பவர் கட்டின் போது பெரு நகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச சேதாரத்துடன் வாழ்வது எப்படி

பவர் கட்டின் போது பெரு நகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச சேதாரத்துடன் வாழ்வது எப்படி


பவர் கட் நிகழும் பகல் வேலைகளில் ஆபிஸ்களுக்குச் செல்லும் வர்க்கத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை.ஆனால் வேலை வெட்டி இல்லாதோர்,நைட் ஷிப்ட் முடிந்து வீடு வருபவர்கள் அல்லது போக இருப்பவர்கள்,பேரன் பேத்திகளை ஸ்கூலுக்கு கூட்டி வருவதையும் போவதையும் பெரும் பேறாய் கருதி வாழும் அறுபது தாண்டியவர்களின் நிலை தான் பெரும் அல்லோலகல்லோலமாய் கிடக்கிறது.இவர்களின் செத்த எலித்தனமான வியர்வை நாற்றத்தை இவர்களே நுகராமல் இந்த மூன்றாம் உலக நாட்டில் வாழ்வியல் முறையை மாற்றிக் கொள்வது எப்படி

பாதிக்கப்படும் நபர் கல்கிஸ்ஸ என்று வைப்போம்.முதலில் பெரு அங்காடிகள்,வர்த்தக நிறுவனங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று தெளிவு இருக்க வேண்டும்.ஏனென்றால் அங்கே எல்லாம் கண்டிப்பாய் ஜெனரேட்டர் உண்டு.மேலும் பவர் கட் இன் எல்லைகள் எதுவரை வியாபித்து இருக்கின்றன என்றும் தெரிந்து இருந்தால் உத்தமம்.இனி என்ன.பொடி நடையாய் உடனே வீட்டை விட்டு வெளியேறி கல்கிஸ்ஸ ஓடியன் தியேட்டரிற்கு முன்னால் இருக்கும் நோலிமிட்டுக்குள் புகுந்து விட வேண்டும்.kids section இல் இருந்து பெண்கள் பகுதி வரை உற்சாக உலா வரலாம்.வெள்ளவத்தை லிட்டில் ஏசியாவில் மாதிரி யாராவது பிரகிருதி அடிக்கடி பின்னால் வந்து " என்ன சார் வேண்டும் ?" என்று கேட்கமாட்டார்.ஆக,கட்டற்ற சுதந்திரம் தரணியில் உண்டு.வேண்டும் என்றால் ஏதாவது ஒரு டெனிமைக் காட்டி " இதை வாஷின் மெஷினில் கழுவலாமா? சாயம் போகுமா ?" என்று கேட்டுவிட்டு பீ.எச்.டீ ரிசேர்ச் செய்கிற அளவுக்கு மைல் கணக்கில் யோசிப்பது போல பாவனை செய்யலாம்.பின்னர் வீம்பாய் " இந்த டிசைன் நமக்கு ஒத்து வராது தெஹிவலை ஜங்ஷன் கிளையில் புது ப்ராண்ட் இருக்கிறதா?"  என்று கேட்க வேண்டும்.அவர்கள் நிச்சயம் " இருக்கலாம் " என்பார்கள்.சரி இனிப் போய்விட வேண்டும்.இந்தக் களேபரங்களில் ஒரு நாற்பத்தைந்து நிமிடம் போய் இருக்கும்.

அப்படியே நிழலான இடமாய்ப் பார்த்து ஒதுங்கி நடந்தாலோ அல்லது பைக்கில் விர்ரென்றாலோ டயலொக் ஆபிஸ் இரண்டு நிமிஷத்தில் வந்து விடும்.அங்கே போய் திரும்ப ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.நோ லிமிட்டில் ஆடை பார்த்தது போல இங்கே எஸ்கேப்பாக முடியாது.நிச்சயமாய் எதற்கு வந்தீர் என்று கேட்பார்கள்.டோக்கன் எடுத்துக் கொண்டு இரவு நேர பேருந்தில் உட்காருவது போல சொகுசாய் உட்கார்ந்து நமது முறை வரும் வரை பவ்யமாய்க் காத்திருக்க வேண்டும்.முறை வந்ததும் போய் " டயலொக் டிஷ் டீ வி இல் என்ன என்ன தமிழ் சேனல் வருகிறது ?" என்ற எடுத்த எடுப்பில் கேட்க வேண்டும்.அவர்கள் சோற்றில் உப்பு போடுவது போல அளந்து நாலைந்து சேனல்கள் சொல்வார்கள்." இதோ பார் ! நான் சன் டிரக்ட் வைத்திருக்கிறேன்.கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் சேனல்களும் வருகிறது.எனக்கு என்ன பிரச்னை என்றால் லோக்கல் சேனல்களுக்கு அண்டனாவைக் கட்டிக் கொண்டு அழ வேண்டி இருக்கிறது.டயலொக்கில் லோக்கல் சேனல்களுடன் அத்தனை தமிழ் சேனல்கள்,ஸ்போர்ட்ஸ் சேனல்கள் உள்ள ஒரு பக்கேஜ் இருக்கிறதா ? " என்று கேட்க வேண்டும்.அப்படி ஒன்று இந்த அண்டசராசரத்தில் இல்லை என்று வெலவெலத்துப் போயிடுவான்.மகிழ்ச்சி.நாம் நடையைக் காட்டலாம்.

ஓ மறந்துவிட்டேன்.ஆர்பிகோ தாண்டி வந்துவிட்டேன். ஆர்பிக்கோவுக்குள் ஆர்ப்பாட்டமாய் நுழைந்ததும் பெட்ரூம் செட் விற்கும் செக்சனுக்குப் போய் விட வேண்டும்.கட்டிலில் உட்கார்ந்து பார்க்கலாம்." நல்ல தேக்கு தானா ?" என்று கேட்கலாம்.அப்படியே இறங்கி பர்பியும் செக்‌ஷனுக்குப் போய் ரெண்டு மூன்றை எடுத்து விசிறி மணத்தைப் பார்க்க வேண்டும். யாராவது சேல்ஸ்மேனைப் பிடித்து " இந்த CK ஒரிஜினல் இங்கே வராதா ?" என்று பந்தாவாய்க் கேட்க வேண்டும்.ஏதாவது ஒன்றைக் காட்டுவான்.அது ஒரிஜினல் இல்லை.ஒரிஜினல் 30K தாண்டும்.அங்கே விற்பனைக்கு இல்லை.அப்புறம் ? வெற்றிகரமாய் வெளியேற வேண்டியது தான்.

இப்போது இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் வேஸ்டாகி இருக்கும்.ஒரு சேஞ்சுக்கு வெள்ளவத்தை போகலாம்.இடையில் வீட்டுக்குப் போன் பண்ணி கரண்ட் வந்துவிட்டதா என்று கேட்கலாம்.இன்னும் ஒரு மணி நேரம் செல்லும் என்றால் வேறு வழி இல்லை.தமிழ் சங்கத்திற்குப் போய் பழைய குமுதம் விகடன் வாசிக்கலாம்.புத்தகம் எடுக்க உறுப்பினராக என்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்கலாம். தமிழ் சங்கத்திற்கு நடக்க சிரமப்படுபவர்கள் ஹமீடியாஸுக்குப் போய் ஒரு ரவுண்டு வந்துவிட்டு வரலாம்.இனி வீட்டுக்குப் போய்விடலாம். கரண்ட் வந்து இருக்கும்.

இங்கே சொல்லப்பட்ட இடங்கள் போல நிறைய இடங்கள் இடங்கள் கொழும்பில் இருக்கின்றன.அவற்றைப் பயன்படுத்துவது உங்கள் சாமார்த்தியத்தைப் பொருத்தது.

கொழும்புக்கு அல்லாத நகரங்களில் வசிப்பவர்களும் இப்படியான இடங்களைத் தேடிக் கொள்ள வேண்டும்.கிராமப் புறங்களில் இருப்பவர்களுக்கு " சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி,படுபடுவென போர்த்திய புல் வெளி" இருக்கிறது.

இலங்கை போன்ற உருப்படாத பாடாவதி தேசத்தில் அமையும் மக்கள் விரோத அரசுகள் பொதுமக்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க எதையும் செய்யாது.இந்த அனல் அடிக்கும் வெயிலில் கருமை நிற பவர் கட்டில் மகிழ்ச்சியை இப்படி நாம் உருவாக்கினால் தான் உண்டு.

(Zafar Ahmed)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here