மஹாராஜாவால் முடியுமென்றால் ஏன் முஹம்மதுவால் முடியாது ? “சக்தி” ஊடகத்தை விமர்சிக்க எங்களுக்கு என்ன தகுதி உள்ளது ? 

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும்பொருட்டு சக்தி குடும்ப ஊடகங்கள் இனவாத கருத்துக்களை விதைப்பதாகவும், தமிழர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துகின்ற பல விடயங்களை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

அதாவது சிங்கள இனவாதிகளினால் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் அதனை மூடிமறைத்துவிட்டு, எங்கயோ ஓர் மூலையில் நடைபெற்ற சிறிய சம்பவம் போன்று சக்தி குடும்ப ஊடகங்கள் காண்பித்தன.

ஆனால் இன்று இராணுவத்தினர்களின் கெடுபிடிகளினால் முஸ்லிம்களின் வீடுகளில் இருந்து எடுக்கப்படுகின்ற சிறிய கத்திகளைக்கூட கனரக ஆயுதங்கள் போன்று பெரும் எடுப்பில் காண்பித்து முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் போன்று செய்தி வெளியிடப்படுகின்றது என்பதுதான் “சக்தி” ஊடகத்தின் மீதுள்ள குற்றச்சாட்டாகும்.

இங்கே நாங்கள் ஒரு விடயத்தினை சிந்திக்க வேண்டும். அதாவாது இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அவர்களது கடவுளின் பெயரில் சக்தி ஊடகம் ஸ்தாபிக்கப்பட்டது.

அது முழுக்க முழுக்க தமிழ் சமூகத்தின் நண்மையையும் தமிழர்களின் எதிர்கால அரசியல், இருப்பு, பாதுகாப்பு மற்றும் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளையும், நியாயங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் நோக்கில் தமிழர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஊடகம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அதனால் அவர்கள் தமிழர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறுதான் செய்திகளை காண்பிப்பார்கள்.

அத்துடன் தமிழர்களுக்கு சிறிய பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் அதனை பெரிதுபடுத்தி அனுதாபம் தேட முற்படுவதும் அவர்களது அரசியலாகும். இதனை யாராலும் கேள்விக்குற்படுத்த முடியாது.

அதுபோல் இன்று சர்வதேச ரீதியில் இயங்குகின்ற ஒவ்வொரு ஊடகங்களும் ஏதோ ஒருவகையில் தங்கள் இனத்துக்காகவும், தங்கள் மொழிக்காகவும், தங்கள் சமயத்துக்காகவும், இயங்குகின்றன.

அந்தவகையில் ராய்டர், CNN, BBC போன்ற சர்வதேச ஊடகங்கள் அமெரிக்க வல்லாதிக்கத்தை நியாயப்படுத்தி இஸ்லாமிய போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலும், தொடர்ந்து இஸ்லாமிய உலகை பிளவுபடுத்தி வைத்திருப்பதிலும் கவனமாக செயல்படுகின்றன.

அதுபோல் இலங்கையில் சக்தி போன்ற ஊடகங்கள் அவர்களது தமிழ் சமூகத்தின் குரலாக செயல்படுகின்றபோது, தங்களது சமூகத்துக்காக பேசவில்லை என்று முஸ்லிம் சமூகத்தினர் விமர்சிப்பது எந்தவகையில் நியாயமாகும் ?

ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தங்களது தனிப்பட்ட அரசியலை வளர்த்துக்கொள்வதற்காக பிரத்தியேக ஊடகங்களை வைத்துக்கொண்டு தமிழ் மொழியில் மாத்திரம் ஊடக செயல்பாடுகளை முன்னெடுக்க முடியுமென்றால்,

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்காக ஊடகத்தின் தேவை குறித்து யாராவது சிந்தித்தார்களா ?

இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளையும், அவர்களது நியாயங்களையும் சிங்கள மக்களும், சர்வதேசமும் விளங்கிக் கொள்ளும் பொருட்டு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் முஸ்லிம்களின் குரலாக செயல்படுகின்ற ஊடகம் ஒன்று இதுவரையில் ஸ்தாபிக்கப்படாதது ஏன் ?

எமது சமூகத்தில் எத்தனையோ பண முதலைகள், செல்வந்தர்கள் இருக்கும்போது, இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்கான ஊடகத்தின் தேவை குறித்து சிந்திக்காதது ஏன் ?

எனவே முஸ்லிம் சமூகம் இன்னுமொரு சமூகத்தின் ஊடகத்தை நம்பி இருக்காமல், சொந்தக்காலில் சமூகத்துக்காக மூன்று மொழிகளிலும் இயங்கக்கூடிய ஊடகத்தினை உருவாக்குவதுதான் கௌரவமும், தேவையுமாகும்.

அதைவிடுத்து தொடர்ந்து நாங்கள் சக்தி நிறுவனத்தினை விமர்சிப்பதில் எந்தப்பயனும் இல்லை.   

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.