அன்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள். பேரினவாத செயல்பாடுகள் எமது மாணவர்களையும் காவுகொண்டுள்ளது.



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட முஸ்லிம் மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முஸ்லிம்களை அழிப்பதற்கு பேரினவாத சக்திகள் ஒவ்வொரு விடயங்களிலும் எவ்வாறெல்லாம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்கள் என்பது எம்மவர்களுக்கு புரிவதில்லை.

அனைத்தும் நடைபெற்று முடிந்ததன்பின்பே எங்களது உணர்ச்சிகள் மேலெழும்பும். சில நாட்கள் சென்றதன் பின்பு அத்தனையையும் மறந்துவிடுவோம்.

ஒரு சிறுபான்மை சமூகத்தை அழிப்பதென்றால், ஒட்டுமொத்த சமூகத்தையும் கொலை செய்வதில்லை. திட்டமிட்ட குடியேற்றம், அச்சுறுத்துதல், கல்வி முன்னேற்றத்தினை தடுத்தல் ஆகிய மூன்றினையும் செயல்படுத்தினால் போதுமானது.

இலங்கையின் சுதந்திரத்திலிருந்து முஸ்லிம் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றம், அச்சுறுத்தல் ஆகிய இரண்டும் நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது கல்வி சமூகத்திலும் பேரினவாதம் தனது பார்வையை செலுத்தியுள்து.

பல்கலைக்கழங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழ் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதனால் அதன் எண்ணிக்கையினை குறைத்து சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் சிங்கள அரசாங்கம் தமிழர்களின் கல்வியில் கைவைத்தார்கள்.

இதனாலேயே தமிழர்களின் சுதந்திர போராட்டம் வீரியம் பெற ஆரம்பித்தது. பின்பு தமிழர்களின் கல்வியின் சொத்தாகவும், தெற்காசியா பிராந்தியத்திலேயே சிறந்த நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பான நூலகம் 1981 இல் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த பெறுமதியான பல இலட்சம் நூல்கள் தீயில் சாம்பலாகின.

இவ்வாறு தமிழர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் இன்று முஸ்லிம்களின் கல்வி விடயத்தில் கட்டம் கட்டமாக கவனம் செலுத்துவதுடன், இலங்கை நிருவாக சேவை (SLAS) பரீட்சையில் சித்தியடைகின்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்பட்டு வருவதனையும் நாங்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.

அதுபோலவே இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் குறுகிய அரசியல் நோக்கத்திலேயே கைது செய்யப்பட்டார்கள்.

ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்துக்காக இப்போது கைதுசெய்யப்படுவோம் என்பதனை அம்மாணவர்கள் கற்பனைகூட பண்ணியிருக்க மாட்டார்கள்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டு பரீட்சையில் அம்மாணவர்கள் வெச்டொப் எடுப்பதற்குரிய சாத்தியகூறுகள் இல்லாதிருந்திருந்தால் கைது செய்பட்டிருப்பார்களா என்ற கேள்வியும் எழாமலில்லை.

புராதன சின்னங்களின் மேல் ஏறிநின்ற குற்றத்துக்காக கைது செய்வதென்றால், முதலில் எத்தனையோ சிங்களவர்களை கைது செய்திருக்க வேண்டும்.

கவனிப்பாரற்று கிடக்கின்ற குறித்த பிரதேசத்தில் நாளாந்தம் ஏராளமானவர்கள் சுற்றுலா சென்று புகைப்படம் பிடிப்பது சாதாரண ஓர் விடயமாகும்.

ஆனாலும் இன்று நீதிமன்றம் மூலமாக அம்மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று நாங்கள் மகிழ்ச்சியடைய முடியாது. நாளைக்கு இன்னும் எப்படியான ரூபத்தில் பேரினவாதம் எங்களை நசுக்கும் என்றும் தெரியாது.

எனவே அனைத்து விடயங்களிலும் நாங்கள் விழிப்பாக இருப்பதுடன் வெள்ளம் வரமுன்பு அணைகட்ட பழகிக்கொள்ள வேண்டும்.

அதாவது இந்நாட்டில் பலயீனமான சமூகமாக நங்கள் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் எமது எதிர்கால சமூகம் பாரிய நெருக்கடியினை எதிர்கொள்ளும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.