நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சமமான அந்தஸ்த்தினை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'அண்மையிலுள்ள பாடசாலை – சிறந்த பாடசாலை' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 3,937.31 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 197 அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 01ம் திகதி மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன.

ஒரே தினத்தில் இவ்வாறான அதிக அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் மாணவர் மயப்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இத்தேசிய நிகழ்வின் பிரதான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்டத்தினை மையமாகக் கொண்டு இடம்பெற உள்ளது. அதனடிப்படையில் குளியாப்பிட்டிய சென் ஜோசப் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக் கட்டிடம், குளியாப்பிட்டிய சாணாத் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கேட்போர் கூடம் மற்றும் குளியாப்பிட்டிய ஆசிரியர் பயிற்சி நிலையத்திற்கான நவீன நிர்வாக கட்டிடம் என்பவையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 54 தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் 988.74 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன. 

குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கு 173.27 மில்லியன் ரூபா நிதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 02 பாடசாலைகளுக்கு 29.19 மில்லியன் ரூபா நிதியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 02 பாடசாலைகளுக்கு 33.12 மில்லியன் ரூபா நிதியும், மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 04 பாடசாலைகளுக்கு 79.16 மில்லியன் ரூபா நிதியும், வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 02 பாடசாலைகளுக்கு 33.12 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன. 

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கு 180.55 மில்லியன் ரூபா நிதியும், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 08 பாடசாலைகளுக்கு 159.22 மில்லியன் ரூபா நிதியும், அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு 301.11 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன. 

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 09 பாடசாலைகளுக்கு 171.38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.