VPN என்றால் என்ன?


இலங்கையில் சமூக ஊடகங்கள் மீது அண்மையில் தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடையால், பலர் ‘VPN’ செயலியை பயன்படுத்தத் தொடங்கினர்.
தடையைக் கடந்து, வேறு சேர்வர்கள் மூலம் தடைசெய்யப்பட்ட இணையம் சார்ந்த சேவைகளை பயன்படுத்த மேற்படி VPN சேவைகள்  வழியமைத்துக்கொடுத்தன.
Android மற்றும் IOS பாவனையாளர்கள் இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் VPN அப்ளிக்கேசன்களை தரவிறக்கம் செய்து தடைசெய்யப்பட்ட பேஸ்புக், வட்ஸெப் மற்றும் வைபர் போன்றவற்றை உபயோகித்த இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு லட்சத்து எண்பதாயிரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த சமூகவலையமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில் VPN மூலம் அவற்றை உபயோகித்த பாவனையாளர்கள் பெரும் ஆபத்தில் இருப்பதான விம்பமொன்று சில ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
VPN அப்ளிகேசனை பாவித்தவர்கள் தமது முக்கிய தகவல்களை பறிகொடுக்கும் ஆபத்து நிலவுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துறையில் நிபுணர் எனக்கூறப்படும் ஒருவரை மேற்கோள்காட்டியே இச்செய்தி இணையத்தில் வலம் வருகின்றது.
அசேல வைத்தியலங்கார, என்றழைக்கப்படும் நிபுணரை நாம் தொடர்பு கொண்ட வேளை இது தொடர்பில் சரியாக விளக்கமளிக்க அவர் தடுமாறியிருந்தமையை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது:
VPN என்றால் என்ன?
பாதுகாப்பாக மற்றும் கட்டுப்பாடுகளை மீறி இணையத்தை பயன்படுத்த வழியமைக்கும் ஒரு வசதியாக இதனை இலகுவாக விபரிக்கலாம்.
பெரும்பாலும் பாரிய நிறுவனங்கள் தமது தகவல் பரிமாற்றல் செயற்பாடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள இவற்றை பயன்படுத்தி வந்தன.
VPN என்றால் என்ன, இது எவ்வாறு பயன்படுகின்றது, இதனை எதற்காக பயன்படுத்தலாம் போன்ற அடிப்படையான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கின்றது இக்காணொளி.
இதன் குறிப்பிடத்தக்க நன்மைகள்:
• மேம்பட்ட பாதுகாப்பு
• பிறிதொரு இடத்திலிருந்து பாவிக்க முடிகின்றமை: குறிப்பாக நீங்கள் உங்கள் நிறுவனத் தரவுகளுக்குள் வேறொரு தூர இடத்தில் இருந்து நுழைய விரும்பினால் , இதற்கான வசதியை VPN அளிக்கின்றது.
• பாவனையாளரின் இரகசியத்தன்மையை பேணமுடிதல்
• தடைசெய்யப்பட்ட தளங்களை பார்வையிட முடிதல் மற்றும் பிள்டர்களை தவிர்த்தல்
• IP முகவரியை மாற்றிக்கொள்ள முடிகின்றமை
VPN பாவித்த ஒருவர் ஊடாக பேஸ்புக்கிற்குள் இலகுவில் நுழைய முடியும் என்றால், பேஸ்புக் அவ்வளவு பாதுகாப்பு குறைபாடுள்ள நிறுவனமா?
வங்கிக் கணக்குகளுக்குள் நுழைய முடியும் என்றால், SSL சான்றிதழ் பெற்ற இணையத்தளங்கள் எதற்காக இயங்குகின்றன.
மொபைல் பாவனையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை:
ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கென VPN வசதியை வழங்கும் பல அப்ளிகேசன்கள் உள்ளன.
குறிப்பாக Android இயங்குதள பாவனையாளர்கள் Google Play Store லும், அப்பிள் பாவனையாளர்கள் அப்பிள் பிளேஸ்டோரிலும்  (IOS) இதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலே விபரிக்கப்பட்டதைப் போல பல நன்மைகளை இவ் அப்ளிகேசன்கள் கொண்டுள்ளன.
சிலநாடுகளில் தடைசெய்யப்பட்ட முக்கிய இணையங்கள் மற்றும் சேவைகளை உபயோகிக்க VPN பெரிதும் உதவுகின்றது.
இதுதவிர மேலும் பல நன்மைகளை VPN அப்ளிகேசன்கள் மொபைல் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.
பீதியை கிளப்பிய போலிச் செய்திகள்
கடந்த இரண்டு நாட்களில் வௌிவந்த செய்திகளில் VPN பயன்படுத்தியோருக்கு பீதியைக் கிளப்பும் செய்திகள் வௌியிடப்பட்டிருந்தன.
குறியீட்டு தலைப்புகளாக
• 8 லட்சம் இலங்கையர் சிக்கலில்
• VPN  செயலியை பயன்படுத்திய 8 லட்சம் இலங்கையர்களுக்கு ஆபத்து
போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகளை வௌியிட்டிருந்தார்கள். இவை சோடிக்கப்பட்ட முட்டாள் தனமாக பொய்யான செய்திகளாகும்.
VPN தொடர்பில் அதிகளவில் 99% நன்மையே குறிப்பிடப்படுகின்ற போதிலும் ஆங்காங்கே சில எச்சரிக்கைகளும் இல்லாமல் இல்லை.
அதாவது எங்களது இணைய பாவனை விபரங்களை மூன்றாவது தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தல், இணையத்தின் வேகத்தை குறைத்தல் மற்றும் தரவுக்கசிவு போன்ற சில விவகாரங்களாகும்.
எனினும் அவை சில செய்திச் சேவைகள் தெரிவிக்கும் வகையில் பீதியடைய வேண்டியவை அல்ல.
பொதுவாக நாம் உபயோகிக்கும் உலாவிகள் (Browsers), சமூகவலைதளங்களே எமது தரவுகளை அறுவடை ‘Data Harvest’ செய்வதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை எமது பாவனை தொடர்பான தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நிலையில் VPN தொடர்பிலும் அத்தகைய குற்றச்சாட்டுக்களே உள்ளன.
மழுப்பலாக, போலி விளக்கம் கூறிய  ‘இலங்கை நிபுணர்’ ?
இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களால் பரவலாக மேற்கோள்காட்டப்பட்ட அசேலவிடம் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு வினவியிருந்தது.
இதற்கு பதிலளித்த அவர் நாம் மேலே சுட்டிக்காட்டியிருந்த , ‘Data Harvesting’
தொடர்பிலேயே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் Google Play Store மற்றும் Apple Store ல் இருக்கும் அனைத்து சேவைகளையும் நம்ப முடியாது என்று கூறிய போதிலும் கட்டணம் செலுத்தும் அப்ளிக்கேசன்களை நம்ப முடியும் என்ற தொனியில் மழுப்பலாக பதிலளித்திருந்தார்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம், எமது தமிழ் நியூஸ் செய்தி சேவையின் தாய் நிறுவனமான RELIANCE NETWORKS முற்று முழுதான பாதுகாப்பு பொறிமுறை சம்பந்தமான சேவை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
இலங்கையின் தரப்படுத்தலில் முதல் 100 ற்குள் அங்கம் வகிக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கு பல பாதுகாப்பு சேவைத் திட்டங்களை வழங்கிய நிறுவனமும் ஆகும்.
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக அசேல என்பவரிடம் எமது நிறுவனம் தொடர்பு கொண்டு அவரது கூற்று தொடர்பான தௌிவாக்கலுக்காக மிகத் துல்லியமான, தொழினுட்ப ரீதியான கேள்விகளை கேட்டிருந்தது.
அவ்வேளை, எமது நிறுவன பாதுகாப்பு நிபுணர்களின் துல்லியமான கேள்விகளுக்கு சரியான விடை கொடுக்க முடியாமல் குறிப்பிட்ட நிபுணர் தடுமாறியதும் பின்னர் அர்த்தமற்ற, பிழையான விளக்கங்களை கொடுக்க முயன்றதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. (பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு எம்மிடம் உண்டு)
ஆகவே இங்கே யாரோ ஒருவரை மேற்கோள்காட்டி முட்டாள்தனமாக ஒரு ஊடகம் வௌியிட்ட செய்தியை அப்படியே பிரதி செய்து அனைத்து ஊடகங்களும் வௌியிட்டது வெட்கக் கேடான செயல்.
குறிப்பிட்ட அந்த செய்தியை வௌியிட்டதன் ஊடாக மிகப் பெரிய தவறான ஒரு பொய்ச் செய்தியை முட்டாள் தனமான ஊடகங்கள் சமூகத்திற்கு திணிக்க முனைந்தது கூனிக்குறுக வேண்டிய செயற்பாடு.
எமது வாசகர்கள் கூகுள் தேடு தளத்தில் பல்வேறுபட்ட தேடு சொற்களைக் கொண்டு VPN ஆபத்தா இல்லையா என்பதை தேடிப்பார்த்தால், ஆபத்து இல்லை என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படை அறிவேனும் குறித்த கணினி நிபுணருக்கோ அல்லது அந்த செய்தியை பிரசுரித்த ஊடக நிறுவனங்களுக்கோ செய்தி ஆசிரியர்களுக்கோ தெரியாமல் போனது ஏன்?
அதிகமாக இலவச அப்ளிகேசன்களை வழங்கும் நிறுவனங்களே, கட்டணம் செலுத்தப்பட்ட அப்ளிகேசன்களையும் சற்று மேம்பட்ட வசதிகளுடன் வழங்கி வரும் நிலையில், அவரின் கூற்றுக்கமைய பார்க்கும்போது கட்டணம் செலுத்தப்பட்டவையை மட்டும் நாம் எவ்வாறு நம்பலாம் என்ற கேள்வி எழுகின்றமையை மறுக்கமுடியாது.
எனவே இது ஒரு சில ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஒரு செய்தியாகவே தெரியவருகின்றது.
VPN களால் 99% மும் நன்மைகளே உள்ளது. ஆகையால் பொய்ச் செய்திகளை நம்பி பயத்தில் உறைந்து அதிரடியாக செயலில் இறங்கவேண்டிய எவ்வித அவசியமும் இல்லை.
அத்துடன் உலகளாவிய ரீதியில் உள்ள இணைய வல்லுனர்களின் அறிவுரைக்கேற்ப உங்கள் கடவுச் சொற்களை காலத்திற்கு காலம் மாற்றியமைத்தாலே போதுமானது.n
எனவே இத்தகைய செய்திகள் தொடர்பில் ஒரு தடவைக்கு பல தடவைகள் தேடிப்பார்ப்பதே சாலச்சிறந்தது.
இந்த உண்மைச் செய்தி உங்கள் நண்பர்களுக்கும் சென்றடைய செய்யுங்கள்.
(SLTnews.com)
Share:

No comments:

Post a Comment