இலங்கையில் சுற்றும் இலுமினாட்டி குரூப்

கடைசியாக கறுப்பு ஞாயிறு கொடூரத்திற்கு ஐ எஸ் பயங்கரவாதிகள் உரிமை கோரிவிட்டார்கள்.இலங்கை தீவிரவாத ஸஹ்ரான் குழுவும் இதனுடன் சம்பந்தம் என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.கொன்று வீசப்பட்ட என் நாட்டின் மக்களுக்கு அந்தக் காவாலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று தெரியாது.செத்துப் போனதாய் சொல்லப்படும் தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் என்ற மனப் பிறழ்வு கொண்டவன் வாய்க்கு வந்ததை எல்லாம் கடந்த மூன்று வருடங்களாக அடித்துவிட்ட போது கூட இங்கே ஒருவரும் அந்த மனித குல விரோதியின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்க முனையவே இல்லை.எத்தனை இனவாதப் பக்கங்களை ரிப்போர்ட் செய்து இருக்கிறோம்.

ஏன் இந்த கிராக்கை ரிப்போர்ட் செய்ய யாரும் துணியவில்லை.கடைசியில் மூளைச் சலவை செய்யுமளவுக்கு பேசித் தீர்த்து ஓய்ந்து போனான் ராஸ்கல்.நமது ஜும்மா மிம்பர் மேடைகளில் கூட சம்பந்தமில்லாதவைகளை பேசினார்கள்.இப்படி சமூகத்தில் வளர்ந்து கொண்டு இருந்த அனகொண்டாவைப் பற்றி யாரும் பேசவில்லை.இந்த விடயத்தில் யாருக்கும் கை நீட்ட முடியாது.நாம் அனைவரும் குற்றவாளிகள்.

குவிக்கப்பட்டுக் கிடக்கும் பிண மலையைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிக் குற்ற உணர்வாய் இருக்கிறது.

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சேர்ச் பள்ளியில் நடந்த தாக்குதலுக்குப் பலிவாங்க இந்தக் காட்டு மாடுகள் தேர்ந்தெடுத்த இடம் உலகத்திலேயே மிகக் கோமாளித்தனமான ஆட்சி நடந்து கொண்டு இருந்த நமது தேசம்."இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று தெரியும்.ஆனால் இந்த லெவலில் நடக்கும் என்று தெரியாது"என்று பாதுகாப்புச் செயலாளர் சொல்கிறார் என்றால் இந்த ஆட்சியின் சீரழிவின் ஆழ அகலங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.பிரான்ஸில் ஐ எஸ் குண்டு வைத்தது.ஐரோப்பா நகரங்கள் இலக்காகின.ஆனால் அங்கே எல்லாம் ஒரேயடியில் கண் சிமிட்ட முன் நடந்து முடிந்தன.இப்படிப் புலனாய்வுப் பிரிவு ஆறேழு தடவை எச்சரிக்கை விடுத்து அதை பிரதமரோ ஜனாதிபதியோ அமைச்சர்களோ தெரியாது என்று சொன்ன லூசுத்தனங்கள் எல்லாம் நடக்கவில்லை.இங்கே மக்களைப் பற்றிய சிறிதும் கரிசனை இல்லாத ஆட்சியாளர்கள் கோமாவில் இருந்தார்கள்.

இந்த ஒட்டுமொத்த பயங்கரத்தின் ஜன்னல்கள் திறக்கத் தொடங்கிவிட்ட போதிலும் சிலர் இதை இன்னும் ஜீரணிக்கவில்லை.பதட்டத்தோடு மறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இது வேறு யாரோ சதி என்ற வசனம் காதுகளில் தேனாய்ப் பாய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.என்ன பண்றது.. நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.

இதெல்லாம் இப்படி இருக்க ஒரு இலுமினாட்டி க்ரூப் இங்கே சுற்றுகிறது. பாரிசாலன் கூட்டம்."இலங்கையில் எரிவாயு இருக்கிறதாம்.அதை எடுக்க சீனா ஒப்பந்தம் போட்டதாம்.இடையில் பிரான்ஸ் புகுந்ததாம்".நடுவே லா லா என்று அமெரிக்கா எல்லாம் வருகிறது.கடைசியில் எல்லோரும் மோதலாம்.ஒரு புனைவை எப்படி எழுதுவது என்று நீ முதலில் படி.அதற்கு நீ நிறைய வாசிக்க வேண்டும்.

ஆகவே எம் தேசத்தின் ஆன்மாவின் மேல் தொடுக்கப்பட்ட இந்தத் கறைக்கு காரணமான இரத்த விலாங்குகள் யார் என்று நிரூபணமாகிவிட்டது.இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்த ஒரு துண்டுச் சீலையும் தடை செய்யப்பட வேண்டும்.நாம் மீள வேண்டும்.மனிதத்தை நேசிப்பவர்கள் எதற்கும் தயங்காமல் யாருமே இல்லாத ஹைவே இல் விரைவது போல எழுதுங்கள்.மத தீவிரவாதிகளுக்கு எதிரான  உங்களது அச்ச விலங்கு அறுந்து தொங்கட்டும்.உங்களது அடுத்த வீட்டுக்காரரோ வீட்டு ஓனரோ மாற்று மதத்தவராய் இருந்தால் தைரியமாய்ப் போய் பேசுங்கள்.பலகாரங்களைப் பரிமாறுங்கள்.ஆபிசில் சகஜமாய் இருங்கள்.நீங்கள் தமிழில் எழுதிய தேச ஒற்றுமைப் பதிவுகளை மொழிபெயர்த்துச் சொல்லுங்கள்.படிப்படியாய் மீள்வோம்.

- Zafar Ahmed -
Share:

No comments:

Post a Comment