சூஃபி கடைத்தெருவில் ஒரு கோப்பியை வாங்கி உறிஞ்சிக்கொண்டிருந்தார். அன்றைய தினசரியை வாங்கி முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படித்து விட்டு தினசரியில் ஒன்றும் சுவாரஸ்யம் இல்லாததால் வெறுமையாக எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

    அவ்வழியாய் வந்த வழிப்போக்கன் சூஃபியை கண்டு முகமன் கூறினான். சூஃபி முகமனுக்கு பதில் கூறிவிட்டு தினசரியில் தனது கவனத்தை மீண்டும் செலுத்தலானார். சூஃபியிடம் ஏதோ கூற எத்தனித்து பின்பு பயத்துடன் ஒன்றும் கூறாமல் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான் வழிப்போக்கன்.

    நிலைமையை உணர்ந்த சூஃபி, "என்ன பிரச்சனை" என்றார். தான் ஏழ்மையால் உழல்வதாகவும் இறைவனுக்கு கண் இருந்தால் தனது இழிநிலையை அவன் கண்டிருப்பான் என்றான் வழிப்போக்கன்.

    அமைதியாய் அவன் கண்களை ஊர்ந்து கவனித்துக்கேட்டார் சூஃபி. தொடர்ந்து வழிப்போக்கன் , "செல்வம் ஒன்றே கவலையின் அருமருந்து , அதை கொடுப்பதில் இறைவனுக்கு ஏன் பாகுபாடு ? உலகில் செல்வந்த சீமான்கள் தான் கவலையற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தினசரி அல்லல்படும் இந்த ஏழையின் துயரம் இறைவன் அறிவானோ ? "

   எல்லாவற்றையும் கேட்ட சூஃபி , கதை ஒன்றை வழிப்போக்கனுக்கு விவரித்தார்.

  "என் அப்பாவின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருந்தன.

  ஒரு கூண்டில் அப்பாவின் அடிமைகள் பிடித்து வந்த சிங்கம் அடைப்பட்டிருந்தது. இன்னொரு கூண்டில் ஒரு சிறு குருவி இருந்தது.

  தினசரி காலை புலரும்போது, இந்த குருவி வலிமையான சிங்கத்தை கைசொடுக்கி அழைத்து , என் சக கைதியே குட்மார்னிங் என்று சொல்லும்.  "

இக்கதையை கேட்டு வழிப்போக்கன் வந்த வழியே திரும்பி போனான். சூஃபியும் கோப்பி மங்கை வைத்து விட்டு கக்கத்தில் தினசரியை சொருகிக் கொண்டு நடையை கட்டினார்.

(Mohamed Riyas - Singapore)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.