போதையை ஒழிப்பது யார்?
=================


போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி முதல் குத்பா பிரசங்கம் நடத்தும் மெளலவி வரை வரிந்து கட்டிகொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றனர். இவர்கள் செய்வது என்ன, நாலு பேரைக் கூட்டி ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ என்று கூப்பாடு போடுவது மட்டும்தான். அதைவிடுத்து போதையை ஒழிக்க ஆரோக்கியமாக எதைச் செய்தார்கள் என்றால் கேள்விக்குறியே எஞ்சுகிறது.

காலையில் ‘போதையை ஒழிப்போம்’ என்று பதாகை தூக்கி ஊர்வலம் சென்ற மாணவன் மாலையில் வீடுதிரும்பியதும் தனது தந்தைக்கு சிகரட் வாங்கிக்கொடுக்கிறான். நாம் இப்படிப்பட்ட சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் ஏற்படாத மாற்றத்தை வெளியில் எதிர்பார்க்கின்றோம்.

பிரபலமான பாடசாலையொன்றில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு ஆசிரியர் ஒருவரை நியமித்திருக்கின்றனர். கடைசியில் அவர்தான் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்கிறார் என்று மாணவர்கள் என்னிடம் சொன்னபோது, மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

நான்கு பேரைக் கூப்பிட்டு, போதைப்பொருள் பாவனையின் தீங்குகள் குறித்து பேசினால், அவர்கள் அதனை பாவிக்காமல் விட்டுவிடுவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு’ என்று சும்மா சொல்லவில்லை. போதையை விடுவோம் என்று நினைத்தாலும், அவர்களால் அதை விட்டுவிடமுடியாது. ஒருநாள் ஒதுங்கியிருந்தாலும் அடுத்தநாள் தொடர்ந்துவிடுவார்கள்.

இப்படியானவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து முற்றாக விடுவிப்பதற்கு நாம் என்ன திட்டங்களை வைத்திருக்கிறோம். அவர்களை போதைவஸ்து பாவனையிலிருந்து எவ்வாறு படிப்படியாக மீட்பது என்பது பற்றிய தெளிவானதொரு திட்டம் இல்லாதவரை, போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரம் என்பது வெற்றுக் கோசமே அன்றி, வேறில்லை.

போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களில் 60 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் மாத்திரம் இருக்கின்றனர். பதின்ம வயதிலேயே இவர்கள் போதைவஸ்து பாவனைக்கு பழக்கப்படுகின்றனர். அவர்களது நண்பர்களும் சூழலுமே இதற்கு பிரதான காரணங்களாகும். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பெற்றோர் பணம் கொடுக்காது விட்டாலும், கடைசியில் திருட்டுத் தொழில் இறங்கி தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

போதைவஸ்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு அந்தந்த பிரதேசங்களிலுள்ள மதஸ்தலங்கள் முன்வரவேண்டும். போதைக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்க நீண்டகால திட்டங்களை அமுல்படுத்த, சரியான திட்டவரைபுகளை மேற்கொள்ள வேண்டும்.

குறித்த பிரதேசங்களிலுள்ள போதைவஸ்து பாவனையாளர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.

சிகரட் புகைத்தால் புற்றுநோய் வரும் என்று அட்டைப் பெட்டியில் அச்சிட்டும் அதை வாங்கி புகைக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில் போதைவஸ்து ஒழிப்புக்கு ஆரோக்கியமான மாற்று உபாயங்களை கையாளாதவரை, விழிப்புணர்வு ஊர்வலமோ அல்லது மார்க்க பிரசாரங்களை அவர்கள் மனங்களை மாற்றப்போவதில்லை. சொல் வீரரை விட செயல் வீரராக இருப்போம்.

#பிறவ்ஸ்

#NoDrugs

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.