மஹரகம புற்று நோய் மருத்துமனைக்கு நிதி சேகரித்தல் - அரசியல் வேர்ஷன்


ஓர் அவசர தேவைக்காய் கொஞ்சம் நூறு கோடி சில்லறை தேவை... எனக்கு ஒரு சதமும் தேவை இல்லை.., மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் உயிருக்காய்ப் போராடுபவர்களில் உங்களது மாயஜால பொய்வித்தைகளில் மயங்கி வோட்டுப் போட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் சர்வ நிச்சயமாய் இருக்கின்றன.

ஏற்கனவே பணம் சேகரித்தீர்கள் தானே??? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஒரே ஒரு டெண்டரில் குபரேனாகிவிடுகிறீர்கள்.அதன் பின்னர் கொள்ளையடிக்காமல் இருப்பதில்லையே.உங்களது ஒத்துழைப்பே இல்லாமல் தானே சென்ற தடவை பணம் திரட்டிக் கொடுத்தோம்.

இத்தனை பெரியளவில் பெரும் அல்லோலகல்லோலத்துடன் நிதி சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஆனால் நீங்கள் அத்தனை பேரும் எந்தவித பேதமும் இன்றி வாய் மூடிக் கொண்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை.என்ன கூந்தலுக்கு கவர்மெண்டும் ஹெல்த் மினிஸ்ட்ரியும் என்று காரித் துப்புகிறது ஒரு கூட்டம்.வரிகட்டும் மக்கள் பரோபகாரிகளாய் எப்போதும் இருந்தும் தொலைக்க வேண்டுமா?பணம் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.மத்திய வங்கியில் அழுக்கு இருப்பதாகக் கூறி நீங்கள் சுத்தம் செய்த போது ஒரு லட்சம் கோடி ரூபா அளவில் காணாமல் போனது உலகத்திற்கே தெரிந்த ரகசியம்.இதைச் சொல்லும் போது எதிர்க்கட்சி சிரிக்கலாம்.கே.பியைக் கேட்க வேண்டும்.கே.பி பிடிபட்ட போது கே.பி இடம் இருந்ததாகக் கூறப்படும் பதினேழு கப்பல்கள்,பல்லாயிரம் டொன் தங்கம் உட்பட அசையும் அசையாச் சொத்தக்களுக்கு என்ன நடந்தது? நாங்கள் உங்கள் இரு சாராரிடமும் கேட்கிறோமா ?இல்லை விட்டுவிட்டோம்.கேட்பதால் எந்தப் புண்ணியமும் இல்லை.

நாங்கள் சேகரித்தோம் தான்... ஓரிரு லட்சங்களை அல்ல இறைவன் அருளால் 20 கோடிகளை சேகரித்தோம்... எம் சொந்தங்கள் "பெட் ஸ்கேன் மெஷின்" வாங்குவதற்கு  சொந்த தேவைக்காய் திரட்டுவதை போல் சேகரித்து தந்தனர்.அதில் இன்றுவரை மாதத்திற்கு 100 பேர் வரை பரிசோதிக்கப்படுகின்றனர்... வினாடிக்கு வினாடி மாற்றமடையும் புற்று நோயின் இயல்பு நிலையை அவதானிக்க முடிகிறது... இது அப்பாவி ஏழை மக்களுக்கு ஆறுதலாய் அமைகிறது .உங்களுக்கு லேசாய் இருமலும் மூன்று தடவை தொடர்ச்சியாய் தும்மலும் வந்தால் எமிரேட்ஸ் இல் first class டிக்கட் போட்டுக் கொண்டு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குப் போய்ப் படுத்துக் கொள்வீர்கள்.உங்களுக்குத் தெரியுமா மலேஷியா பிரதமர் மஹாதீர் மொஹமட் ஒரு தடவை கடுமையாய் சுகயீனமுற்ற போது தரம்மிக்க சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் இற்குப் போகுமாறு ஆலோசனை சொன்னார்கள் அவரது உதவியாளர்கள்.ஆனால் மஹாதீர் அதை மறுத்துவிட்டார்."மலேஷியா நாட்டின் நிர்வாகத்தின் அச்சாணியான நானே சிங்கப்பூருக்கு ஓடினால் என் தேசத்தின் மருத்துவர்களுக்கு இதைவிட பெரிய அவமானம் ஏது?எங்கள் மருத்துவர்களை இனி யார் மதிப்பார்கள் "என்று கேட்டு மலேஷியாவிலேயே சிகிச்சை செய்து கொண்டார்.கொள்ளைக் கூட்டம் உங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது?

நாம் நிதி திரட்டிப் பெற்ற பெட் ஸ்கேன் இயந்திரத்திற்கு புற்று நோயை மட்டுமே கண்டுபிடிக்க முடியும்...புற்று நோயை அழிக்க நிறைய இயந்திரங்கள் உலகில் உருவாக்கப்பட்டுவிட்டன...
Tomo-Therapy & Linear Accelerators என்பன அவ்வாறான மருத்துவ உபகரணங்களில் இரண்டாகும்...
ஆனால் அவை மிகவும் விலைமிக்கவை...
இந்த முயற்சி அந்த இரண்டு இயந்திரங்களையும் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்று கொடுப்பதேயாகும்...

• அதற்காய் செலவாகும் பணம் 100 கோடிகள்...
• இன்று பகல் வரை அந்த புண்ணிய செயலுக்காய் 123 லட்சங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன...
• இன்னும் 9877 லட்சங்கள் தேவைப்படுகிறது...

பெரிய தொகை என்று கருதுகிறீர்களா???
பகல்/இரவு கொளளையர்களே!... இல்லை அடுத்தவர்களை எய்த்துப் பிழைக்கும் இதயங்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடொன்றின் மந்திரிகளான உங்களுக்கு சிறிய தொகை..எந்தளவுக்கு என்றால் உங்களில் யாராவது ஒருவரால் இப்போதே இதை செட்டில் செய்ய முடியும்.அல்லது ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நூறு பேர் சேர்ந்து ஆளுக்கு ஐம்பதாயிரம் யூரோவை குறித்த வங்கி இலக்கத்திற்கு ட்ரான்ஸர் செய்தாலே போதும் இத்தொகையை சேகரித்துக்கொள்ளலாம்...இந்த முயற்சி உங்களின் பாவங்களின் வேகத்தை குறைப்பதற்கே.

ஏனென்றால் நீங்கள் அசட்டையாய் இருக்கும்  ஒவ்வொரு வினாடியும் ஒரு வாக்காளரையும் அவர் குடும்பங்களையும் இழக்க நேரிடலாம்...ஒரு அடிமட்டத் தொண்டனை இழக்க நேரிடலாம்... உங்கள் ஈனத்தனம் வெளியே தெரிந்தால் இனி உங்களுக்காய் போஸ்டர் ஒட்ட ஆள் கிடைக்காமல் போகலாம்.வாருங்கள்... ஆக மொத்தத்தில் நீங்கள் செய்யப் போகும் உதவி உங்கள் பாவத்திற்கான சம்பளம்.

 இது செருப்பில்லாமல் திரிந்தவர்களை எல்லாம் அரசியலில் பல பில்லியன்களை சுருட்டிக் கொள்ள வழிசமைத்த நாடாகும்.

இது ஆட்சிமாற்றத்திற்காக மந்திரிகளை ஐம்பது அறுபது கோடிகளில் ஏலம் எடுக்கும் நாடாகும்.

இது, நூறு ரூபா ப்ரஜக்டை ரெண்டு ரூபாவில் செய்துவிட்டு தொண்ணொற்று எட்டு ரூபாவுக்கு ஆட்டையைப் போடும் நாடாகும்.

மத்தியவங்கியின் கருவூலத்திற்கே சவால்விடக் கூடியளவுக்கு மொத்த செல்வமும் உங்களிடமே கொட்டிக் கிடக்கிறது.தயவு செய்து யாராவது இந்த அக்கவுண்ட் நம்பரில் அந்த நூறு கோடியைக் கட்டித் தொலைத்துவிடுங்கள்.

Account Name : APEKSHA CANCER HOSPITAL
Bank of Ceylon, Maharagama
Account Number 71275069

(Zafar Ahmed)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.