நியூசிலந்தில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்திய ஆடவர் சட்டத்திலிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று அந்நாட்டின் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் உறுதியளித்துள்ளார்.

இனி அந்த ஆடவரின் பெயரை உச்சரிக்கப்போவதில்லை என்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிவயப்பட்டு அவர் பேசினார்.

அவுஸ்திரேலியரான அந்த 28 வயது ஆடவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவானது. ஆனால் அவர் மீது மற்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகும் என்று பிரதமர் ஆர்டன் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

நியூசிலந்தின் துப்பாக்கி உரிமச் சட்டங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். அவருக்கு ஆதரவளிக்கப் போவதாக ஆளும் கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சியைச் சேர்ந்த துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறினார்.

முதலில் துப்பாக்கி உரிமச் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்று கூறியவர் தற்போது அது அவசியமாவதாகக் குறிப்பிட்டார்.

கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர். 32 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் அரபு மொழியில் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறியே ஆர்டன் தனது உரையை ஆரம்பித்தார்.

'பயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக்கூட விரும்பவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எம்.பிக்கள் பணியாற்றுவார்கள். சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும். அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று அவர் கூறினார்.

தாக்குதலின்போது உயிரிழந்த ஒருவரைப் பற்றி ஆர்டன் குறிப்பிட்டுப் பேசினார். 71 வயது ஹட்டி முகம்மது தவுத் நபி, பள்ளிவாசலின் கதவைத் திறந்தபோது துப்பாக்கிதாரியை வந்தனம் கூறி வரவேற்றதாகவும் அதுவே அவரது கடைசி வார்த்தைகளாக இருந்ததாகவும் ஆர்டன் தெரிவித்தார்.

'நுழைவாயிலுக்கு வெளியே அவருக்காகக் காத்திருந்த ஆபத்தைப் பற்றி அவர் அப்போது அறியவில்லை. ஆயினும் அவர் கொடுத்த வரவேற்பு, அவரது சமூகத்தின் பரந்த மனப்பான்மையையும் பரிவையும் காட்டியது' என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

தாக்குதல்தாரியான பிரன்டன் டெர்ரன்ட் தம்மை வெள்ளையின மேலதிக்கவாதியாக அறிவித்துக் கொண்டவராவார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.