நெத்தலிப் பயல் = கௌரவ ஆளுநர்
================================


மஹ்மூத் லெப்பை ஆலிம் முஹம்மது ஹிஸ்புல்லாஹ்

இன்று இந்தப் பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

பாராளுமன்ற உறுப்பினராய்....
பிரதி அமைச்சராய்....
மாகாண சபை உறுப்பினராய்...
மாகாண அமைச்சராய்...
இராஜாங்க அமைச்சராய்...
கேபினெட் அமைச்சராய்....
இன்று ஆளுநராய் ....

இப்படிப் பரிணாமம் அடைந்திருக்கும் இந்த நபரை, இவரின் திறமையைச் சிலாகிக்காதவர்கள் மிகவும் சிலரே....

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மரணிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் ஒலுவில் துறைமுக மஹாபொல பயிற்சிக் கூடத்தில் தமிழ் சகோதரர்கள் சிலருக்கு துறைமுகத்தில் நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது  இப்படிக் குறிப்பிட்டார்..

அன்று நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் போட்டியிடுவதற்கு நபர்களை தேடி அலைந்த காலம் இருந்தது....

அன்றும் அப்படித்தான் காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையை முடித்த பின்னர் இந்தக் கட்சியின் அவசியம் பற்றி உரையாற்றிவிட்டு இந்தக் கட்சியில் இணைந்து பணியாற்றவும் வேட்பாளர்களாகக் களமிறங்கவும் தனவந்தர்கள்,படித்தவர்கள்,செல்வாக்குமிக்கவர்கள் முன்வாருங்கள் என அழைப்பு விடுத்து விட்டு வெளியில் வந்தோம்...

யாருமே முன்வரவில்லை.

பள்ளிக்கு வெளியில் வந்ததும் ஒரு பொடியன் வந்தான்...

ஆளப்பாத்தா....வெள்ளயா ...நல்ல ஒல்லியா ....ஒரு நெத்தலிப்பயல்...

சேர் நான் தயார்....என்றான் ....

பேர் என்ன வாப்பா உண்ட...

ஹிஸ்புல்லாஹ் எண்டான்...

அன்று தலைவர் அந்தநெத்தலிப்பயல் ஹிஸ்புல்லாஹ்வின் கரங்களைப்  பற்றி மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு சொன்னார்...

அல்லாஹ்வைப் புகழ்ந்து கண்மணிநாயகம் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ....

எதிர்கால மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் தலைமை இந்த ஹிஸ்புல்லாஹ் தான் ...என்று ..

அல்லாஹ் அதனைக் கபூல்  கொண்டான்.....

இப்படி அவரது உரை நீள்கிறது....

அன்று தலைவர் அவர்கள் சொன்ன நெத்தலிப்பயல்தான் இன்றய கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் கௌரவ எம்.எல் ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...

ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அரசியல் மீது எனக்கு உடன்பாடில்லை...அது எனது சொந்தக் கருத்து.அவரது இந்த ஆற்றல் அவரது தாய்க்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லீம் முஸ்லீம் காங்கிரசின் வியாபகத்துக்குப் பயன்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி எனும் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்கள் அந்தக் கொள்கையை ஏன் விட்டொழிந்தார்கள் எனும் கேள்விக்கு அவர் மாத்திரமல்ல அவரைப் போல அரசியல் செய்ய வெளியேறியவர்கள் எவருமே  இன்று வரை சரியான விடை தரவில்லை.

எல்லோருமே தலைவர்கள் என்றால் எப்படி...?

இவைகளுக்கு அப்பால் இன்றய அரசியல் சூழலில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் அரசியல் பின்புலம் குறித்து அவதானத்தைச் செலுத்தாமல் பெயரளவிலேனும் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராய் ஒரு முஸ்லீம் நியமிக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமானது.

தமிழ்த் தேசிய அரசியலின் அதிகாரப்பகிர்வு அலகாக  இணைந்த வடகிழக்கு மீதான அதீதமான விருப்பும் அழுங்குப்பிடியும் இருக்கும் நிலையில் கௌரவ ஆளுநர் அவர்களின் நியமனம் அரசியல்ரீதியான பயனை முஸ்லிம்களுக்கு அளிக்கவல்லது.

அந்தவகையில் கௌரவ ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நியமனம் வரவேற்கக்கூடியதே.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அரசியல் காலத்தில் சோம்பல் ,விரக்தி போன்ற பலவீனங்களுக்கு  அப்பாற்ப்பட்ட அரசியல்வாதி..

சதுரங்கத்தில் காய் நகர்த்துவதில் படுகெட்டிக்காரன்..

தனது இலக்கை அடைவதற்கான பாதை வகுப்பதில், அதற்க்கான சந்தர்ப்பங்களை ,வாய்ப்புக்களை உருவாக்குவதில் அவருக்கு நிகர் அவரே...

பொதுத்தேர்தலில் தோற்கிறார்....

தோற்ற கையோடு தேசியப்பட்டியல் பெறுகிறார்....

தேசியப்பட்டியல் எடுத்த கையோடு இராஜாங்க அமைச்சராகிறார்...

இது இவ்வளவும் ஒரு தேசியக் கட்சியில்...

காத்தான்குடியில் அவர் பெறும்  சுமார் 30000 கும் குறைவான வாக்குகளுக்கு சொந்தக்காரன்....

இதே இடத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வை நினைத்துப்பாருங்கள்...

ஹிஸ்புல்லாஹ் எங்கே நிற்கிறார் எனப் புரியும்....

ஐவேளையும் தொழக்கூடிய எந்த ஒரு சமாச்சாரமும் அற்றவர் எனப் பெயர் வாங்கிய அரசியல் வாதி...

இஸ்லாமிய மறப்புரிமைகளின்  மீது பற்றுக் கொண்ட சிந்தனையாளன்...

இவைகளை எல்லாம் செயலில் நிரூபித்துக் காட்டிய ஒருவர்...

காத்தான்குடியின் இன்றய அதன் இஸ்லாமிய பாரம்பரியத்தின் மணத்துக்குச்  சொந்தக்காரர்...

உதுமானிய பேரரசின் உத்தியோகபூர்வ இலச்சினையை நடு ஊருக்குள் வைத்திருக்கும் ஒருவர்...

காத்தான்குடியை மதீனத்துல் கஹ்தான் என அறிமுகப்படுத்தியவர்....

காத்தான்குடி அடிக்கடி இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் வேண்டுமென்றே வலிந்திழுக்கப்பட்டு விமர்சிக்கப்படும் நிலைமை இருந்து வருகின்றபோதும் துணிவாக இஸ்லாமிய பாரம்பரியத்தை காட்சிக்குட்படுத்தி வரும் ஒருவர்....

பாதைகளுக்கான அரபுப்பெயப்பலகை வைத்த விடயம் பாராளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்டபொழுது அவர் அளித்த பதில் என்னை மிகவும் கவர்ந்தது.

அதிகமான அரேபிய சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக காத்தான்குடி இருப்பதாலே தான் அவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்ட பொழுது அவரது சமயோசிதத்தை பாராட்டிக் கொண்டேன்...

தலைவர் அஷ்ரப் அவர்களின் மோதிரக்கை குட்டிய அந்த நெத்தலிப்பயல் இன்று கிழக்கின் கௌரவ ஆளுநராக வந்திருப்பதால் ஒரு முஸ்லீம் என்ற அடிப்படையில் சந்தோஷப்படுகிறேன்.

ரனூஸ் முஹம்மத் இஸ்மாயில்,
முன்னாள் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.