த தே கூ இன் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு! - சட்டமுதுமாணி ஹமீட்

த தே கூ இன் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு!
==============================
வை எல் எஸ் ஹமீட்

ஐயா,

முஸ்லிம்களை சற்றும் கண்டுகொள்ளாது கல்முனையைக்கூறுபோடும் உங்கள் முயற்சியையும் இந்த விடயத்தில் உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் பேசுகின்ற, அறிக்கையிடுகின்ற உரிமைக் கோசங்களையும், நியாயங்களையும் பார்த்தபின்பு, முஸ்லிம்களின் உரிமைகளில்  நீங்களோ, உங்களைச் சார்ந்தவர்களோ கொஞ்சம் தலையிட்டுவிட்டால்போதும், முஸ்லிம்கள் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும்  த தே கூ உடன் பேச வேண்டும், பேசித்தீர்க்க வேண்டும், என்று அதற்கு என்றுமே தீர்வு இல்லாமல் இழுத்தடிக்கின்ற ( முஸ்லிம்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்வுவர விடுவீர்களா ஐயா? அல்லது எப்போதாவது அப்படி விட்டுக்கொடுத்திருக்கிறீர்களா?) எங்கள் தலைவர்கள் என்பவர்களின் கூற்றுக்களையும் கேட்டபின்பு, இறுதியாக கல்முனைப் பிரச்சினையைத் தீர்க்க ஏதோ எல்லை மீள்நிர்ணயம் செய்யவேண்டுமாம், ( யாரின் எல்லையை யார் மீள்நிர்ணயம் செய்வது ) சகோதரக்கட்சியான உங்களுடன் பேசவேண்டுமாம்; என்று எங்கள் பெருந்தலைவர்கள் சொன்னதையெல்லாம் அவதானித்ததன்பின்பு இதனை தங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்தேன், ஐயா?

ஐயா, ஒரு சிறிய சந்தேகம். நீங்கள் சகோதரக்கட்சியாம்,? உங்களுடன் கல்முனை விடயம் தொடர்பாக பேசவேண்டுமாம்; என்று எம்பெருந்தலைவர்கள் கூறுகின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் சகோதரக் கட்சியென்றால் அவர்களும்  உங்களுக்கு சகோதர கட்சிதானே ஐயா! அப்படியானால் கல்முனையைக் கூறுபோட நீங்கள் பிரதமரைச் சந்தித்தபோது, அதற்கு பட்ஜட்டை ஆயுதமாக பயன்படுத்த முயன்றபோது நீங்கள் அந்த சகோதரக் கட்சியுடன் பேசவேண்டும்; என்று நினைக்கவே இல்லையே ஐயா? சிலவேளை அவர்கள்தான் உங்களைத் தவறுதலாக சகோதரக்கட்சி என்று நினைத்திருப்பார்களோ! இது வெறும் சந்தேகம்தான் ஐயா?

சரி விடயத்திற்கு வருவோம் ஐயா?

உங்கள் போராளிகள் பேரினவாதத்திற்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். பேரினவாதத்திற்கெதிராக தூக்கிய ஆயுதத்தை முஸ்லிம்களுக்கெதிராகவும் திருப்பினார்களே! ஏன் ஐயா? ஒரு புறம் அடக்குமுறையில் இருந்து விடுபட தூக்கிய ஆயுதம் இன்னுமொரு சமூகத்தை அடக்கியாள முற்பட்டதுதானே ஐயா அது? அது சரியா ஐயா?

உங்கள் போராளிகள் யுத்தம் செய்தார்கள். யுத்தத்தில் அத்துமீறல் என்பது இயல்பானதுதான். ஆனாலும் அந்த அத்துமீறலில் ஈடுபட்ட ஆயுதப்படையினரைத் தண்டிக்க வேண்டுமென்று ஐ நா வரை போராடுகிறீர்கள். அது உங்கள் உரிமை. அதனைக் குறைகூறவில்லை. ஆனால் நாங்கள் உங்களுடன் எந்த யுத்தமும் செய்யாமல் எங்கள் சகோதரர்களை கொன்றுகுவித்தார்களே ஐயா! பள்ளிவாசலில் இறைவனைத் தொழுவதைக்கூட பொருட்படுத்தாது சுட்டுத்தள்ளினார்களே ஐயா! அதையும் தாங்கிக்கொண்டோமே! ஐ நா போனோமா? ஐ நா எங்கே இருக்கின்றது; என்றே எங்களுக்குத் தெரியாது ஐயா?

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் எங்கள் சகோதரக்கட்சி. நாளை, முஸ்லீம்கள் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமை இல்லையென்று நீங்கள் சொன்னால்கூட, “இல்லை, நாங்களும் மனிதர்கள்தான், காற்று எல்லோருக்கும் பொதுவானது. எங்களுக்கும் சுவாசிக்கும் உரிமை உள்ளது” என்று சொல்வோம்; என நினைக்கிறீர்களா? இல்லை ஐயா, சொல்லமாட்டோம்.

முஸ்லீம்களே! சுவாசிப்பதை நிறுத்துங்கள். எங்கள் சகோதரக் கட்சியான த தே கூ உடன் பேசிவிட்டுத்தான் முடிவெடுக்கவேண்டும்; என்று சொல்வோமையா? இடையில் யாரும் மரணித்தால் என்னசெய்வது? எனக் கேட்கிறீர்களா? ஐயா, உங்களைத் திருப்திப்படுத்துவதைவிட எமது சமூகம் முக்கியமா, ஐயா? அப்படி நாங்கள் நினைத்திருந்தால் எங்கள் முட்டில் தங்கியிருக்கின்ற இந்த அரசிடம் சட்டவிரோத பி செயலகத்தை மூடச்சொல்லியிருக்க மாட்டோமா? 1987ம் ஆண்டு இருந்ததுபோல் கல்முனையை நான்காகப் பிரிக்கச் சொல்லியிருக்க மாட்டோமா? என்ன ஐயா புரியாமல் பேசுகிறீர்கள்!

ஐயா, முஸ்லிம்களும் தமிழர்களும்  ஒரே அரசாங்கத்தாலேயே ஆளப்படுகின்றோம். ஒரே மொழியையே பேசுகின்றோம். உங்களுக்கு இருக்கின்ற எல்லாப்பிரச்சினைகளும் எங்களுக்கும் இருக்கின்றன.

உங்களுக்கு இருப்பதைவிட மேலதிகமாகவும்,  எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன, ஐயா! எங்களுக்கு வட கிழக்கிற்கு வெளியே கடைகளைப் பூட்டிவிட்டு வந்தால் அடுத்தநாள் காலையில் திறப்பதற்கு கடையிருக்குமா? சாம்பல் இருக்குமா? என்று தெரியாத நிலை! பள்ளிவாசலில் இரவுத்தொழுகை முடித்துவிட்டுவந்து அதிகாலைத் தொழுகைக்கு செல்லும்போது எத்தனை கண்ணாடிகள் உடைந்திருக்கும் என்று தெரியாத நிலை!எந்தக் கிராமத்திற்கு எப்பொழுது தீ வைப்பார்கள் என்று தெரியாத நிலை! இவ்வாறு ஒவ்வொரு நாளுமே வாழ்க்கை எங்களுக்குப் போராட்டம் ஐயா!

நீங்கள் செறிவாக வாழ்வதால் உங்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் இல்லை. இருந்தாலும் ஒரு அரசினால்கூட நீங்கள் ஆளப்பட ஆயத்தமில்லை. அதனால் உங்களை ஆள்வதற்கு அதிகாரமும் மத்திய அரசு தலையிடமுடியாத அளவு சமஷ்டியும் தருவதற்கு நகல்யாப்பே வெளியிட்டுவிட்டார்கள். இது நடந்தால் நீங்கள் தனி அரசு ஐயா! இந்த அரசை இந்தளவு தூரம் கொண்டுவந்த உங்களைப் பாராட்டித்தான் ஆகவேண்டும் ஐயா!

அதேநேரம் எங்கள் நிலையைப் பார்த்தீர்களா? நாங்கள் எட்டு அரசால் ஆளப்படப் போகின்றோம். அதுவும் சமஷ்டி அரசு.  இது நடந்தால் நாங்கள் எத்தனை திகனைகளை, எத்தனை அளுத்கமைகளை சந்திக்க வேண்டிவருமோ தெரியாது.

நாங்கள் கொண்டுவந்த பிரதமர். எங்களது தயவில் ஆட்சிசெய்யும் பிரதமர் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்தும் திகனயில் ஐந்து நாட்கள் அடிபட்டோம் ஐயா! அதற்காக நாங்கள் அனாதைகள் இல்லை. எங்களுக்கு சக்திவாய்ந்த அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அடிவிழும்போது வந்தி சுத்திப்பார்த்தார்கள் ஐயா, நன்றாக அடிவிழுந்திருக்கிறதா? என்று. ஆனாலும் அவர்களால் அடியை நிறுத்ததான் முடியவில்லை.

எங்களுக்கு எட்டு அரசாங்கம், சில மாகாணங்களில் எங்களுக்கு அங்கத்தவர்களே கிடைக்காது ஐயா! எங்கள் நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

அதாவது, உங்களுக்கு ஆளுவதற்கு அதிகாரம். எங்களுக்கு ஆளப்படுவதற்கும் அடிவாங்குவதற்கும் அதிகாரம். அதற்காக, கவலைப்படாதீர்கள் ஐயா? எங்களுக்கு என்ன நடந்தாலும் உங்கள் அபிலாஷைகளுக்கு குறுக்கே நாம் நிற்கமாட்டோம். அண்மையில் ஜனாதிபதியைக் கட்சித் தலைவர்கள் சந்தித்தபோது ஜனாதிபதிமுறைமை, தேர்தல் முறைமை பற்றி பின்னர் பார்க்கலாம், முதலில் அதிகாரப்பகிர்வை வழங்குங்கள்; என்று நாமே சொன்னோம். அதுதான் ஐயா எங்களுக்கு உங்கள் மீதுள்ள அக்கறை.

ஐயா, வட கிழக்கு இணைப்புத் தொடர்பாக ஒரு “க்” கன்னா வைத்து நகல்யாப்பில் எழுதப்பட்டுள்ளது. வட கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதும் உடன்பட மாட்டோம்; என்று எப்போதாவது சொல்லியிருக்கிறோமா? ஏனெனில் உங்கள் அபிலாஷைகளுக்கு நாம் குறுக்கே நிற்க மாட்டோம் ஐயா? அதற்காகத்தான் இணைப்பு, சர்வஜனவாக்கெடுப்பு, தனியலகு என்று எத்தனையோ வார்த்தை ஜாலம் காட்டுகிறோம். ஐயா, கிழக்கில் 1/3 பங்குதான் நீங்கள் இருந்தாலும் நீங்கள் ஆளப்படும் சமூகமாக இருக்கக்கூடாது. நீங்கள் ஆளுவதற்காக எட்டுமாகாணங்களில் எங்கள் மக்களைப் பலிகொடுக்கத்துணிந்த நாங்கள் உங்கள் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்போமா ஐயா?

ஐயா, கிழக்குத் தனியாக இருக்கிறது; என, வைத்துக் கொள்வோம். நாங்களோ, நீங்களோ தனியாக ஆளமுடியாது. கூட்டாட்சிதான். உங்களுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சிசெய்து எங்களின் பிரச்சினை எதையாவது தீர்க்கமுடியுமா ஐயா! எங்களுக்குப் பிரச்சினை தருவதே நீங்கள்தானே!

ஒரு தமிழர்கூட வாழாமல் நூற்றுவீதம் முஸ்லிம்கள் வாழும் வீதிக்கு நாங்கள் என்ன பெயர் வைத்தால் உங்களுக்கு என்ன ஐயா? உங்களுடைய யாருக்காவது அந்தத்தெருவில் கடிதம் ஏதும் வருமா? ஆனால் அதையே தடுக்கறீர்களே! உங்களுடன் கூட்டாட்சி செய்தோம் முஸ்லிம் முதலமைச்சருடன். அந்தவீதியின் பெயரையாவது மாற்றமுடிந்ததா?

உங்களுடன் கூட்டாட்சி நாடாத்தி ஒரு தெருவுக்கு பெயரே வைக்கமுடியாத எங்களுக்கு இந்த அதிகாரப்பகிர்வினால் என்ன ஐயா பிரயோசனம்? ஆனாலும் உங்கள் அபிலாஷை முக்கியம் ஐயா?

மட்டக்களப்பில் புலிகள் கைப்பற்றிய முஸ்லிம்களுடைய சுமார் 15000 ஏக்கர் காணியை இன்னும் உங்களவர்கள் அனுபவிக்கிறார்களே! அடுத்தவன் சொத்தை அபகரித்து அனுபவிப்பது நியாயமா?

உங்கள் பறிக்கப்பட்ட காணிகளுக்காக எவ்வளவு போராடுகிறீர்கள். எங்கள் காணியை கொடுத்துவிடுங்கள் என்றாவது ஒரு அறிக்கை விட்டிருக்கிறீர்களா? மாகாணசபைக்கு அதிகாரம் தந்தால் கூட்டாட்சி அதை மீட்டுவிடுமா? எதற்கு ஐயா எங்களுக்கு அதிகாரப்பகிர்வு? ஆனாலும் உங்கள் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்கமாட்டோம் ஐயா!

ஐயா, உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு எங்களது உயிர், உடல், பொருள் அனைத்தையும்விட முக்கியமானது எங்கள் மார்க்கம். எங்கள் மார்க்கம் எங்கள் பெண்களை கண்ணியமாக உடுத்தச் சொல்கிறது. எங்கள் பெண்கள் கௌரமாக எதை உடுத்தால் உங்களுக்கு என்ன ஐயா? ஆனால் மனித உரிமை ஆணைக்குழு கூறியபின்னும் கல்வியமைச்சு உத்தரவு அனுப்பவில்லை.

எங்கள் தலைவர்கள் அதை ஏன் என்று கேட்கவுமில்லை. கேட்கவுமாட்டார்கள். அது நீங்கள் சம்பந்தப்படுகின்ற விடயமல்லவா! கல்வியமைச்சும் நீங்கள் கூறுவதைத்தானே கேட்கும். மத்தியில் நீங்கள் ஆளும்கட்சி, நாங்கள் எதிர்க்கட்சி. ( மாற்றிச்சொல்கிறேனா? இல்லை ஐயா, யதார்த்தத்தை சொல்கிறேன் ) உங்களைமீறி எதுவும் நடக்குமா? இப்படி கிழக்கில் உங்களுடன் எங்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள். மாகாணத்தில் கூட்டாட்சியில் இவைகளைத் தீர்க்க விடுவீர்களா? எங்களுக்கு எதற்கையா அதிகாரப்பகிர்வு? ஆனாலும் உங்கள் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்கமாட்டோமையா?

கல்முனை விடயம்
————————-
ஐயா, இலங்கையில் எல்லா நகரங்களிலும் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள், வர்த்தகம் செய்கின்றார்கள். அதற்காக அவை முஸ்லிம்களின் நகரம் என்றுமுடியுமா? கொழும்பைக் கூறமுடிமா? கண்டியைக் கூறமுடியுமா? காலியைக் கூறமுடியுமா? யாழ்ப்பாண நகரத்திலும் முஸ்லிம்கள் வர்த்தகம் செய்கிறார்கள். அதற்காக யாழ்ப்பாணத்தை முஸ்லிம்களின் நகரம் எனக்கூற முடியுமா?

முஸ்லிம்களுக்கிருக்கின்ற ஒரேயொரு பழம்பெரும் நகரம் “கல்முனைதான்” ஐயா! அதனால்தான் அன்று முஸ்லிம் தலைவர்கள் அனைத்து அரச அலுவலகங்களையும் கல்முனையில் அமைத்தார்கள். இல்லையெனில் கல்முனைக்குடியில் அமைத்திருப்பார்கள்.

இன்று கரையோர மாவட்டத் தலைநகரையும் கல்முனையில்தான் கேட்கிறார்கள். கல்முனையில் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள்; என்பதை மறுக்கவில்லை; ஐயா! நீங்கள் வயதில் மூத்தவர். வரலாற்றைப் படித்திருப்பீர்கள். முஸ்லிம்களின் தாய்ப்பரம்பரையும் முக்குவர்தான் ஐயா!

கல்முனை மாநகரத்தின் 90% சொத்துக்கள் முஸ்லிம்களுடையது. சில முக்குவத்தாய்ப் பரம்பரையைச் சேர்ந்தோர் அங்கு வாழ்கின்றார்கள்; என்பதற்காக மொத்த நகரத்தையும் கபளீகரம் செய்ய முற்படுகிறீர்களே! இது நியாயமா ஐயா? அது உங்கள் உரிமையாம் என்று உங்களவர் உரிமைக்கோசம் எழுப்புகிறார்.

எண்பதுகளில் ஆயுதம் தூக்கமுன் இவைகள் உங்கள் உரிமைகளாகத் தெரியவில்லையா ஐயா? என்ன ஐயா உரிமை பேசுகிறீர்கள். 1987ம் ஆண்டுவரை கல்முனை நான்கு உள்ளூராட்சிப் பிரிவுகாளாக இருந்தவரை உங்கள் உரிமை நினைவிற்கு வரவில்லையா ஐயா? இப்பொழுது அதே நான்காகப் பிரிக்கப்போகும்போது மட்டும் உரிமைக் கோசமா ஐயா? எங்களை பேரினவாதம் ஒரு புறம் நசுக்க, மறுபுறம் நீங்கள் உங்களுக்கு நியாயம் கேட்டுப் போராடிக்கொண்டு அடுத்த சமூகத்திற்கு அநியாயம் செய்யவிளைகிறீர்களே! நியாயமா ஐயா? ஆனாலும் நாங்கள் உங்கள் அநியாயங்களுக்கு ( ஐயா- அதை உங்கள் அபிலாஷைகள் என்றுதான் எங்கள் சமூகத்திடம் கூறுவோம், அதை நீங்கள் கண்டுகொள்ளக்  கூடாது) குறுக்கே நிற்கமாட்டோம் ஐயா!

நீங்கள் எங்கள் சகோதரக்கட்சி, எல்லாவற்றையும் உங்களுடன் பேசித்தான் தீர்க்க வேண்டும்; என்றுதான் கூறுவோம். அதற்காக நீங்கள் எங்களைச் சகோதரக்கட்சியாக பாவிக்கத்தேவையுமில்லை. எங்களுடன் பேசித்தான் எங்களுக்கு நீங்கள் அநியாயம் செய்யவேண்டும்; என்பதுமில்லை. எங்களுடன் பேசாமலே நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்யலாம். ஆனாலும் என்றும் நாம் உங்களுக்காகாக.

பின் குறிப்பு

ஐயா, எங்கள் மண்ணிலும் புரட்சி வெடிக்கலாம். நாங்கள் தூக்கி வீசப்படலாம். முஸ்லிம்களுக்காக நெஞ்சுயர்த்திப்பேச புதிய தலைவர்கள் உருவாகலாம். ஐயா, அப்பொழுது எங்கள் பொழைப்பு மாத்திரமல்ல, உங்கள் பொழைப்பும் கெட்டுப்போகலாம்.

கல்முனை நான்காகப் பிரியலாம். உங்கள் ( சட்டவிரோத) தமிழ் பிரதேச செயலகம் இழுத்து மூடப்படலாம். சமஷ்டி காற்றில் பறக்கலாம். கோரளைப்பற்று கிராமசேவகர் பிரிவுப் பிரச்சினையில் உங்கள் பிடி தளரலாம், முஸ்லிம்களுக்கெதிரான உங்கள் நவீன மறைமுக அடக்குமுறை தகர்த்தெறியப்படலாம். ஆனாலும் அதற்கு அவ்வளவு இலகுவில் விட்டுவிடமாட்டோம் ஐயா! எங்களுக்குத் தெரியாத உத்திகளா? இருந்தாலும் ஒரு தகவலுக்காக சொல்லிவைக்கிறோம் ஐயா!

வங்காள விரிகுடாக்கடலில் மொத்தமாக எம்மவர்களைத் தள்ள ஒரு பொருத்தமான இடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதற்குமாத்திரம் ஓர் சிறிய உதவி செய்யுங்கள ஐயா!்
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here