பொதுஜன பெரமுனவே முழுப் பொறுப்பு

ஒன்பது மாகாண சபைகள் மற்றும் 341 உள்ளூராட்சி சபைகளின் கீழ் பணிபுரியும் 5 1/2 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான முழுப் பொறுப்பை பொதுஜன பெரமுனவே ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த நிலையினால் பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கும் அவர்களுடன் தொடர்புள்ள மாகாண சபைகளுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த மார்ச் 28ம் திகதி உள்நாட்டலுவல்கள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் உள்துறை அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதியொதுக்கீடு என்பன தோற்கடிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு முரணாகவே இந்த நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடையச் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்துறை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் நிதியொதுக்கீடு நிறைவேற்றப்பட்டன.

குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம் உள்ளிட்ட மாவட்ட செயலகம் ஆகியவற்றின் நிதி ஒதுகீடுகளும் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவசர வாக்களிப்பை கோரியதால் ஒன்பது மாகாணங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றிற்கு ஏப்ரல் 05ம் திகதிக்கு பின்னர் முடிவுறுத்தப்பட்டிருந்த சம்பள முற்பணம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலமான இச்சந்தர்ப்பத்தில் அரச சேவையிலுள்ள சுமார் 5 1/2 இலட்சம் பேருக்கு சம்பளம் மட்டும் கொடுப்பனவுகளை வழங்குவது சிக்கலாகியுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியினரே இதற்கு வழிவகித்துள்ளனர்.

அதனையடுத்து மேற்படி நிதியொதுக்கீடுகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக செயற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனால் பொது ஜனபெரமுன அங்கத்தவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளும் மாகாண சபைகளும் தான் பாதிப்புக்குள்ளாகும்.

இதனால் பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி நிலையை சரிசெய்து குறித்த நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்ற ஆதரவு வழங்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் அதிகாரத்திலுள்ள மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் சீர் குலைந்துவிடும். அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்கவேண்டும்.

வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு நிதி ஒதுக்கீடு தோல்வியுறச் செய்யப்பட்டபோதும் அரசாங்கங்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

இம்முறை டிசம்பர் மாதம் அல்லாது தமிழ், சிங்கள புதுவருட காலத்தில் இவ்வாறு இடம்பெறுவதால் பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது.

இதனால் பல மாதங்களுக்கு அப்பாவி அரச ஊழியர்களுக்கே சம்பளம் இல்லாமல் போய்விடும்.

இதனை சரிசெய்யும் பொறுப்பு பொதுஜன பெரமுன அங்கத்தவர்களுக்கு உரியது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.