கிழக்கு ஆசியாவில் கூடுதலான தொகையை கல்விக்காக ஒதுக்கியுள்ளேன்
- தெஹிவளை பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் பிரதி அமைச்சர் மஹ்ரூப்

( ஐ.ஏ. காதிர் கான், அஷ்ரப் ஏ. சமத் )

   பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த நிதியிலிருந்து 23 வீதமான நிதியை, கல்வித்துறைக்காகவே ஒதுக்கியுள்ளேன். கிழக்கு ஆசியாவில் ஆகக்கூடுதலான தொகையை கல்விக்காக ஒதுக்கிய அரசியல்வாதி நான் என்பதையும் இங்கு மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்  என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.  
நமது மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப்  பெற்று,  தொழிலின்றி  வீடுகளிலேயே  முடங்கிக்  கிடக்கும் நிலைமைக்கு மாற்றமாக,  தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சிறப்பான முறையில்  தொழிற்துறைகளை  மேற்கொண்டு வருவது, தனியார் பல்கலைக்கழகங்களின் தேவைகளையும் சிறப்புத்தன்மைகளையும் உணர்த்தி நிற்கின்றன என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
தெஹிவளையைத் தலைமையகமாகக்  கொண்டு இயங்கி வரும்  (ChsMc & IWA Campus) பல்கலைக்கழகத்தின்  இரண்டாவது பட்டமளிப்பு விழா,  (17 ) சனிக்கிழமை மாலை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப ஜெஸ்மின் அரங்கில், டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக் தலைமையில் இடம்பெற்றது. 
   இச்சிறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு பிரதி அமைச்சர் உரை நிகழ்த்தினார்.  
   பிரதி அமைச்சர் மேலும் இங்கு பேசும்போது  கூறியதாவது, மாணவர்கள் கற்றுவிட்டு வீடுகளில் உறங்கிக்கிடப்பது  பாரிய 
மன அழுத்தங்களை அவர்களுக்கு ஏற்படுத்தும்.  இந்த நிலைமையைத்  தனியார் பல்கலைக்கழகங்கள் ஓரளவு நிவர்த்திக்கின்றன. சித்த ஆயுர்வேதம் மற்றும் பல்வேறுபட்ட  துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு, மத்திய கிழக்கு நாடுகளில் சிறந்த தொழில் வாய்ப்புக்களும் கிராக்கிகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில்  IWA Campus நிறுவனம் தனது பணியை மிகச்  சிறப்பாகச்  செய்து வருவதாகவே நான்  உணர்கின்றேன் . இந்தப்  பல்கலைக்கழகத்தின் நிறுவுனர்களான டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக், டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை ஆகியோரின் கல்விப் பணிகளையும் இங்கு  பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு நாட்டின் வருமானத்தில் ஆறு சத வீதத்தையாவது கல்வித்தேவையின் நிதியாக ஒதுக்க வேண்டும் என்பதே சர்வதேச நியமமாகும் . அந்த விதிமுறையை நமது இலங்கை பின்பற்றுகின்றதா...?  என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.  பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தேர்வில் சித்தியடையும் குறிப்பிட்ட  சிறு தொகையினரை விட, எஞ்சியோர் தொழில் இன்றி அலையும் நிலை இலங்கையில்  மாறவேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றவர்கள்,  தற்போது நாட்டின் தேவைகளையும் கல்விச்சமூகத்தின் எதிர்பார்ப்புக்களையும்,  அண்மைக்காலமாக நிறைவேற்றி வருவது கண்கூடு. 
அது மாத்திரமன்றி,  நாட்டின் பொருளாதாரத்தில் அவர்கள் பங்காளர்களாக ஆகியுள்ளதுடன்,  அந்நிய செலாவணியைக்  கொண்டுவருவதிலும் முக்கியமானவர்களாக  மாறி வருவது  பெரு மகிழ்ச்சி தருகின்றது என்றார். 
    இந்தப்  பட்டமளிப்பு விழாவில்,  அதிதிகளாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி , பேராசிரியர் எம்
எஸ் எம் ஜலால்தீன்,  முன்னாள்   மாகாண சபை உறுப்பினர் ஜமீல் , முன்னாள்  நீதிபதி கலாநிதி அப்துல் கபூர், மாலைதீவு பேராசிரியர் முஸ்தாக் உட்பட கல்விமான்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். 
பல்கலைக்கழகத்தின் பொதுப்பதிவாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை இங்கு  வரவேற்புரையை நிகழ்த்தினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.