விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்


தவறினால் மக்களுடன் இணைந்து போராடுவோம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை விரைவில் சுமுகப்படுத்துவதற்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்ளைக் கைதுசெய்வதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராயர் கர்தினால் ​மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஆண்டகை, தவறும் பட்சத்தில் அரசாங்கத்தின் மந்தமான செயற்பாட்டுக்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதிக்கு இறங்கத் தயங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். சட்டத்தைத் தாம் கையில் எடுக்க வழிவகுக்க வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தம் செய்வதும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை பலப்படுத்துவதும் அவசியமெனவும் பேராயர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் மக்கள் இன்னும் அச்சத்திலேயே உள்ளனர். அரசியல் துறையிலும் பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிலும் தகவல்கள் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதை காட்டவில்லை.

கட்சி, நிறம் ஏனைய பேதங்களைக் கடந்து தற்போது நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி, பிரதமர்இ எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் கூட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொது கொள்கையொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். தேர்தலை ஒருபுறம் வைத்துவிட்டு திட்டமிட்ட ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் அமைப்பு ரீதியாக உள்ளதாக தெரியவில்லை. தகவல்கள் கிடைத்தவுடன் சென்று குறித்த இடத்தில் சோதனைகளை நடத்துவதே தற்போது இடம்பெற்று வருகிறது. சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய பல பிரதேசங்கள் உள்ளன. அங்கு முறையான சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆயுதங்கள் வாள்கள், கத்திகள் போன்றவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும்.

கைதானோரை விடுவிப்பதற்கு முன்பதாக அவர்களிடம் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். சிலவேளைகளில் அவர்களே உண்மையமான குற்றவாளிகளாக இருந்து அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு வாய்ப்புகளுண்டு.

அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து தற்போதைய நிலைமையை முறையாக செயற்படுவது அவசியமாகும். துறைசார்ந்தோரின் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்கள் கொண்டாடும் விசேட பண்டிகைகள் பல எதிர்வரும் மாதங்களில் உள்ளன. அச்சமயத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் அமைதியை நிலைநாட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே நோக்குடன் செயற்படுவது அவசியமாகும்.

ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் அவர்கள் அமர்வுகளை நடத்தினார்களா, சம்பந்தபட்ட குழுவில் உள்ளோர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்பது தொடர்பில் எம்மால் அறியமுடியவில்லை. பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டுமுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அரச நிறுவனங்கள் இதற்கான வேலைத்திட்டங்களை அமைத்து நடைமுறைப்படுத்துவது நல்லது.

முஸ்லிம் மக்களுக்கு எத்தகைய பாதிப்பையும் கத்தோலிக்க மக்கள் ஏற்படுத்தப் போவதில்லை. இதனை நாம் முஸ்லிம் சமூகத்துக்கு உறுதியாக சொல்லமுடியும். நாட்டின் பாதுகாப்பானது நாட்டின் அரசியலைவிட முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
Share:

No comments:

Post a Comment