அல்ஹஸனாத் தொடர்பாக வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கும் தெளிவு


 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக் கருதி நாடளாவிய ரீதியில் வீடுகள், நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதை சகலரும் அறிவர். பரிசோதிக்கப்பட்ட பல முஸ்லிம் வீடுகளின் வரவேற்பறையில் அல்ஹஸனாத் பிரதிகள் காணப்பட்டுள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் அல்ஹஸனாத் மாத இதழ் பற்றியும் பாதுகாப்புப் பிரிவினர் வினவியுள்ளனர். இது பற்றி அல்ஹஸனாத் வாசகர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
 
அல்ஹஸனாத் இதழை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் காரியாலயத்திற்கு வருகை தந்த பாதுகாப்புத் தரப்பினருக்கு எமது வெளியீடுகள் குறித்து நாம் விளக்கமளித்துள்ளதுடன் அல்ஹஸனாத் பிரதிகளையும் வழங்கி வைத்துள்ளோம். 
 
எனவே, நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் அல்ஹஸனாத் வாசகர்களுக்கு குறிப்பாகவும் அல்ஹஸனாத் வெளியீட்டுடன் தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

▪ அல்ஹஸனாத் 1970ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படுகின்ற ஒரு குடும்ப மாத இதழ்.
 
▪ இது இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானிப்படுத்தப் பட்டுள்ளது.
 
▪ கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கைத் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்க சேவைகள் சபையிலும் (National Library and Documentation Services Board, Ministry of Education Services) பதிவு செய்யப்பட்டுள்ள அல்ஹஸனாத், சர்வதேச நியம சஞ்சிகை இலக்கத்தையும் (ISSN- International Standard Serial Numbering) பெற்றுள்ளது. (ISSN NO: 1391- 460X)
 
▪ இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பத்திரிகைகளுக்கான பதிவைப் பெற்றுள்ள அல்ஹஸனாத், வருடாந்தம் அதனைப் புதுப்பித்தும் வருகிறது. (Registered as News Paper in GPO/QD/132/NEWS/2019)
 
▪ அல்ஹஸனாத்தை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் இலங்கை கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.
 
▪ அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அங்கீகாரப் பிரிவினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளையும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் பெற்றுள்ளனர்.
 
▪ இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தரவுப் பதிவேட்டில் எமது வெளியீடுகள் அனைத்தும் வருடாந்தம் இற்றைப்படுத்தப்பட்டு (Update) கோவைப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
நடுநிலைச் சிந்தனையை நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் வகையில் மார்க்க, சமூக, கலாசார, பண்பாட்டு அம்சங்களைச் உள்ளடக்கியதாக கடந்த 49 வருடங்களாக அல்ஹஸனாத் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இஸ்லாமிய குடும்ப இதழான அல்ஹஸனாத் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் அதன் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
 
தொடர்புகளுக்கு: 
0777874983
0773783810
0112689324
 
அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ்
ஆசிரியர்,
அல்ஹஸனாத்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.