ஸ்ரீ லங்கன் விமான சேவையை மீள கட்டமைப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் கொண்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது
.

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை மீள்கட்டமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று உரிய சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்னவின் தலைமையில் கடந்த ஜனவரி 07 ஆம் திகதி ஜனாதிபதியினால் 12 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

நிறுவனத்தினை கலைத்தல் மற்றும் மீள நிறுவுதல், முகாமைத்துவ உடன்படிக்கைகள்,கடன் மீள்கட்டமைப்பு செய்தல் மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த நிபுணர் குழு அறிக்கையில் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் மூன்றாவது விடயமான கடன் மீள்கட்டமைப்பு மற்றும் மூலதன உருவாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மிகவும் சிறந்ததாகுமென, இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன இங்கு கருத்து தெரிவித்தார்.

நிறுவனத்தை மீள கட்டமைப்பதன் கீழ், சுயாதீன பணிப்பாளர் சபை மற்றும் முகாமைத்துவ சபையை இணங்காணுதல், செயற்திட்ட மாதிரிகளில் திருத்தம் செய்தல், மனித வளத்தை மீள்கட்டமைத்தல், சுயாதீன கொள்வனவு நடவடிக்கையை முன்வைத்தல்,நிறுவன தரக்குறியீட்டை ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்புகளை கண்டறிதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டுமென குறித்த குழு தங்களது அறிக்கையில் சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

குழுவின் அறிக்கை, அதன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான இரான் விக்கிரமரத்னவினால் கையளிக்கப்பட்டதோடு, அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த காலத்திற்குள் குழு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் ஜனாதிபதி அதன் உறுப்பினர்களுக்கு இதன்போது தமது நன்றியை தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.