மோட்டார் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹோர்ன்களையும் பல வர்ணங்களிலான மின் குமிழ்களையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தற்போது பாவனையிலுள்ள வாகனங்களிலிருந்து அவற்றை நீக்கிக் கொள்வதற்கு ஜூன் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை முதலாம் திகதி முதல் அவற்றை நீக்க முன்வராத வாகன சாரதி மற்றும் வாகன உரிமையாளருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.  

மோட்டார் போக்குவரத்து சட்ட விதிகளுக்கமைய விபத்தொன்று ஏற்படுவதனை தவிர்க்கும் முகமாகவோ அல்லது ஏதேனும் வாகனமொன்று முந்திச் செல்ல முற்படும்போது மட்டுமே ஹோர்ன் பயன்படுத்த முடியுமென்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் வாகனங்களுக்குள் எழுப்பப்படும் ஏனைய இரைச்சல் மிக்க சத்தங்கள் மற்றும் அதிக சத்தத்துடன் ஒலிபரப்புச் செய்யப்படும் பாடல்கள் தொடர்பிலும் ஜுலை முதலாம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் அவ்வாறான பொது வாகனங்கள் தொடர்பில் 0112433333என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

சத்தம் காரணமாக சூழலில் ஏற்படும் மாசு குறித்து அண்மையில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடலின்போது மனிதர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு வகையான சப்தங்களை வெளிப்படுத்தும் ஹோர்ன்களை பயன்படுத்துவோருக்கு எதிராக ஜூலை 01ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து சாரதிகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் 03மாத கால அவகாசம் வழங்கப்படுமென்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது-  

காதுகளுக்கு இரைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் மனிதர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஹோர்ன்களை பயன்படுத்துவோருக்கு எதிராக ஜூலை 01 ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்போது குறிப்பாக வாகன சாரதிக்கு மட்டுமன்றி வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும். அதனடிப்படையில் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் ஹோர்ன்களை பயன்படுத்துவோரிடமிருந்து மூவாயிரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.