விமானநிலையத்தில் சந்திக்கும் ஒவ்வொரு பாகிஸ்தானியர்களும் ஒவ்வொரு கோலத்தில்
 இருக்கிறார்கள்..பெரும்பாலும் ட்ரான்ஸிட் பாஸஞ்சர்கள்..கிட்டத்தட்ட அனைவருமே ஆன்மீகப் பயணங்களில் இருப்பவர்கள்.அநேகமானோர் சுவராசியப் பெட்டகங்கள்..

நேற்று இரவு இரண்டு பேரை சந்தித்தேன்.தண்ணீர் தேடிக் கொண்டு இருந்தார்கள்.பக்கத்தில் பில்டர் இருந்த இடத்தைக் காட்டியதும் ஒரே குஷியாகிவிட்டது..அவர்கள் மலேஷியா போய் அங்கிருந்து அவுஸ்ரேலியாவின் பெர்த் இற்குப் போய்  நான்கு மாதம் இருப்பார்களாம்..நான் சும்மா இருக்காமல் 'இம்ரான் கான் எப்படி இருக்கிறார் ?' என்று கேட்டுவிட்டேன்..அவ்வளவுதான் 'பாகிஸ்தானிலேயே இதுவரை வந்த நல்ல ஆட்சியாளர் என்றார்கள்' இருவரும் கோரஸாக..."கண்டிப்பாய் இம்ரான் கான் சாதிக்க வேண்டும் "என்றேன்..

கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குத் தெரிந்த பிட்டுக்களாய் எடுத்துப் போட ஏதோ உள்ளூர்க்காரனைக் கண்ட மாதிரி பரவசமாகிவிட்டார்கள்..''பாகிஸ்தானின் வடக்கே இருக்கும் 'Gil Git' இந்தியாவின் ஹிமாச்சல் மாநிலம் மாதிரி அழகாய் இருக்கிறது" என்றேன்.அவ்வளவுதான்..கலகலப்பு எல்லாம் கரைந்து ஓடிவிட்டது.இந்தியா என்றதுமே கடுப்பாகிவிட்டது.."பாகிஸ்தானின் இமேஜை திட்டமிட்டு இந்தியா மீடியாக்களும் சினிமாவும் நாசப்படுத்தி வருகின்றன.பாகிஸ்தான் உலகத்திலேயே அழகான நாடு..நீங்கள் சொல்லும் கில்கிட்,ஆஸாத் காஷ்மீர் எல்லாம் எவ்வளவு ரம்மியமான இடங்கள் தெரியுமா..நீங்கள் ஒரு முறை வரவேண்டும்.நானே சுற்றிக் காட்டுகிறேன் என்றார் ஒருவர்...அவரது பெயரை 'பெரோஸ் பரீட்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வாட்ஸ் அப் நம்பர் வேறு தந்தார்..

"இலக்கியத்தில் இருந்து இலியானா வரை எல்லாமே இந்திய இறக்குமதி " என்றேன்.இருவருமே இந்தியா மேல் போர்ப் பிரகடனம் செய்து  இருந்ததால் இலியானா யார் என்று சொல்லவில்லை..தப்பினாள் நடிகை இலியானா..அவர் கூகிள் மேப் எடுத்துக் கொஞ்சம் ஆராய்ந்தார்..பின்னர் பெரிய உண்மையைக் கண்டுபிடித்த மாதிரி சொன்னார்..''பாகிஸ்தான் பற்றி எந்தத் தகவலும் உங்களை அண்டவிடாமல் இந்தியா இமயமலை மாதிரி குறுக்கே இருக்கிறது".

விடை பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன்..ரூபாவாஹினியில் எட்டுமணி செய்தி போய்க் கொண்டிருந்தது...ரணில் பிரதமரானதிற்கு இம்ரான் கான் வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறாராம்....இத்தனை நாள் கழித்து இதென்ன பெருந் துயர் ?

சிரிசேனா திடீர் என்று மகிந்தவைப் பிரதமராக்கியது போல யாரையாவது ஒவ்வொரு மாதமும் பிரதமராக்குமாறு இலங்கை அரசியல்யாப்பு கூறுகிறது என்று ஒருவேளை இம்ரான் கான் எண்ணி இருப்பார்..அப்படி ஏதும் இதுவரை நடக்காததால் 'சரி இனி இவர்தான் பிரதமர்  போல இருக்கிறது' என்று நினைத்து இம்ரான் கான் வாழ்த்தி இருக்கலாம்.அல்லது பெரோஸ் பரீட் சொன்னது மாதிரி இந்தியா குறுக்காக பெரும் இடையூறாக இருப்பதால் இலங்கையில் நடந்த கூத்துக்கள் எல்லாம் இம்ரான்கானுக்குத் தெரியாது இருந்து இருக்கலாம்.இந்த இரண்டில் நிச்சயம் ஏதோ ஒன்று சாத்தியம்..சரி.....ரணிலுக்கு மட்டும் இம்ரான் கான் வாழ்த்தி இருப்பது சிரிசேனாவுக்குப் பிடிக்காதே..சிரிசேனாவுக்கும் ஜனாதிபதியானதுக்கு ஒரு வாழ்த்துப் பார்சல் வரலாம்...நாலு வருடம் கழித்து வந்தால் என்ன...சிரிசேனாவின் கோபத்தைப் பற்றியும் வயலை எரித்த நாடோடிக் கதை பற்றியும் பாக் அரசின் உயர் அதிகாரிகள் இம்ரான் கானிடம் விளக்கி இருக்கக் கூடும்..

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.