சுதந்திர தின தொழுகை திறந்த வெளியிலா பள்ளியிலா நடத்துவது என்று விவாதம்?


ப்ரொபைல் பிக்சர்கள் எல்லாம் மாற்றப்பட்டு சுதந்திர தின வாழ்த்துக்கள் நேற்றில் இருந்தே களைகட்ட ஆரம்பித்து, சோனகரின் வீடுகள் , வியாபாரஸ்தலங்கள் , வாகனங்களில் எல்லாம் தேசிய கொடி மண மணக்கும் அதிசயங்கள் எல்லாம் முன்னர் எப்போதும் காணாதவை.சித்த சுயாதீனமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனையோ சுதந்திரதினங்களைக் கடந்துவிட்டார்கள்..இப்போது செய்து கொண்டிருக்கும் போலி தோரணங்கள் எல்லாம் 2010 இற்குப் பிறகு வந்து இருக்கும் மரண பயத்திற்கு செலுத்தும் காணிக்கைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா முழுக்க " நாம் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் " என்ற ரகத்தில் இருந்தது.அது முடிய சுதந்திர தினமன்று மாற்றுமத தலைவர்கள் கலந்து கொள்ளும் ஏதோ பிரார்த்தனை இருக்கிறது என்றார்கள்..இங்கே மாற்று மதம் என்றால் பெளத்தம் தான்..ஏனென்றால் அவன் தானே நம்மை விழுங்கப் பார்க்கிறான் ?சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து ஒரு கூழைக் கும்பிடு போட்டால் தான் பிழைக்க முடியும்.பிரச்சினைகளையும் முறுகல்களையும் தீர்க்க ஆளுமை என்ற ஒன்று இல்லாவிட்டால் அடிமைத்தனம் தானே நல்ல தீர்வு ?..

அடிக்கடி சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும்' என்று உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.. எப்படி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தா ? ''சகலருக்கும் இந்த நாட்டில் சம உரிமையுடனும் ஒரே நீதிக் கட்டமைப்பில் சமத்துவத்துடனும் வாழ அரசாங்கங்கள் ஆவன செய்ய வேண்டும் "என்று இவர்கள் ஏன் சொல்வதில்லை.சொல்வதற்குத் தெரியாது..அதற்கு உரிமைப் போராட்டங்கள் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும்.அம்பேத்கரை, மாட்டின் லூதர் கிங்கை, மெல்கம் எக்ஸை எல்லாம் வாசித்து இருக்க வேண்டும்..இதெல்லாம் இந்த மாறி மாறி வரும் அரசாங்கங்களுக்கு சலாம் போட்டுப் பிழைப்பு நடத்தும் ' முல்லாக்களுக்கும் ,ஏக பிரதிநிதிகள்  சபையில் இருப்பவர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும்  வாழ்நாளில் புரியப் போவதில்லை..பால் பண்ணை வைக்க கடன் வாங்கும் கண்ட் ராக்டில் சாட்சிக் கையொப்பமிட புது வேட்டி சட்டை அணிவித்து குடை பிடித்து வடிவேலுவைப் பார்த்திபன் அழைத்து செல்வது போல இவர்கள் எம்மை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்..

இப்படியே போனால் சுதந்திர தினம் சோனகர்களுக்கு கடும் பீதியில்  மூன்றாவது பெருநாள் போல ஆகலாம்..சுதந்திர தின தொழுகை திறந்த வெளியிலா பள்ளியிலா நடத்துவது என்று விவாதம் செய்யலாம்."கிழக்காசிய நாடுகளில் வாழ் இலங்கையர்கள் நேர வலயத்தின் படி நமக்குத் தான் முதலில் சுதந்திர தினம் வந்தது. ஜெய ஸ்ரீ" என்று இரவு பன்னிரண்டு மணியானவுடன் ஸ்டேடஸ் போட்டு மகிழலாம்.."சுதந்திர தின ஸ்பெஷல் ஆட்டிறைச்சி பிரியாணி சஹன் ஆடர் பெற்றுக் கொள்ளப்படும்" போன்ற துண்டுப் பிரசுரங்கள் ஜும்மாக்கள் முடிய விநியோகிக்கப்படலாம்..இப்படி...

கொண்டாட்டங்களுக்கு மனதளவில் தெம்பும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்..தேச பக்தி கரை புரண்டு ஓட சகல இனங்களுக்கும் சம நீதி இருத்தல் வேண்டும்.ஒரு பெண் மீது ஏற்படும் காதல் மாதிரி தான் நாட்டின் மீது ஏற்படும் பேரபிமானமும்..செயற்கையாய் நெற்றிப் பொட்டில் ஆணி அடித்து ஏற்படுத்த முடியாது...இதை எல்லாம் மீறி இந்த நாடு சுவர்க்கபுரியாய் திகழ்கிறது என்று நினைப்பவர்கள் இதய சுத்தியுடன் சுதந்திர தினம் கொண்டாடலாம்..அப்படிக் கொண்டாடுபவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்...

(Zafar Ahmed)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here