போதையற்ற சமூகத்திற்காக...! கவிதை - லுதுபியா லுக்மான்ஓ  இளைஞனே!
அலைகடலாக துள்ளித் திரிந்தாய்
மழலை மொழி பேசி
கொஞ்சித் திரிந்தாய்!
அள்ளிக் கொண்டார்கள் அனைவரும் உன்னை
 அனைத்துக் கொண்டார்கள்...
நீ புகழ் பெற்று வருவாய்..
பலதும் கற்று உணர்வாய்..
பெற்றோர் உள்ளங்களை குளிரச் செய்து
மற்றோரால் மதிக்கப்  பெறுவாய் என்ற எண்ணத்தில்...

காலத்தால் கால் தடுக்கி விழுந்தாயோ.!
உன் வேகத்தால்
பாதை மாறிச் சென்றாயோ.!
போதைப் புதைகுழிக்குள் புதையுண்டு போக முன்
புரியவில்லையோ..
உனக்கான பாதையினை
யாரும் உணர்த்தவில்லையோ...
நீ உணர்ந்திருந்தால் ஆகி இருக்கலாம் மேதை..
ஏறி இருக்கலாம் பல மேடை!

ஆழ்கடலின் ஆழதிற்கே
சென்றுவிட்டாய்!!
பசுமையான உன் வாழ்வை
பாழாக்கிவிட்டாய்!

வெண்மையாய் வெளிரிக்கிடந்த உன் வாழ்வை
கருமை கொண்டு கரைத்து ஊற்றி
இருள் மயமாக்கிவிட்டாய்!
அருமை பெருமையறியாமல்
பொறுமை இழந்து
வறுமைப்பட்டு விட்டாய்!!

உனக்கு ஒரு காலம் வரும்..
உனக்கு ஒரு காலம் வரும்!!

நீ எழுவாய்..
பயனில்லை..
அழுவாய்..
துணையில்லை..
செயல்படுவாய்..
உணர்வில்லை..
கதறிக் கதறி அழுது
கண்ணீரெல்லாம்  செந்நீராய் மாறி
கண்ணங்கள் சிவந்த போதும்
கட்டியணைத்துக் கொள்ள உறவில்லை..

நீ ஊராரின்
செல்லப்பிள்ளை தான்!
அது ஒரு காலத்தில்..
அது அந்த அழகிய காலத்தில்..
இன்றோ  நீ
செல்லாத பிள்ளை
சொல் கேட்காத பிள்ளை
சிரித்தாலும் புன்னகைக்கவும் யாரும் இல்லாத பிள்ளை!!

உணர்வதானால் இன்றே
உயிர் பெற்று எழு!
உடல் மட்டும் ஒன்டியாய்
உணர்விழந்து இருக்கும் போது
உள்ளத்தில் உரைத்து பயனேது!

நீ எழுந்து வா..
மெய்ப்படுவாய்!
துணிந்த்து வா..
சமூகதால் போற்றப்படுவாய் !
போதையற்ற உறவுகளை
தவமாய் பெற்றெடுக்க
இன்றே மாற்றத்தை நோக்கி
மனிதனாய் மாறிவா!!

                      🖊லுதுபியா லுக்மான்🖊
Share:

No comments:

Post a Comment