புதிய நகல் யாப்பு - பாகம்1
==================
வை எல் எஸ் ஹமீட்

நிபுணர்களின் அறிக்கை என்ற பெயரில் புதிய நகல் யாப்பு கடந்த 11/01/2019 அன்று அரசியலமைப்பு சபையில் வெளியிடப் பட்டிருக்கின்றது. இதிலுள்ள மிகவும் முக்கியமான அம்சம் “ இலங்கை சமஷ்டித் தன்மை” உள்ள நாடு என்பதாகும். ஆனால் “சமஷ்டி “ என்ற சொல் பாவிக்கப்படவில்லை. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் இது சமஷ்டி இல்லை; என்றவொரு கருத்து விதைக்கப்படுகின்றது.

மறுபுறம் “ ஒற்றையாட்சி “ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ ஏக்கியராஜ்ய” என்ற சிங்களச்
சொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இது ஒற்றையாட்சிதான் என்று சிங்கள மக்களை ஏமாற்ற ஒரு முயற்சி எடுக்கப்படுகின்றது. ஆனால் புதிய நகல் யாப்பின் உள்ளடக்கம் அதியுச்ச சமஷ்டியாகும்.

சமஷ்டி எவ்வாறு இந்த நகல் யாப்பில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அதன் சாதக பாதகங்கள் என்ன? என்பதைப் பார்க்கமுன் “ சமஷ்டியை” எவ்வாறு அடையாளம் காண்பது என்று பார்ப்போம்.

சமஷ்டியின் இரு பிரதான அம்சங்கள்
————————————————-
(1) Form (வடிவம் )
(2) Substance [சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை. உதாரணமாக சீனி வெள்ளை நிறத்தில் அல்லது சிவப்புக்கு அண்மிய நிறத்தில் பளிங்குகள் போல் இருக்கும்; என்பது அதன் ‘ வடிவம்’ ( form). சீனி A,B, C என்ற மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்; இது substance.]

சமஷ்டியைப் பொறுத்தவரை அதன் வடிவத்தைவிட அதன் substance யே முக்கியம்.

உதாரணமாக சீனி மேற்சொன்ன நிறத்தைவிட மங்கலாகவோ, சாற்று மாற்றமாகவோ இருக்கலாம். ஆனால் அதில் A,B,C என்ற மூலக்கூறுகள் இருந்தால் அது சீனிதான். அதேபோன்றுதான் சமஷ்டியும்.

வடிவம்
———-
சமஷ்டியின் வடிவத்தைப் பொறுத்தவரை “ சமஷ்டி” என்று நேரடியாகவும் குறிப்பிடலாம். அல்லது அச்சொல்லைப் பாவிக்காமல் வேறுவிதமாக அதன் வடிவத்தைக் குறிக்கும் விதமாகவும் குறிப்பிடலாம்.

உதாரணமாக ‘ஊர்பள்ளித்தலைவரின் மூத்தமகன்’ என்றும் குறிப்பிடலாம் அல்லது ‘ காலிதீன்’ என்றும் குறிப்பிடலாம். இரண்டும் ஒருவரையே குறிப்பிடுகின்றது; என்பது அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அந்தவகையில்தான் “ சமஷ்டி” என்ற சொல்லைக் குறிப்பிடாமல் வேறு சொற்களில் சமஷ்டியின் வடிவத்தை சரத்து 1 இல் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இது ஏற்கனவே இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வசனமாகும். இங்கு சிங்களவர்களை ஏமாற்ற “ ஏக்கிய ராஜ்ய “ என்ற சொல்லைக் குறிப்பிட்டுவிட்டு அதற்கு ஒற்றையாட்சி என்ற அர்த்தத்தை மறைத்து சமஷ்டித் தன்மையின் குணத்தைக் கொடுத்திருக்கின்றார்கள். சிங்கள மக்களை மேலும் ஏமாற்றுவதற்காக ‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது “ பிரிக்கப்படாததும் பிரிக்கப்பட முடியாததும் ஆகும்” என்று வியாக்கியானம் எழுதிவைத்திருக்கின்றார்கள்.

ஏக்கிய ராஜ்ய/ ஒற்றையாட்சி / Unitary State என்பதன் பொருள் “ ஒரு அரசாங்கம்” என்பதாகும். அதாவது ‘ ஒற்றையாட்சி ‘ அதாவது ஒரேயொரு ஆட்சி அல்லது அரசாங்கம்’ என்பதாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரேயொரு அரசாங்கமான மத்திய அரசாங்கம் மட்டுமே “ supreme” மீயுயர் தன்மையுடையது. மாகாணங்களில் இருப்பவை “ subordinate” அதாவது மத்திய அரசாங்கத்திற்கு கீழ்பட்டவை.

நகல் யாப்பில், முன்னைய பதிவில் கூறியதுபோல் “ ஏக்கிய ராஜ்ய “ என்பது மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது; என்பதன்மூலம் மாகாண அரசாங்கங்களையும் மத்திய அரசாங்கத்தையும் ஒரே தரத்திற்கு கொண்டுவந்து இவையெல்லாம் சேர்த்துத்தான் “ ஏக்கிய ராஜ்ய” என்று கூறியிருக்கிறார்கள். எவ்வாறு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் சேர்ந்தது “ ஏக்கிய ராஜ்ய அல்லது ஒற்றையாட்சி “ ஆகும்.

எனவே, பெயர்தான் ஏக்கிய ராஜ்யவே தவிர அது ஒரு அரசாங்கமல்ல மாறாக சமாந்தரமான மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களைக் கொண்ட “ சமஷ்டியாகும்.

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ஒரு மனைவி உள்ளவனை “ ஏக பத்தினி விரதன்” என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் உள்ளவனை “ பன்முகன்” என்றும் குறிப்பிடுவதாக வைத்துக்கொள்வோம்.

இவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் பெயரை “ ஏகபத்தினி விரதன்” என்று வைத்துவிட்டு அவனுக்கு “ பல துணைவியர்” இருப்பர்; என்று எழுதியிருக்கிறார்கள். கவனமாக ‘ மனைவி’ என்ற சொல்லைத் தவிர்த்து ‘ துணைவி’ என்ற சொல்லைப் பாவித்திருக்கிறார்கள். எனவே, சாதாரண மக்கள் “ ஏக பத்தினி விரதன்” என்றுதானே எழுதியிருக்கிறார்கள்; எனவே, அவனுக்கு ஒன்றுதான் மனைவி என நம்பிவிடுவார்கள். சர்வஜன வாக்களிப்பில் வாக்களித்து விடுவார்கள்; என்று நம்புகிறார்கள். உண்மையில் பலர் அவ்வாறு நினைக்கத்தான் செய்கிறார்கள்.

பிரிபடாத, பிரிக்கப்பட முடியாத நாடு
————————————————
“ஏக்கிய ராஜ்ய” என்பது பிரிபடாத, பிரிக்கப்பட முடியாத நாடு; என்று எழுதிவைத்திருக்கிறார்கள். ஒற்றையாட்சி நாடுகளில் பிரிந்து செல்லுகின்ற உரிமை இல்லை. அதற்காக அவ்வாறு எந்த நாடுமே பிரியவில்லை; என்று சொல்லவும் முடியாது.

மறுபுறம் சமஷ்டி நாடுகளுக்கும் இயற்கையாக பிரிந்து செல்லும் உரிமை இல்லை. ஆயினும் சில நாடுகளுக்கு இருக்கின்றன. சமஷ்டியில் இரு பிரதானவகை இருக்கின்றது. ஒன்று devolutionary federalism அதாவது ஒரே நாடு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு அதிகாரம் பகிரப்படுவது. இரண்டாவது integrative federalism அதாவது வெவ்வேறு நாடுகளாக இருந்தவை ஒரே நாடாக மாறி ( ஆரம்பத்தில் அவை confederation ஆக மாறின) அதிகாரம் பகிரப்படுவது. ( இது தொடர்பாக ஒரு வருடத்திற்குமுன் விரிவான ஆக்கம் எழுதியிருக்கின்றேன்).

இந்த வகைக்கு பொதுவாக பிரிந்து செல்லும் உரிமையுண்டு. யாப்புமூலம் தடுக்கப்படும் சந்தர்ப்பமும் உண்டு. முந்தியவகைக்கு பிரிந்துசெல்லும் உரிமை பொதுவாக இல்லை. ஆனாலும் பிரிந்த சம்பவங்களும் உண்டு. இவற்றிற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் தொடர்புண்டு.

எது எவ்வாறாயினும் ஒன்றிற்கு பொருள் கூறுவது வேறு. அதன் குணாதிசயத்தைக் கூறுவது வேறு. இங்கு பொருளை மாற்றிக்கூறிவிட்டு, குணாதிசயத்தை பொருளாக கூறியிருக்கிறார்கள். அதாவது “ ஏக்கிய ராஜ்ய” என்பது பிரிபடாத, பிரிக்கப்பட முடியாத நாடு என்று எழுதியிருக்கிறார்கள்.

உதாரணமாக , ஏக பத்தினி விரதனுக்கு சொந்த வீட்டைப் பிரிந்து தனிக்குடித்தனம் போகும் உரிமை இல்லை, ஆனால் பன்முகனுக்கு சிலநேரம் அந்த உரிமை இருக்கின்றது;  எனக்கொண்டால்; இவர்கள் சரத்து1 இல் எழுதி இருப்பதை பின்வருமாறு குறிப்பிடலாம்.

இவன் ஒரு “ ஏக பத்தினி விரதன், அவனுக்கு பல துணைவியர் உண்டு”. “ ஏகபத்தினி விரதன்” என்பதன் பொருள் “ சொந்த வீட்டைப் பிரியாத, பிரிய முடியாதவன்” என்று எழுதிவைத்திருக்கிறார்கள்.

இவ்வாறுதான் சரத்து 1 இல் சமஷ்டியை ஒற்றையாட்சியைக் குறிக்கும் “ஏக்கிய ராஜ்ய” எனும் பெயரில் புகுத்தி இருக்கிறார்கள். எனவே, சமஷ்டி எனும் சொல் இல்லாதபோதும் வடிவத்தில் அது சமஷ்டியே!

அடுத்த பாகத்தில் இன்ஷாஅல்லாஹ் substance அதாவது சரத்துக்கள் 132, 145 தொடர்பாகப் பார்ப்போம்.

( தொடரும்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.