தேசிய கீதத்தின் பிதாமகனையே தற்கொலை செய்ய வைத்த சமத்துவமற்ற நீதியை தந்த சுதந்திர தினம் ; மறக்கடிக்கப்பட்ட உண்மை

    ஆனந்த சமரகோன்

சுதந்திரத்துக்கு முன்னரான காலப்பகுதியிலும் சரி 1948 இல் சுதந்திரம் கிடைத்து 1962 வரையிலும் சரி ஆனந்த சமரக்கோனால் இயற்றப்பட்ட தேசிய கீதத்தின் ஆரம்ப அடிகள் 'நமோ நமோ மாதா 'என்றே இருந்தது.'ஸ்ரீலங்கா மாதா ' என்று இருக்கவில்லை.

 அது 50களின் நடுப்பகுதி. சுதந்திரம் கிடைத்த புது மாப்பிள்ளையாய்  சிங்கப்பூருக்கே ரோல் மாடலாய் திமிறிக் கொண்டு எழ முயற்சி செய்து கொண்டு இருந்த தேசத்துக்கு முதல் முதலாய்   இனவாத சாரி அணிவித்து அழகு பார்க்க நினைத்தார்  ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி சுதந்திரக் கட்சியை உருவாக்கி அடிமட்ட சிங்கள மக்களின் ஹீரோவாக மாறி இருந்த எஸ்.டப்ளிவ் ஆர்டி.பண்டாரநாயக்க..

1956 தேர்தலில் வென்ற பண்டாரநாயக்க பிரதமராகி தனிச் சிங்கள சட்டத்தைக் கொண்டு வந்து தமிழுக்கு நல்லதொரு ஆப்பு வைத்தார்.." ஸ்ரீ" என்று சிங்களத்தில் எழுதப்பட்ட இலக்கத்தகடு உடைய வாகனங்கள் படையெடுத்தன.எங்கும் ஸ்ரீ, எதிலும் ஸ்ரீ..இனக்கலவரத்தில் நாடே எரிந்தது....தேசம் எங்கும் கூச்சல் குழப்பம், அடிதடி,

உச்சக்கட்ட பயங்கரமாக பிக்கு ஒருவரால் 1959களில்  பண்டாரநாயக்க சுடப்பட்டார்.கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் " என்று சொல்வது போல இந்தத் தேசிய கீதத்தின் 'நமோ நமோ' என்ற  ஆரம்ப அடிகள் தான் நாட்டில் சகலவிதமான சைஸிலும் இருந்த அபசகுணங்களுக்கும் வீழ்ச்சிகளுக்கும் காரணம் என்று அதி அற்புத விஞ்ஞான விளக்கம் கூறி இனவாத அமைப்புகளும் புத்திஜீவிகள் என்று அறியப்பட்ட மட்டிஜீவிகளும் போர்க்கொடி தூக்கினார்கள்.

1960 இல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கடந்த  ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட அல்லோல கல்லோலங்களுக்குக் காரணம் என்ன என்று ஆராய ஒரு கமிட்டியை அமைத்தார்..அந்த கமிட்டியின் முடிவுதான் வடிவேலு, மிஸ்டர் பீன், சாரலிசாப்லின் எல்லோரையும் ஓவர்டேக் செய்யும் மிஞ்சும் ரகம்..ஒரு வரி  அறிவிப்பு பறந்து வந்தது. "நமோ நமோ மாத்தாவை' வைத் தூக்கி குப்பையில் போடு!..ஸ்ரீலங்கா மாத்தாவைத் தூக்கி உள்ளே போடு!"...

தான் செதுக்கிய பாடல் தனது கண்முன்னே சிதைக்கப்படுவதைப்  பார்த்து சொல்லொணா துயர் அடைந்தார் ஆனந்த சமரக்கோன்..தனது பாடலுக்கும் நாட்டில் நடந்த துர்ச்சம்பவங்களும் இடையில் முடிச்சுப் போட்ட அறியாமையை நினைத்து தலையில் அடித்துக் கொண்டார்..பாடலின் பதிப்புரிமையை அரசு ஏற்கனவே பெற்றுக் கொண்டுவிட்டதால் வழக்குத் தொடரவும் முடியவில்லை.தினமொரு புலம்பல் பொழுதொரு கெஞ்சல் என்று அதிகாரவர்க்கத்தின் அத்தனை பேரினதும் வீட்டுக்கதவுகளைத் தட்டினார்.ம்ஹும்.ஒன்றும் சாத்தியப்படவில்லை.

அரசு இயந்திரத்தை ஓடவைக்க கண்துடைப்பாக ஸ்ரீலங்கா மாதா என்ற எரிபொருள் தேவைப்படது.கடைசியில் மிகுந்த விரக்திக்குள்ளான ஆனந்த சமரக்கோன்  தனது நிலமையை விளக்கி எதிர்க்கட்சித் தலைவர் டட்லிக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு 1962 இல் தூக்க மாத்திரைகளை விழுங்கித் தற்கொலை செய்து கொண்டார்..

இந்தத் தற்கொலைச் சம்பவத்தை இன்றைய மேடைகளில் யாரும் பேசப் போவது இல்லை.சரித்திரத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் என்று இருக்கின்றன..அதில் போய்  சாய்ந்து உட்கார்ந்து கொண்டது இந்தத் தற்கொலை சம்பவமும்....எழுபத்தியொரு வருட சுதந்திரம் சமத்துவமில்லாத நீதிக்கட்டமைப்பு ஒன்றைப் பரிசாக வழங்கியதைத் தவிர வேறு ஒன்றையும் வழங்கவில்லை.இன்று பாடப்படும் தேசிய கீதத்தின் பிதாமகனுக்கே  நீதி நிலை நாட்டப்படவில்லை என்னும் போது  சாமானியர்களுக்கு மட்டும் தட்டில் வைத்து கிடைத்துவிடுமா?

(Zafar Ahmed)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here