்  இருந்து கோட்டாவுக்குச் செல்லவுள்ள வாக்குகளையே நாம் குறி வைத்துள்ளோம் என்றும் அவர் என்னிடம் கூறினார்.

அப்படியென்றால் அவர்களும் கோட்டா வருவதை விரும்பவில்லை.சஜித்தையே விரும்புகின்றனர்.நிலைமை இப்படி இருக்கும்போது நாம் ஜேவிபிக்கு வாக்களிப்பது முட்டாள்தனம்.அவர்கள் வெல்லப்போவதில்லை.ஜேவிபியும் எமக்கே ஆதரவு வழங்குகிறார்கள்.

அதுமட்டுமா? சந்திரிகா சஜித்துக்கு ஆதரவு வழங்கியதால் சஜித்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சில வேட்பாளர்களும் இரண்டாவது விருப்ப வாக்கை சஜித்துக்கு வழங்குமாறே மக்களிடம் கூறவுள்ளனர்.இதனால் எமது வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும்,சஜித்தை நாங்கள் ஏழரை லட்சம் வாக்குகளால் வெல்ல வைப்பதற்காகப் போராடுகிறோம்.அது நிச்சயம் நடக்கும்.இதில் எமது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும்.அதுதான் எமக்கு ஆரசியல்ரீதியாகப் பல நன்மைகளை பெற்றுத் தரும்.

அவர் ஜனாதிபதியானால் என்னவெல்லாம் செய்வார் என்று கூறியுள்ளார்.அவரை வெற்றிபெற வைத்தால்தான் எமக்குத் தேவையான அபிவிருத்திகளை செய்ய முடியும்.பல வேலைகள் குறையாக நிற்கின்றன.சஜித்தை வெல்ல வைத்து ஆட்சியை எமது கையில் எடுத்தால்தான் எமது அபிவிருத்திகளை துரிதமாக முன்னெடுக்க முடியும்.

பல தேவைகளை நிறைவேற்றித் தருவதாக சஜித் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்.அவரை நாங்கள் நம்புகிறோம்.அவர் சொல்வதைச் செய்யும் செயல் வீரன்.இந்த ஆட்சியில் அவருக்குக் கிடைத்த அமைச்சை வைத்துக்கொண்டு அவர் அதிகமான வேலைகளை செய்திருக்கிறார்.

எல்லா கிராமங்களிலும் ஏழை மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுத்திருக்கிறார்.எங்களுக்கும் அவ்வாறான தேவைகள் இருக்கின்றன.அவற்றையெல்லாம் நிறைவேற்றித் தருவதாக அவர் கூறி இருக்கின்றார்.

ஆகவே,எமது பாதுகாப்புக்காகவும் அபிவிருத்திக்காகவும் சஜித்தை நாம் வெல்ல வைக்க வேண்டும்.-என்றார்.

[ஊடகப் பிரிவு]
Share:

கோட்டா ஒருபோதுமே வெல்லமாட்டார் - அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்


பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டா ஒருபோதுமே வெல்லமாட்டார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அக்குரணையில் இன்று (12) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.
கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் ஹலீம் ஆகியோரும் உரையாற்றினர்.
அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,
இனவாத,மதவாத கொள்கையோடு நாட்டை ஆளத்துடிக்கும் வேட்பாளர் ஒருவருக்கு பெரும்பான்மை இன பெளத்தர்கள் ஒருபோதுமே வாக்களிக்க மாட்டார்கள். எனவே இந்த தேர்தலில் எல்லா இனங்களையும் சமமாக மதிக்கும் சஜித் பிரேமதாசாவுக்கே அமோக வாக்குகள் கிடைக்கும்.பெளத்தர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இனவாதிகளை படிப்படியாக அடையாளம் கண்டு வருகின்றனர்.
மஹிந்த அரசாங்கத்தில் அளுத்கம சம்பவத்தை ஒரு சில நாட்களில் அடங்க்கியதாக பெருமை பேசுகின்றனர். இவர்கள் பாலுட்டிவளர்த்தவர்களே அளுத்கமை கலவரத்தை அரங்கேற்றியதால், அவர்களுக்கு தங்களது சகாக்களை அடக்குவது ஒரு தொலைபேசியிலேயே இலகுவான காரியமாக இருந்தது.
மஹிந்த அரசிலும் மைத்திரி – ரணில் அரசிலும் முஸ்லிம்கள் மீது அட்டுழியம் நடத்தியவர்கள் மொட்டு இனவாதிகலே எனவே இந்த அரசில் இனவாதிகளின் அட்டுழியத்தை கட்டுப்படுத்த கொஞ்சநாட்கள் எடுத்தன இந்த அரசில் சட்டமும் ஒழுங்கும் பொலிஸும் ஓரளவு நியாயமாக இருப்பதனாலும் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதனாலும் இனவாதிகளின் செயற்பாடுகள் முடிந்தளவு கட்டுப்படுத்தப்பட்டன . குற்றம் செயதோர் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். ஆனால் கடந்த அரசில் அலுத்கம ,தம்புள்ள,கிரேன்ட்பாஸ் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டோர் ஒருவரேனும் கைதுசெய்யப்படவில்லை. பொலிசில் எத்தனையோ முறைப்பாடுகள் பதியப்பட்டபோதும் பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து வந்த உத்தரவால் எவருமே கைதுசெய்யப்படவும்இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை.
நாம் தொடுத்த பல்வேறு வழக்குகளின் காரணமாக இனவாத தேரர்கள் கொஞ்சம் மெளனமாக இருந்தனர். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நிம்மதியை தொலைத்தார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமும் இனவாத ஊடகங்கள் மூலமும் சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கையை முழுநாட்டினதும் முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்தனர்.இஸ்லாத்தையும் புனித ககுர் ஆனையும் இந்த பயங்கரவாத நடவடிக்கையுடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தினர்.
சகோதர தமிழ் மக்கள் போன்று யுத்தத்தினால் அழிவையும் அகதி வாழ்வையும் முஸ்லிம் சமூகமும் சந்தித்தது. யுத்தம் முடிந்த பின்னரும் அதே அழிவும் அகதி வாழ்வும் தொடர்கின்றது.இனவாதிகள் எங்களை அமைதியாக வாழவிடுகின்றார்கள் இல்லை. அப்பாவி சிங்கள மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடப்பார்க்கின்றார்கள். உசுப்பேற்றுகின்றார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட மக்கள் காங்கிரசின் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன்,அக்குறணை மத்திய குழு அமைப்பாளர் இல்யாஸ் உட்பட பலர் உரையாற்றினர்.
Share:

60,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் பாதுகாப்பினை வழங்குவதற்காக 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“6 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார், நடமாடும் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilmirror 
Share:

நான் இப்போது இலங்கைக் குடிமகன்தான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத தெரண 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தனக்கு அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொள்ள தேவை இருந்ததாக தெரிவித்த அவர், அது தொடர்பில் தான் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று தெரிவித்ததாக கூறினார்.

அதன் பின்னர், அவர்கள் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்து சான்றிதழ் ஒன்றை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 17 ஆம் திகதியில் இருந்து தான் அமெரிக்க குடிமகன் இல்லை என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், தனக்கு தெரிந்த அளவில் இலங்கையில் உள்ள அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்ட சிலருக்கு சுமார் ஒன்றரை வருத்திற்கு பின்னரே குறித்த கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அண்மையில் வௌியான பெயர் பட்டியில் தனது பெயர் உள்ளடக்கப்படாமைக்கும் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடிமகனாக இருந்த போது அந்நாட்டில் பெற்றுக் கொண்ட வௌிநாட்டு கடவுச் சீட்டை ஊடகங்களுக்கு காண்பித்த அவர், அது 2022 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாவதாக தெரிவித்தார்.

தான் குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்ட காரணத்தால் குறித்த கடவுச் சீட்டும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், தான் தற்போது இலங்கை குடிமகன் என அவர் மேலும் தெரிவித்தார்.

AdaDerana 
Share:

சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியை உருவாக்க முடியாது

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மன்னாரில் இன்று இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் எதிர்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள் அமைதியாகவோ, அலட்சியமாகவோ இருந்துவிடக் கூடாது.

கடந்த காலங்களில் எமது மதஸ்தலங்களை நெருக்கியவர்கள், உரிமைகளை பறித்தெடுத்தவர்கள், வியாபாரஸ்தாபனங்களை நாசப்படுத்தியவர்கள், நிம்மதியை தொலைத்தவர்கள் அனைவரும் கோட்டாபயவுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர். இவர்களின் கனவுகளை சிதைப்பதற்காகவே சிறுபான்மை தலைவர்களான நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம். எனவே இனவாதிகளின் சதிகளை முறியடிப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் எம்முடன் கைகோர்த்து சஜித்தை வெல்லவையுங்கள்.

சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரிய வெற்றியை பெறுவார். நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான இந்த தேர்தலில் நியாயம் வெல்லவேண்டும், நீதி வாழவேண்டும்.

இனவாதிகள் தமது அணிதான் வெற்றிபெறுமென்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். நமது சமூகத்தை அளிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டு இப்போது வாக்குகேட்டு வருகின்றார்கள். போதாக்குறைக்கு அவர்களது முகவர்களை வடக்கு, கிழக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். பெருவாரியான பணத்துடன் வந்துள்ள இந்த கோடரிக்காம்புகள் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் முகாமிட்டு வாக்கு கேட்கிறார்கள். கற்றை கற்றையாக காசை அள்ளி விசுறுகிறார்கள் போதாக்குறைக்கு இங்குள்ள சிலபணக்காரர்களும் இந்த சதிக்கு துணைபோவதாக அறிகிறோம். பணத்தை காட்டி வாக்குகளை கொள்ளையடிக்கும் இந்த கூட்டத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். சோரம்போய்விடாதீர்கள். அவர்கள் தந்தாள் கனிமத்துப்பொருட்கள் (யுத்தத்தில் விட்டுச்செல்லும் பொருட்கள்) என நினைத்து வாங்கிக்கொள்ளுங்கள்.

நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்கு கேட்கமுடியாது போய்விட்டாலும் நீங்கள் உணர்ந்து வாக்களியுங்கள். சஜித் பிரேமதாசாவை வெல்லவைப்பதன் மூலம் நமது எதிர்காலம் நமது மண்ணின் எதிர்காலம் சிறக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ஹக்கீம், மனோகணேசன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் எம்பிக்களான சபீக் ரஜாப்தீன், ஹுனைஸ் பாரூக், அஸ்லம், முத்தலி பாவா பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான், அலிகான் ஷரீப், நியாஸ், பாயிஸ், பிரதேசபை தவிசாளர்களான முஜாஹிர், சுபியான், செல்லத்தம்பு உட்பட இங்கு பலர் உரையாற்றினர்.

(AdaDerana)
Share:

மிப்லால் மௌலவி, ரிஸாம் மரூஸ், அஜித் பிரசன்ன ஆகியோருக்கு பணம் வழங்கப்பட்டது ஆதாரங்களுடன் அம்பலம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பை தடுத்து, எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சாதகமாக தேர்தல் முடிவை அடைவதற்கு சில செய்தி ஊடகங்கள் எத்தனித்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்ட பேர்வழிகளை பாவித்து குறுகிய அரசியல் இலாபம் தேடுவதாகவும், அத்தகைய நபர்கள் தம்மிடமும் கப்பம் பெற எத்தனித்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.
கொழும்பு 2இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் பிரசார காரியாலயத்தில் இன்று (07) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான தொலைபேசி குரல் ஒலிப்பதிவுகளையும் அவர் ஊடகவியலாளர்களை செவிமடுக்க வைத்தார். தேவையேற்படின் கைவசமுள்ள அதன் காணொளியையும் காட்சிப்படுத்தலாம் என்றார்.
சம்பந்தப்பட்ட நபரான றிஸாம் மரூஸ் தமது கட்சியின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக்கை அடுத்தடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அமைச்சரை பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசியமைக்கு வருந்துவதாகவும், அதுதொடர்பில் தன்னுடன் பேசுவதற்கான அவகாசத்தை பெற்றுத் தருமாறும் கேட்டுள்ளார்.
றிஸாம் மரூஸ் ஒருநாள் சிப்லி பாரூக்குடன் என்னை சந்திப்பதற்கு வந்தார். இச்சந்திப்பின்போது நான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தாக அவர் குற்றம்சாட்டியதில் எவ்வித உண்மைகளும் இல்லையென்பது தனக்கு நன்றாக தெரியுமென்று தெரிவித்தார். அத்துடன் தனது பொருளாதார நெருக்கடி காரணமாகவே அவ்வாறு செய்ய முற்பட்டாக கூறியதோடு, இது சம்பந்தமான மறுப்பை ஊடக மாநாடொன்றில் தெரிவிக்க முடியும் என்று கூறினார்.
இந்த பேர்வழியின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் கொண்ட நான், அவரது தொலைபேசி உரையாடலை பதிவு செய்துகொள்ளுமாறு சிப்லி பாரூக்கிடம் கூறியிருந்தேன்.
அதனைத் தொடர்ந்து, சிப்லி பாரூக்கை மீண்டும் தொடர்புகொண்டு ஒரு கோடி ரூபா பணத்தை கப்பமாக தருமாறு கேட்டிருக்கிறார். அவர் அதற்கு உடன்படாத காரணத்தினால், பின்னர் பேரம்பேசி அந்த ஊடக சந்திப்புக்கு முன்னர் 25 இலட்சம் ரூபாவும் அதன்பின்னர் 25 இலட்சம் ரூபாவும் தருமாறு கோரியுள்ளார்.
எனக்கு எதிராக புனையப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு பெருந்தொகை பணத்தை ஹிஸ்புல்லாஹ் வழங்கிவருகிறார் என்றும், அவருக்கும் மொட்டு கட்சியின் அரசியல்வாதி ஒருவருக்கும் இடையிலுள்ள தொடர்பினாலேயே இவையெல்லாம் நடப்பதாகவும் கூறினார். நாகரீகம் கருதி குறித்த அரசியல்வாதியின் பெயரை வெளியிடுவதற்கு நான் விரும்பவில்லை.
றிஸாம் மரூஸ் என்ற அந்த நபர், ஹிஸ்புல்லாஹ்வின் பின்னணி மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் பல விடயங்களை என்னிடம் கூறியிருந்த போதிலும், அவற்றை முழுவதுமாக பகிரங்கப்படுத்தி அரசியல் இலாபம்தேட விரும்பவில்லை. என்மீது குற்றம்சாட்டியவர்கள் பணம் கொடுத்து இயக்கப்பட்டவர்கள் என்பது பற்றி விளக்கமளிக்கவே இந்த ஊடக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.
றிஸாம் மரூஸ் தன்னுடன் முஹம்மத் மிப்லால் மௌலவி, “மவ்பிம வெனுவென் ரணவிரு” என்ற அமைப்பைச் சேர்ந்த அஜித் பிரசன்ன ஆகியோருக்கும் இவ்வாறு பணம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த குரல்பதிவுகளின் நம்பகத்தன்மை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், தனது 25 வருட பாராளுமன்ற அரசியலில் நேர்மையாக நடந்துள்ளதாகவும் தனது, நற்பெயருக்கு களங்கம் ஏற்பட விரும்புவதில்லை என்றும், அதன் நம்பகத்தன்மைக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார்.
தேவையேற்படின் குறித்த குரல்பதிவுகளை சிங்கப்பூர் அல்லது வேறேதும் நாடகளுக்கு அனுப்பி பரிசீலனை செய்யமுடியும். அரசாங்க பகுப்பாய்வாளருக்கும் அதனை பரீசிலினைக்கு அனுப்ப முடியும் என்றார்.
தம்மைப் பற்றி அவதூறு பரப்பிவரும் இவ்வாறான இலத்திரனியல் ஊடகங்கள், இதன் பின்னரும் தனக்கு சேறுபூசும் மட்டகரமான காரியங்களில் ஈடுபடுமானால் அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் எச்சரித்தார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Share: