புதிய அரபுக்கல்லூரிகள்  தடையும் முஸ்லீம் புத்திஜீவிதத்துவமும் - ஜுனைட் நளீமி


நாட்டில் புதிதாக அரபுக்கல்லூரிகள் நிறுவுவது நிறுத்தப்படுவதுடன் இருக்கின்ற அரபுக்கல்லூரிகளை வளப்படுத்துவதற்கான ஆலோசனையை தபால் சேவைகள்  மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ ஹலீம் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்ற செய்தி பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டுள்ளதை அவதானிக்க  கூடியதாக  உள்ளது. குறித்த விடயம் தொடர்பான ஆழ்ந்த புலமை இல்லாதவர்களும் உலமாக்களை  முல்லாக்கள் என்று வசைபாடுபவர்களும் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முனைபவர்களும் தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக கருத்துக்களை கூறிவருகின்றவேளை புத்திஜீவிகளது மௌனம் கவலையளிக்கின்றதாக உள்ளது. கௌரவ அமைச்சரின் கருத்தினை கவனமாக உற்றுநோக்குகின்றபோது காலத்திற்க்கு தேவையான விடயத்தை சமூக நலன் கருதி குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இலங்கை இஸ்லாமிய கல்வி கலாச்சார பாரம்பரிய வளர்ச்சியும், தற்போது  இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆழ்ந்து ஆராயும்போது அரபுக்கல்லூரிகளது வகிபாகம் மிகவும் தொடர்புபட்டதாக காணப்படுவது வெளிப்படையான உண்மையாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களின் சந்தேகப்பார்வைக்குள் சிக்கித்தவிப்பதற்கும் இஸ்லாம் இலங்கையில் வளர்ச்சியடையாமைக்கும் அரபுக்கல்லூரிகளும் அதில் வெளியாகிய உலமாக்களும் முக்கிய காரணியாக அமைந்துள்ளமை மறுக்க முடியாத  உண்மை. இலங்கையில் நிர்வாகத்துறையில், மருத்துவத்துறையில், கல்வித்துறையில், தொழிற்துறையில்,  அறிவியல்; துறையில் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம் புத்திஜீவித்துவ நிபுணர்களின் வெற்றிடம் நிலவுவதாக கூறிக்கொள்ளும் நாம், கல்வித்துரையில்; பேராசிரியர்களையும் கலாநிதிகளையும் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களையும் குறை நிறப்பு செய்யமுடியாமல் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் இடர் நிலைக்கு அரபுக்கல்லூரிகளும் உலமாக்களும் வகை சொல்லியே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டு. குறைந்தது இஸ்லாமிய ஷரியா கல்வியில் நிலவுகின்ற தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், ஏனைய கலைகள் மீதான ஆழ்ந்த புலமைகொண்ட உலமாக்களின் தேவைப்பாட்டுக்கு அரபுக்கல்லூரிகளின் வகிபாகம் கேள்விக்குற்படுத்தவேண்டியும் உள்ளது. குறித்த விடயம் தொடர்பாக நோக்குகின்றபோது இலங்கை போன்ற முஸ்லீம் சிறுபான்மையாக வாழும் நாட்டில் அரபுக்கல்லூரிகள் தொடர்பாகவும் அதன் பாடத்திட்டங்கள் தொடர்பாகவும் மீள்பரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு முஸ்லீம் புத்திஜீவிகளுக்கு உள்ளதுபோன்று முஸ்லீம் விவகார அமைச்சருக்கும் உள்ளதென்பதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும். குறித்த அமைச்சரின் கருத்து தொடர்பில் பின்வரும் அம்சங்களை நோக்கும்போது அவரது கருத்தியல் வெளியில் மறைந்துகிடக்கும் உண்மைகள் பலவற்றினை கண்டுகொள்ள முடியும்.

அரபுக்கல்லூரிகளும் பௌதீக வளங்களும்.
அரபுக்கல்லூரிகளைப்பொறுத்தவரையில் இலங்கை முஸ்லீம் ஷரியா கல்விப்பாரம்பரியத்தில் மிக முக்கிய வகிபாகத்தினை ஆரம்ப காலங்களில் வகித்தது. இஸ்லாமிய கற்கை நெறி என்பது பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட சில அரபுக்கல்லூரிகளினூடாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. காலி பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா, மஹரகமை கபூரிய்யா, கிழக்கிலங்கை சர்க்கிய்யா, காத்தான்குடி பலாஹ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய அரபுக்கலாசாலைகள் நாட்டில் காணப்பட்டாலும் போதிய வளங்களை கொண்டு இஸ்த்தாபிக்கப்பட்டிருந்தன. போதிய கல்வி செயற்பாட்டுக்குரிய பௌதீக வளங்கள், தங்கு தடையின்றிய வருமான ஏற்பாடு, பயிற்றப்பட்ட போதனாசிரியர்கள் என தன்னிறைவு பெற்ற வளாகங்களாக காணப்பட்டது.

விமர்சனங்களுக்கப்பால் இக்கல்லூரிகளில் வெளியாகிய உலமாக்களுக்கென சமூக மட்டத்தில் தனி இடமும் காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மறுதலையை நோக்கி செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
அதிகரித்துவரும் வேலையில்லா பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியாத உலமாக்கள் பலர் தொழில் சந்தையில் புதிய அரபுக்கல்லூரிகளை உருவாக்குவதுதான் தீர்வு என கருதுவதனையும் குறிப்பிடமுடியும். அண்மையில் பதிவிற்காக வந்த சில அரபுக்கல்லூரிகளை அவதானிக்கின்றபோது இந்த உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். வெறுமனே 20அடி அகலம், 40அடி நீளம்  கொண்ட தகர கொட்டிலில்  அமையப்பெற்ற  அரபுக்கல்லூரி பதிவிற்காக ஆவணங்களை சமர்ப்பித்து இருந்தது. குறித்த கல்லூரி தகரத்தினால் அமையப்பெற்றிருந்தது. இத்தகர  கொட்டகையில் குரான் மத்ரஸா வகுப்புக்கள், மனன பிரிவு, கிதாப் பிரிவு, வளர்ந்தோருக்கான குரான் வகுப்பு, மற்றும் வாராந்த பயான் வகுப்புக்கள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட அதிபர் விரைவில் அஹதிய்யா வகுப்பினையும் ஆரம்பிக்க உள்ளதாக குறிப்பிட்டார். 122 மாணவர்களைக்கொண்டு இயங்கிவரும் இவ்வரபு கல்லூரிக்கு ஒரு மலசலகூடம் காணப்பட்டது.

உண்மையில் இங்கு கற்கும் அதிகமான மாணவர்கள் பெண்களாக காணப்பட்டனர். உஷ்ணப்பிரதேசமான இக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் மாணவர்களின் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என்பதனை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இதேபோன்று இன்னுமொரு மனனபீடத்தில் பெண்மாணவிகள் உஷ்ணம் தாங்கமுடியாமல் அடிக்கடி வகுப்பினைவிட்டும் வெளியில் சென்று தமது ஆடைகளை நனைத்துக்கொண்டு வந்து காயும்வரை வகுப்பினை தொடர்வதும்  காய்ந்தபின் மீண்டும் நனைத்துக்கொண்டு வருவதுமென  நிலைமை கவலையை தோற்றுவித்துள்ளன.

பிறிதொரு அரபுக்கல்லூரியினை சென்று பார்வையிட்டபோது சமைத்தல், சாப்பிடுதல் தூங்குதல் என்பன ஒரே தகர அறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதனை காணமுடிந்தது. உடுத்த உடுப்புகளை கொழுவி வைப்பதற்குக்கூட வசதி இல்லாமல் வியர்வையுடன் பெட்டியில் அமுக்கி வைக்கின்ற நிலைமைகள் ஏராளம்.
மற்றுமொரு பெயர்பெற்ற அரபுக்கல்லூரியினை பார்வையிட்டபோது மாணவர் தூங்கும் அறையை ஒட்டிய அறையில் பழைய சாமான்களை சேமிக்கும் களஞ்சியமாக பாவிப்பதுடன் துர்நாற்றம் வீசும் அளவு குப்பை கூலமாக  காணப்பட்டது.
சில அரபுக்கல்லூரிகள் தனியார் வீடுகளில் , கட்டடங்களில், பள்ளிவாசல்களில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த ஒப்பந்த காலம் முடியும் நிலையில் அல்லது பள்ளிவாசல் நிருவாகிகளுடனான முரன்பட்டினால் மூடுவிழாக்கொண்டாடப்பட்டு மாணவர்கள் வீதிக்கு வந்த வரலாறுகள் ஏராளம்.

கல்விச்செயற்பாடு
பொதுவாக பழமையான அரபுக்கல்லூரிகள் தவிர்ந்து சில புதிய அரபுக்கல்லூரிகளையும் விடுத்து ஏனைய புதிய பல அரபுக்கல்லூரிகள் கல்விச்செயற்பாட்டுக்கும், புரக்கீர்த்தி நடவடிக்கைக்கும் உரிய போதிய பௌதீக வளங்களை கொண்டிருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பிரபலமான நீண்ட வரலாற்றைக்கொண்ட ஒரு அரபுக்கல்லூரியில் வாசிகசாலைக்கென ஒதுக்கப்பட்ட அறையில் புத்தகங்கள் அலுமாரிகளில் வைத்து பூட்டப்பட்டு மாணவர்களுக்கான வகுப்பொன்று அதில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மற்றுமொரு அரபுக்கல்லூரியில் அழகான வாசிகசாலை அமைப்பும் புத்தகங்களும் காணப்பட்டபோதும் ஒருவருடத்திற்கு மேலாக அது மாணவர் பாவனைக்கு திறக்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்தது. புதிதாக திறக்கப்பட்டுள்ள பல அரபுக்கல்லூரிகளில் வாசிகசாலை என்றால் என்ன என்று முகத்தை பார்க்கும் நிலை காணப்படுகின்றது. வாசிகசாலை உள்ள அரபுக்கல்லூரிகள் பலவற்றில் அரபு தவிர்ந்த ஏனைய மொழி நூற்கள் காண்பதற்கும் இல்லாமல் காணப்படுகின்றது.

இதுதவிர பல அரபுக்கல்லூரிகளில் மாணவர்களின் தேகாரோக்கிய விளையாட்டுக்களுக்கான எவ்வித ஏற்பாடுகளும் காணப்படவில்லை. மைதானம் என்பது அவர்களுக்கு தேவையற்ற ஒன்று என்ற மனநிலையில் இவ்வரபுக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன என எண்ணத்தோன்றும்.
சில அரபுக்கல்லூரிகளில் மாணவர்கள் தேசிய போட்டிகளில், இஸ்லாமிய கல்விசார் பரீட்ச்சைகளில் தோற்றுவதற்கு எச்சந்தர்ப்பமும் அளிக்கப்படுவதில்லை.

அதுமாத்திரமன்றி பல அரபுக்கல்லூரிகள் பாடசாலை பாடவிதானத்தை கற்பிக்காமல் வெறுமனே ஷரியா கல்வியை மாத்திரமே வழங்கிவருவது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக அமைந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் மாணவ மாணவிகள் பாடசாலைக்கல்வியை விட்டும் தூரப்படுத்தும் செயல்திட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு குறித்த பிரதேச முஸ்லிம் பாடசாலைகள் மூடுவிழாவினை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உளவியல் பிரச்சினைகொண்ட உலமா சமூக உருவாக்கம்.
மாணவர்களின் உளவியல் ரீதியான தேவைகளுக்கு போதிய வளங்களை தீர்வாக வழங்க புதிய பல அரபுக்கல்லூரிகள் தவறிவிட்டுள்ளமை உளவியல் ரீதியில் தாக்கமடைந்த உலமாக்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. கற்பதற்கான குறைந்தபட்ச வகுப்பறை இட ஒதுக்கீடு, விளையாட்டு துறை, நடப்பு விவகாரங்களை தெரிந்துகொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படாமை என்பவற்றுடன் கல்லூரி வலாக்கத்தில் அவர்களது சுதந்திர செயற்பாட்டை முடக்கும்; வகையில் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் குறித்த ஒரு அரபுக்கல்லூரிக்கு விஜயம் செய்தபோது மாணவர் தூங்கு விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டிருந்தது. தமது வீடுகளில் படுக்கையறைகளில் கேமராக்களை பொறுத்த ஆட்சேபனை கொண்டுள்ள நாம் மாணவர்களின் படுக்கை அறைவரை  கண்காணிப்பு கமரா பொருத்துவது எத்தகைய ஷரிய்யத் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அமைந்துள்ளது என்று சிந்திக்க தோன்றும். 

தொழில் சந்தையும் அரபுக்கல்லூரிகளும். 
இலங்கையில் சுமார் 300க்குமேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரபுக்கல்லூரிகளும் அதைவிட கூடுதலான எண்ணிக்கை கொண்ட பதியப்படாத (பல்வேறு காரணங்களுக்காக) கல்லூரிகளும் காணப்படுகின்றன. வருடத்தில் சராசரியாக 20 உலமாக்கள் ஒவ்வொரு அரபுக்கல்லூரிகளில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார்கள். எனவே சுமார் 6000 உலமாக்கள் ஒவ்வொருவரிடமும் உற்பத்தி செய்யப்படுகின்றார்கள். இவர்களில் 5மூமானவர்கள் அரச தனியார் துறைகளிலும் 10மூவெளிநாடுகளிலும் 5மூமானவர்கள்; பள்ளிவாசால்கள் மற்றும் அரபுகலாசாலைகள், குரான் மதரஸாக்களில் தொழில்வாய்ப்பினை பேருக்கொள்கின்றனர். ஏனைய 80மூமானவர்கள் தொழில்தேடும் படையினரில் உள்வாங்கப்படுகின்றனர். இதனால் பலர் புதிய குரான் மதரஸாக்களையும் அரபுக்கல்லூரிகளையும் உருவாக்க முனைவதனை ஆய்வுமூலம் அறிய முடிகின்றது. குறிப்பாக இப்பிரிவில் 50மூமானவர்கள் அரச கல்வி மற்றும் தொழில்த்துறைசார் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளாதவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.

குறித்த ஒரு அரபுக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது கல்லூரியின் தலைவர் குறித்த பெயரில் இயங்கும் இன்னும் ஒரு கிளை அரபுக்கல்லூரிக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அத்தோடு அவர் அக்கல்லூரியினதும்  அதிபராக கடமையாற்றுவதுடன் மூன்றாவது அரபுக்கல்லூரி ஒன்றினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதக தகவல் கிட்டியது. இதேபோன்று ஒரு மாணவி மனனப்பிரிவில் சேர்க்கப்பட்டு ஒருவருடம் கடந்த நிலையிலும் இன்னும் மனனப்பிரிவில் சேர்க்காமல் குரான் ஓதும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயமுற்பட்டபோது கல்லூரியின் அதிபர் வருடத்தில் பெரும்பாலான நாட்களை கல்லூரிக்கு வெளியில் கழிப்பதுடன் மனனப்பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உலமா தனது வீடு உள்ளிட்ட மேலும் இரண்டு மதரஸாக்களில் பணிபுரிவதினால் உரிய பாட மீட்டல்கள் இடம்பெறுவதில்லை என அறியக்கிடைத்தது. மாத்திரமன்றி பெண்கள் கல்வி பயிலும் இக்கலாசாலையில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்பட்டமை அவதானிக்க முடிந்தது.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு அரபுக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது வருடத்தில் ஆறுமாதம் கல்வி; செயற்பாட்டிலும் ஆறுமாதம் கல்லூரிக்கான நிதி வசூலிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அவதானிக்க முடிந்தது. இத்தகைய வெறுமனே  பொருளாதார இலக்குகொண்ட கற்பித்தல்  செயற்பாடு  அமானிதமாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு தலைமுறையை சீரழிப்பதாக அமைந்துவிடுகிறது.

நிதித்துறை சார் நடவடிக்கைகள்.
சில அரபுக்கல்லூரிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதி உதவிகளை பெற்றுக்கொண்டு எவ்வித கணக்கறிக்கை செயற்பாடுகளும் இன்றி நடாத்தப்படுவதும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொள்வதனையும் காணக்கூடியதாக உள்ளது. மதரஸாக்களுக்கு சொந்தமான காணிகளை தமது சுயவிருப்பில் விற்பனை செய்துகொள்வது போன்ற அம்சங்களும் இல்லாமல் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட ஒரு கல்லூரிக்கு விஜயம் செய்தபோது அனைத்து வளங்களும் அங்கு காணப்பட்டது. வருடாந்தம் சுமார் 50 மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வந்த குறித்த கல்லூரியில் தற்போது 25 மாணவர்கள் அளவிலேயே மொத்தமாக காணப்பட்டனர். ஏழு வருட கற்கை நெறி என கல்லூரி நிருவாகம் குறிப்பிட்டபோதும் மாணவர்கள் பாடசாலை வகுப்பினடிப்படையிலேயே பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். வெளிநாட்டு உதவிபெறும் இக்கல்லூரி நிருவாகம் எவ்வித கல்வி மேம்பாட்டு திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை என அறிய முடிந்ததுடன் உரிய கணக்கறிக்கைகளும் பேணப்பட்டிருக்கவில்லை என காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு பல்வேறு எதிர்மறைகள் அரபுக்கல்லூரிகளை சுற்றி வெளிவராத உண்மைகளாக காணப்படுவதனை அவதானம் கொண்டே கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்கள் அரபுக்கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படுவதனை நிறுத்தி நன்கு வளமுள்ள கல்லூரிகளை மேலும் தரப்படுத்தவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்துள்ளார்.

மாகாணத்தில் ஒன்று என்ற நிலைமாறி ஊருக்கு இரண்டுஇ மூன்று ஐந்து என அரபுக்கல்லூரிகள் தோற்றம்பெறுவதனால் எந்தவொரு அரபுக்கல்லூரியையும் சிறப்புற செயற்படுத்த முடியவில்லை என்ற உண்மையினை நடைமுறையில் விளங்கியே ஆகவேண்டும். குறைந்தது மாவட்டத்தில் ஒரு அரபுக்கல்லூரியை தெரிவுசெய்து வலுப்படுத்தவேண்டிய தேவைசமூகத்திற்கு உள்ளது.
அனைத்து அரபுக்கலாசாலைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் அமைகின்றபோது  சமயப்பாட ஆசிரியர்கள் பதவி உள்ளிட்ட பல அரச பதவிகளுக்கும் உலமாக்கள் உள்ளீர்ப்பு  செய்ய வாய்ப்பாக அமையும் என்பதுடன் ஆளுமையுள்ள உலமா சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யும். இத்தகைய பாடத்திட்டம் ஒன்றினை மேற்கொள்ள கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முஸ்லீம் சமய விவகார திணைக்களம் முயற்சிக்கின்றபோதும் குறுகிய கொள்கைசார் சிந்தனையினால் அம்முயற்சி தேக்கம் அடைந்துள்ளமை குறித்து பேசவேண்டி தருணம் இதுவாகும்.

இத்தகைய பாரிய திட்டமிடல்கள் இல்லாமல் குறித்த விடயதானம் குறித்த எவ்வித ஆழ அகல அறிவில்லாமல் கௌரவ அமைச்சர் அவர்களின் கருத்தினை சில்லறைத்தனமாக அரசியலாக்குவது முதிர்ச்சியுள்ள ஒரு சமூகத்திற்கு பொருத்தகமானதாக  அமையாது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.