உலகத்தின் அனைத்து நாடுகளும் உற்பத்தித்திறன் தொடர்பில் கவனம் செலுத்தி முன்னோக்கி சென்றதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இலங்கையிலும் அரச மற்றும் தனியார் துறைகளின் உற்பத்திகள், போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் எனவும், அத்துறைகளை விருத்தி செய்யாது நாடு எனும் ரீதியில் முன்னோக்கி செல்வதற்கு முடியாது எனவும் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். 

பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உற்பத்தித்திறன் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

'இற்றைக்கு 72 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பிரதான நாடொன்றாக இலங்கை கருதப்பட்டது. நாங்கள் பாடசாலை செல்லும் காலத்தில் கூட இலங்கைக்கு ஆசியாவில் முக்கிய இடம் கிடைத்திருந்தது. அன்று எமது நாட்டில் காணப்பட்ட நிர்வாக சேவை, அரச சேவை, வெளிநாட்டு சேவை என்பன ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக காணப்பட்டன என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.

எனினும் இன்று ஆசியாவின் பல நாடுகள் எம்மை விட முன்னோக்கி சென்றுள்ளது. அந்த நாடுகளில் அரச சேவையும், தனியார் சேவையும் பாரியளவு முன்னேற்றம் கண்டுள்ளது. 

இன்று ஆபிரிக்க நாடுகளின் பெருந்தோட்ட துறையானது இலங்கையை விடவும் உயர்ந்த அபிவிருத்தி மட்டத்தில் காணப்படுகின்றது. ஏனைய நாடுகள் விவசாயத்துறை, கைத்தொழில் மற்றும் சேவைப் பிரிவுகளில் இலங்கையை பின்தள்ளிவிட்டு முன்னோக்கி சென்றுள்ளன. அந்த நாடுகளின் உற்பத்தித்திறன் எம்மை விட வேகமாக முன்னோக்கி சென்றுள்ளமையே இதற்கான காரணம் என நான் கருதுகின்றேன்.  

அந்த நாடுகளின் தனியார் பிரிவுகளும் சரி, அரச பிரிவுகளும் சரி சர்வதேச சந்தையில் போட்டியிட்டு முன்னோக்கி சென்றுள்ளன. எனினும் முன்னைய காலத்தில் இந்த நாடுகளில் நிர்வாக சேவைக் கூட இருக்கவில்லை. வியட்நாமானது, பிரான்ஸ் நாட்டின் காலனித்துவத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில் கூட முறையான நிர்வாக சேவையொன்று காணப்படவில்லை. 



எனினும் இன்றைய நிலையில் அவ்வனைத்து நாடுகளும் உற்பத்தித்திறன் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முன்னோக்கி சென்றுள்ளன. அதனடிப்படையில் எமது நாட்டிலும் தனியார் மற்றும் அரச துறைகளின் உற்பத்தி, போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறன் என்பவற்றை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அந்த துறைகளை முன்னேற்றாமல் எமக்கு நாடெனும் ரீதியில் முன்னோக்கி செல்ல முடியாது. ஆகவே எம்மை முன்னேற்றிக் கொள்வது தொடர்பான போட்டியே எமக்கு மத்தியிலான முதலாவது போட்டியாகக் காணப்பட வேண்டும். அப்போது எமக்கு சர்வதேசத்தினை வெற்றிக் கொள்ள முடியும்.

அரச மற்றும் தனியார் துறைகளில் உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாம் ஆசியாவில் முன்னிலையில் இருந்த காலத்தில் எமக்கு பின்னால் இருந்த நாடுகள் எம்மை பின்தள்ளிவிட்டு முன்னோக்கிச் சென்ற முறை தொடர்பில் கவனம் செலுத்தி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது சில அரச மற்றும் தனியார் துறைகள் இன்று முன்னோக்கி சென்றுள்ளன. எனினும் முழுமையாக நோக்குமிடத்து அனைத்து துறைகளும் இன்னும் அந்த முன்னேற்ற மட்டத்தினை அடையவில்லை.

அதனால், அரச சேவையின் உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உற்பத்தித்திறன் செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சேவையினை நாம் பாராட்ட வேண்டும். இலங்கையில் மாகாணங்களிலும், மாவட்ட செயலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும்  உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் வாய்ப்பு கிடைக்கின்றன. அந்த முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதே எமது தேவையாகும். அவ்வாறான முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவே எமக்கு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

அந்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதுடன் நாட்டின் அபிவிருத்திக்காக நிறைவேற்ற வேண்டிய இன்னும் பல விடயங்கள் காணப்படுகின்றன. இன்று முதலீட்டு பிரிவினை நோக்கும் போது முதலீட்டாளர்களுக்கு தமது வியாபாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கு மிக நீண்ட காலம் செலவழிக்க வேண்டிய நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. எனினும், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷpயா போன்ற நாடுகளில் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனுமதி ஒரு மாத காலத்தினுள் கிடைத்துவிடுகின்றது. 



இன்று எமது நாட்டில் கீழ் மட்ட நிறுவனங்களின் நிலைமை திருப்தியளிக்கக் கூடியதாக உள்ளது. அன்றைய காலத்தினை விட இன்று மக்கள் அவற்றில் இருந்து பயனை பெற்றுக் கொள்கின்றனர். அதனால் இவ் உற்பத்தித்திறனை மதிப்பிடும் நிகழ்ச்சியினை மேலும் பலப்படுத்த வேண்டும். உற்பத்தித்திறனான உற்பத்திகளை அதிகரித்துக் கொள்ள இவ்வாறான போட்டிகள் அவசியமாகின்றன. எனினும் இதனை உற்பத்தித்திறன் போட்டிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ள கூடாது. 

உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே நாம் அரச அலுவலர்களுக்கு 02 சந்தர்ப்பங்களில் சம்பள அதிகரிப்பினை வழங்கினோம். அரசாங்கம் எனும் ரீதியில் முதலில் அதன்பால் எமது கவனத்தினைச் செலுத்தினோம். அரச சேவையினை டிஜிட்டல்மயப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கீழ் மட்டத்தில் சில அலுவலகங்கள் மிகவும் சிறப்பாக டிஜிட்டல்மயப்படுத்தப்பட்டுள்ளன. கீழ் மட்டத்திலுள்ள அலுவலகங்கள் அந்த நிலையினை அடைந்த போதிலும் எமது விசாலமான திணைக்களங்கள் இதுவரை அந்த நிலையினை அடையவில்லை என்றே குறிப்பிட வேண்டியுள்ளது. பண்டாரவளை மிருக வைத்திய அலுவலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஆகியவற்றுக்கு முடியும் எனின், ஏனைய பெரிய நிறுவனங்களுக்கு ஏன் அதனை மேற்கொள்ள முடியாது? நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக இவ்வாறான வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

அதேபோன்று எமது நாட்டினுள் போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து சேவையினை விருத்தி செய்வதற்கும் வீதிக் கட்டமைப்பினை விருத்தி செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். கொழும்பைச் சூழவுள்ள வீதிக் கட்டமைப்பினை விருத்தி செய்வதற்கு நாம் அதிக சிரத்தை கொண்டு செயற்பட்டு வருகின்றோம். 2021 ஆம் ஆண்டாகும் போது இவ்வீதி கட்டமைப்பினை மக்கள் மயப்படுத்தவும் நாம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம்.

இவ்வாறான பல செயற்றிட்டங்களை செயற்படுத்திக் கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். விசேடமாக அரச துறையின் உற்பத்தித்திறன் தொடர்பில் திருப்தி கொள்ளாது மேலும் விருத்தி செய்து கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 



இவ்வுற்பத்தித்திறன் விருத்தி செய்யும் பணியினை பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் ரஞ்;ஜித் மத்தும பண்டார அவர்களுக்கும், இவ்வேலைத்திட்டத்தின் கீழ் வெற்றி பெற்ற மொனராகலை பிரதேச செயலகத்திற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார அவர்கள் அரச சேவையின் வளர்ச்சிக்கு பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

இதற்கு முன்னர் அரசாங்கமொன்றினால் அரச சேவையின் கீழ் மட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்காத அதிகளவான நிதித்தொகையினை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாம் ஒதுக்கி உள்ளோம். கம்பெரலிய, கிராம சக்தி, என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா, வீதிகளை நிர்மாணித்தல், வீடுகளை நிர்மாணித்தல் போன்ற பல வேலைத்திட்டங்கள் இன்று கீழ் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சகல அரச நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு பாரியளவிலான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

நாட்டுக்கு கிடைக்கின்ற முதலீடுகளை அதிகரிப்பதற்கும், நாட்டின் உற்பத்தி ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். கீழ் மட்டத்தினை விருத்தி செய்வது, உலக சந்தைக்குள் நுழைதல் ஆகிய இரு செயற்றிட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வது எமது நிர்வாக துறையின் பிரதான நோக்கமாகும்.    

எமது நிர்வாகச் சேவையானது காலனித்துவ ஆட்சிக்காலத்தில் உலகளவில் பிரசித்தி பெற்றிருந்தது. அன்றைய இலங்கையின் சிவில் சேவையாளரான லெனாட் வுல்ப் தொடர்பில் இங்கிலாந்தில் வெளியான கட்டுரையொன்றை வாசிப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் நிர்வாகப்பிரிவினைப் போன்று இலக்கியத்துறையிலும் திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரியாவார். அவ்வாறான அதிகாரிகள் எமது அரச சேவையில் இன்றும் உள்ளனர். அத்திறமைகளில் இருந்து நாம் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் முன்னோக்கிச் சென்றால் எமது பயணத்தினை யாராலும் தடுக்க முடியாது என்பதை இறுதியாக கூறிக் கொள்கின்றேன்.'

இந்த நிகழ்வில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, உள்ளக அலுவல்கள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றம் உற்பத்தித்திறன் விருதுகளினை பெறும் நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.