பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொன்னபடியே ராணுவ வீரர்  அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்.இந்திய ஆங்கிலச் சேனல்களைப் பார்க்கும் போது 2009 இல் இலங்கை ஊடகங்களின் போர் வெற்றிக் கோலங்கள் அப்படியே ஞாபகத்தில் வருகின்றன.' மாவீரர் வந்தார், மண்டியிடாத வீரர் வந்தார்' என்கிறார்கள்.எது ஃபேக், எது நிஜம் என்று குழப்பும் அளவுக்கு ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களும் வார்த்தை ஜாலங்களால் முலாம் பூசி ராஜாதந்திரப் படு தோல்வியை பட்டர் தோசைக்குள் மறைக்கின்றன.

வெறும் கிரிக்கட் வீரராய் இருந்து 1996 இல் கட்சி தொடங்கி அடுத்த வருடம் நடந்த தேர்தலில் டொபொசிட்டே இல்லாமல் தோற்று ஐந்து வருடத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெறும் ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்று ஆரம்பத்தில் ஆதரித்த பர்வேஸ் முஷாரஃபால் சிறைக்கு அனுப்பப்பட்டு போராடி மீண்டு எதிர்க்கட்சித் தலைவராகி கடந்த ஜுலையில் நடந்த தேர்தலில் வென்று பிரதமரானது வரை இந்த இருபத்திரண்டு வருடத்தில் அதிகாரத்தின் அத்தனை சூட்சுமங்களையும் விஷமத்தனங்களையும் மீறல்களையும் பார்த்துவிட்டார் இம்ரான் கான்.

இம்ரான்கான் இருக்கும் இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால் இத்தனை சிறப்பான காய் நகர்த்தல்களைப் பாகிஸ்தான் செய்தே இருக்காது.அதன் இத்தனை வருட சரித்திரத்தில் இது ஒரு அபூர்வ நிகழ்ச்சி.'மகாத்மா காந்தியாலேயே கட்டுப்படுத்த முடியாமல் போன இந்துத்துவா தலைவர்களுடன் அகண்ட இந்தியாவுக்குள் இனி சேர்ந்து வாழவே முடியாது ' என்று அப்போதே துல்லியமாய்க் கணித்த ஜின்னா பாகிஸ்தான் பிரிவினையைக் கோரி அது உருவாகி ஜின்னா எதிர்பார்த்த தேசமாய் பாகிஸ்தான் மலராமல் சொதப்பி எழுபத்திரண்டு ஆண்டுகளாகின்றன.ஸ்பேர் பார்ட்ஸாக காஷ்மீர் நெருக்கடி காதுக்குள் குடைய இந்திய ஆட்சியாளர்கள் போலவே பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் அரசியல் செய்ய ' காஷ்மீர் நல்லதொரு மட்டன் பிரியாணி'. ஆட்சிக்கு வந்ததும் ' காஷ்மீரை மீட்போம் ' என்று தேர்தல் மேடைகளில் அடித்துவிடுவார்கள்.யார் அதிகம் புலம்புவார்களோ அவர்களுக்கு ஆட்சி கிடைக்கும்.

ஆனால் இம்ரான்கான் இந்த சடங்குகளை மாற்றினார்.ஆட்சிக்கு வந்த நாள் முதல் உள்நாட்டில் இருக்கும் மத அடிப்படைவாதிகள் முதல் அயல் நாட்டு மோடிவரை அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.மோடியுடன் பேச பல தடவை பிரயத்தனம் செய்தார்.பாகிஸ்தானின் பஞ்சாப்பில் இருக்கும் சீக்கியர்களின் புனிதத்தலத்திற்கு வீசா இன்றி யாத்திரை வர இந்திய சீக்கியர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.சவூதி உடன் ஒட்டி உறவாடிக் கொண்டே சவூதியுடன் முரண்பட்டு நிற்கும் துருக்கிக்கும் லைக் போட்டார்..இப்படி எல்லாமே டொனி கிரேக் பாஷையில் ' எக்ஸலண்ட் ஷொட் ' தான்...

மொத்தத்தில் தனது நாடு, அபிவிருத்தி என்று இருக்கிறார்.மஹாதீர் மொஹமட் இன் மலேஷியா போல பாகிஸ்தான் மாற வேண்டும் என்கிறார் .ஆனால் என்ன பலன்? மோடிக்கு தேர்தலில் வெல்ல பாகிஸ்தான் தேவைப்படுகிறது..நாம் சரியான பாதையில் வாகனம் ஓட்டிக் கொண்டு செல்கையில் எவனோ ஒரு கம்னாட்டி வன் வே இல் வந்து மோதினால் என்ன நடக்குமோ அதுவே இம்ரான்கான் விசயத்தில் நடந்து முடிந்து இருக்கிறது.

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.