யாழ். பல்கலைகழக ஊடக கற்கைகள் பிரிவு தனித்துறையாக தரமுயர்வு!யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டப்பபடிப்பு அலகாக இயங்கி வந்த ஊடகக் கற்கைகள், தனித் துறையாக உயர்கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. 

ஊடகக் கற்கைகள் துறையானது, ஆங்கில மொழி கற்பித்தல் துறையுடன் இணைந்து தரமுயர்த்தப்பட்டிருக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலானது, கடந்த மாதம் 27ஆம் திகதி நகரத் திட்டமிடல், நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டிருந்தது. 

இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடத்தின் கீழ் 17ஆவது புதிய துறையாக ஆங்கில மொழி கற்பித்தல் துறையும், 18ஆவது துறையாக ஊடகக் கற்கைகள் துறையும் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஊடகக் கற்கைகள் துறையின் இணைப்பாளராக கலாநிதி. சி. ரகுராமும் அவருடன் இணைந்து மூன்று நிரந்தர விரிவுரையாளர்களும் தற்போது அங்கு பணியாற்றி வருகின்றனர்.இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழியில் ஊடகக் கற்கைகளை இத்துறையே வழங்கி வருவதும், ஊடகக் கற்கைகளில் பட்டப்படிப்பு மாத்திரமல்லாது ஊடகத்துறையில் முதுதத்துவமாணி, கலாநிதிப் பட்ட ஆய்வுகளுக்கும் யாழ். பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கள் பீடத்தின் வழியாக தற்போது வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு ஊடகக் கற்கைகளில் தொழில்சார் பயிற்சிகள் கொழும்பை மையமாகக் கொண்ட தேசிய ஊடக நிறுவனங்களிலும் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி ஊடக நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருவதானது ஓர் முன்னுதாரணமான செயற்பாடாக ஊடகத்துறை சார் நிபுணர்களால் பாராட்டுப் பெற்றுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.  

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here