ஆட்கடத்தலுக்காக மீன்பிடி படகுகளைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கு புதிய சட்டம்
- கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி

ஆட் கடத்தலுக்காக மீன்பிடி படகுகளைப் பயன்படுத்துவதால் மீன் பிடி படகு உரிமையாளர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று (13) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சில் உள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது மீன்பிடி படகு உரிமையாளர்கள், மீன்பிடி தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 50 பேர் அளவில் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு வந்திருந்த மீன்பிடி படகு உரிமையாளர்கள், இப்பிரச்சினை இந்த நாட்டுக்கு மட்டுமல்லாது, முழு மீன்பிடி கைத்தொழிலுக்கே பாரிய அச்சுறுத்தலாகும். மட்டுமல்லாது நாட்டுக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் ஒன்றாகும்.

புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாண்டி நடைபெறும் இந்த ஆட் கடத்தல் செயற்பாடுகளின் பின்னால் மறை கரமொன்று இயங்குவதாக சந்தேகிப்பதாக மீன்பிடி படகு உரிமையாளர்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து உடனடியாக கவனம் செலுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

இது சம்பந்தமாக விரைவில் கவனம் செலுத்துவதாகவும், நீதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு அவசியம் ஏற்படும் பட்சத்தில், இதற்கென்று கடுமையான தண்டனைகளை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில், நாட்டுக்காகவும் மீனவ சமூகத்திற்காகவும் சிந்தித்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்காக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், வெளி விவகார அமைச்சு, போலீஸ், கடற்படை உள்ளிட்ட பொறுப்பான இடங்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களம் உள்ளிட்ட கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் உடனடியாக சந்திப்பொன்றை நடாத்துவதற்குத் தீர்மானித்த இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் அதில் கலந்து கொள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.