புதிய யாப்பு நிறைவேறுவது சாத்தியமா? - சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்

புதிய யாப்பு நிறைவேறுவது சாத்தியமா?
===========================
வை எல் எஸ் ஹமீட்


புதிய அரசியலமைப்பிற்கான வரைபு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு முஸ்லிம் அதனை படித்து அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வானானால் அதில் முஸ்லிம்களுக்குள்ள ஆபத்தை விளங்கிக்கொள்வானானால் அவனால் நிம்மதியாகத் தூங்கமுடியாது. 

இந்த யாப்பு வரைபு கடந்த மூன்றாண்டுகளுக்குமேலான முஸ்லிம் கட்சித்தலைவர்களும் உள்வாங்கப்பட்ட கலந்துரையாடலுக்குப்பின்தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு நகல் யாப்பைத் தயாரிக்க சம்மதமளித்துவிட்டு அல்லது அதில் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான காப்பீடுகள் எதுவும் உள்வாங்கப்படாத நிலையில் இந்த யாப்பு நிறைவேறாது; என்று ஒற்றை வசனத்தில் முஸ்லிம்களின் கண்களில் மண்தூவப்படுகிறது.

அவ்வாறு நிறைவேறாது என்று வைத்துக்கொண்டாலும் அதற்காக ஒரு யாப்புவரைபில் முஸ்லிம்களின் நலன் உள்வாங்கப்படத்தேவையில்லை; என்பது நியாயமான வாதமா? என்ற கேள்வி ஒரு புறமிருக்க; இதன் நடைமுறைச் சாத்தியம்பற்றி ஆராய்வோம்.

இந்த யாப்பு நிறைவேறாது என்பவர்கள் நாங்கள் வாக்களிக்க மாட்டோம்; அதனால் அது நிறைவேறாது; என்ற அர்தத்திலோ அல்லது இதை நாங்கள் நிறைவேற்ற விடமாட்டோம்; என்ற அர்த்தத்திலோ,  இது நிறைவேறாது; என்று கூறவில்லை. ஏனெனில் அவர்களது பாராளுமன்ற உரைகள் உட்பட அவர்களது தொடர்ச்சியான கருத்துக்கள்  இந்த நகல் யாப்பை ஆதரிப்பதாகவே இருக்கின்றது.

அவர்கள் ‘இந்த யாப்பு நிறைவேறாது’ என்பதற்கான காரணம் ஒன்றில் மக்களைத் தாக்காட்டுவதாக இருக்கவேண்டும் அல்லது பிரதான எதிரணியான மஹிந்த தரப்பு இதனை எதிர்க்கின்றது; எனவே அரசு 2/3 ஐப் பெற்றுக்கொள்ளாது; என்பதாக இருக்கவேண்டும்.

வெளித்தோற்றத்தில் இது நிறைவேறாது; போன்றே தோன்றுகிறது. ஆனாலும் யதார்த்தநிலை சாத்தியப்பாடுகள்; என்ன?

இந்த நாட்டு அரசியலில் கொள்கை, இலட்சியம், தேசியப்பார்வை என்கின்ற எதுவும் கிடையாது. அவை மேடைகளுக்கான ஆபரண பேச்சுக்கள் மாத்திரமே. ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் படித்த 1920 களின் நடுப்பகுதியில் சமஷ்டியைப் பிரேரித்த பண்டாரநாயக தான் டட்லி- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்ததும் தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்ததுமாகும்.

அதேபோன்றுதான் சகல இனங்களும் சேர்ந்து உருவாக்கிய ஐ தே கட்சிதான் பண்டா- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தது. எனவே, இந்நாட்டில் அனைத்துக்கட்சிகளினதும் கொள்கை, இலட்சியம் அனைத்தும் வெறும் “ அரசியல் சந்தர்ப்பவாதம்தான்”. அதில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒற்றுமை இருக்கின்றது.

இந்தப்பின்னணியில்தான் மஹிந்தவின் நிலைப்பாடு பார்க்கப்படவேண்டும். இன்று மஹிந்தவினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது. தனது சொல் கேட்கக்கூடிய ஒருவரை ஜனாதிபதியாக்கி சட்டத்தைத் திருத்தி அக்கதிரைக்கு தான் மீண்டும் வந்துவிடவேண்டும்; என்பது அவரது இலக்கு.

இந்த விடயத்தில் தனது சகோதரர்களை நம்ப அவர் தயாரில்லை. சிராந்தியை இறக்கமுடியுமா? என ஆலோசிக்கின்றார். அவர் வெற்றிபெறுவாரா? கூட்டுக்கட்சிகள் உடன்படுமா? என்ற கேள்விகள் இருக்கின்றன. இந்தக் கேள்விக்கு அவர் காணப்போகின்றவிடை அல்லது அதற்கு மாற்றீடாக இன்னொருவரை அடையாளம் காணமுடியுமா? என்பதில் அவர் காணப்போகின்றவிடை அவருடைய யாப்புத்தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழித்துவிடுவதே சிறந்தது இன்னுமொருவரின்கீழ் பிரதமராக இருப்பதைவிட;  என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வரவேண்டிவரலாம். அவ்வாறான ஒரு நிலை தோன்றுமானால் சிலவேளை ஒரு சில திருத்தங்களுடன் இந்த யாப்பு இலகுவாக நிறைவேற்றப்படலாம்.

அவ்வாறு நடக்காது; என்று வைத்துக்கொள்வோம். அண்மையில் மஹிந்தவுடன் SLPPஇல் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் ஐம்பது பேர். இதன்பொருள் வெளியில் அண்ணளவாக 175 பேர் இருக்கிறார்கள் என்பதாகும். தேவை 150 மாத்திரம்தான்.

ஒரு புறம் டயஸ்போராக்களின் பணபலம். இன்னொருபுறம் மேற்கத்தைய நாடுகள் வரிந்துகட்டிக்கொண்டு இதனைச் சாத்தியப்படுத்த வாரியிறைக்கும் வள்ளல் தன்மையோடு காத்திருப்பு. அடுத்தபுறம் மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அழுத்தம். மறுபுறம் அதிகாரப்பகிர்வுக்கு முழுமையான ஆதரவு வழங்கும் சந்திரிக்கா, SLFP பா உ க்கள் பலருடன் ஐ தே க க்கு ஆதரவு வழங்க எடுக்கும் முயற்சி. இந்தப் பின்னணியில் 150 நிச்சயமாக தூரத்துப் பச்சை என்று கூறமுடியுமா?

இதற்கு இன்னொரு பக்கம் இருக்கின்றது. கோட்டாவுக்கு அமெரிக்க பிரஜாஉரிமையை நீக்க முடியாதுபோகும்; எனவே தனக்குத்தான் போட்டியிட மஹிந்த சந்தர்ப்பம் வழங்குவார்; என மனப்பால் குடிக்கின்றார்; மைத்திரி. அது பகல்கனவு என்பது புரிந்ததும் தனக்கு மீண்டும் கிடைக்காத ஜனாதிபதிப் பதவி இருக்கவே கூடாது; என எண்ணி சில திருத்தங்களுடன் அவர் ஆதரவளிக்கமாட்டார்; என்பதற்கு உத்தரவாதமில்லை. 

இன்னொரு மூலையில் கோட்டா வேட்பாளராக வருவதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லாத நிலையில் குமார்வெல்கம போன்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்திரிக்காவுடனும் பேசுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் புதிய யாப்புக்கெதிரான தங்களது நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள்; என்பதற்கும் உத்தரவாதமில்லை.

இவை எல்லாவற்றிற்குமேலாக, நகல் யாப்பில் புதிய தேர்தல்முறை பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக எல்லை நிர்ணயக்குழு அமைக்க பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்தமுறை வெற்றிபெற மாட்டோம்; என்கின்ற அச்சத்தில் உள்ள பா உ க்கள் எதிரணியில் இல்லாமலில்லை.
புதிய யாப்பை நிறைவேற்றி புதிய தேர்தல்முறைக்காக எல்லை நிர்ணயம் செய்வதற்காக பாராளுமன்றத் தேர்தலை ஒரு வருடமோ,  இரு வருடமோ ஒத்திப்போட அதை மறைமுகமாகவோ, நேரடியாகவோ செய்வதற்கான சரத்தை கொண்டுவருவருவது சாத்திமற்றதல்ல.

மீள்பரிசீலனைக்கு மூன்று மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் எல்லை அறிக்கை காலவரையின்றி சென்றுகொண்டிருப்பதைக் கவனத்திற்கொள்க. சர்வஜன வாக்கெடுப்புக்குட்படுத்துவதால் தேர்தலை ஒத்திப்போடுவதில் சட்டப்பிரச்சினை எழாது. இந்நிலையில் இதற்கு ஆசைப்பட்டு வெற்றியில் நம்பிக்கையில்லாத பா உ க்கள் கை உயர்த்தமாட்டார்களா?

எனவே, ஒரே வசனத்தில் நிறைவேறாது; என்று நாம் வாழாவிருப்பது அறிவுடமையாகுமா? சிலவேளை நிறைவேறாமலே போகலாம். நிறைவேறினால் .......என்ன செய்வது? நாம் இந்த நாட்டில் அடிமையாக மாறுவதா?

நிறைவேறுமோ! நிறைவேறாதோ! ஒரு யாப்பு வரையப்படும்போது எமது நலன்கள், நமது பாதுகாப்புக் காப்பீடுகள் அதற்குள் உள்வாங்கப்படத் தேவையில்லையா? ஏன் நாம் இந்த நாட்டில் இரண்டாம் தரப்பிரஜைகளா? நாம் வாய்பேசா ஊமைகளா?

மலையகத்தலைவர்கள் மலையகமக்களின் ஒரு சம்பளப்பிரச்சினைக்காக எப்படிப்போராடுகிறார்கள்! தமிழ்தலைவர்கள் அவர்களது பிரச்சினைகளுக்குக் எப்படிப்படிப் போராடுகிறார்கள்! நமக்குத் தலைவர்கள் இல்லையா? பிரதிநிதிகள் இல்லையா? எதற்காகவாவது போராடியிருக்கிறார்களா? போராடி எதையாவது பெற்றுத் தந்திருக்கிறார்களா? 

நல்லாட்சி அரசுக்கு மறுவாழ்வு கொடுத்துவிட்டு பறிக்கப்பட்ட ஒரு அலுவலகத்தைக்கூட, பறிக்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியைக்கூட மீட்கமுடியாத ஓர் அபலைச்சமூகம் நாம். இந்நிலையில் இந்த நகல் யாப்பில் நமக்கு அடிமைச் சாசனம் எழுதிவைத்திருக்கின்றார்களே! யாராவது கவலைப்படுகின்றோமா? இந்த தலைவர்களை, இந்தப்பிரதிநிதிகளை அழைத்து இதில் என்ன இருக்கிறது? ஏன் இது எங்களைக் கண்டுகொள்ளவில்லை? என்றாவது கேட்டிருக்கின்றோமா?

அவர்களுக்கும் அதில் என்ன இருக்கின்றது; என்று தெரியாது. நமக்கும் அதில் என்ன இருக்கின்றதென்று தெரியாது. அவர்களுக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை. நமக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை. என்ன சமூகம் நாம்?

அடிவிழுந்தால் ஒரு வாரம் முகநூலில் முழங்குவோம். அடுத்தமுறை அடிவிழும்வரை எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளமாட்டோம். அவர்களும் நம்மை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலுக்கு நமக்குத்தான் வோட்டுப்போடுவார்கள்; என்ற அசையாத நம்பிக்கை அவர்களுக்கு. 

நம் தலைவிதியை மாற்றுவதெப்போது?

குறிப்பு: பாராளுமன்றத்தில் வெற்றிபெற்றாலும் சர்வஜனவாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது; என எண்ணவேண்டாம். இதில் வெற்றியடைந்தால் அதில் வெற்றிபெறுவது சிரம்மல்ல. தேவைப்படின் அதன் விபரம் தொடர்பாகவும் எழுதமுடியும்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here