ஒரு சமூகத்தை சேர்ந்த குழுவினர் ஆயுதப்போராட்டம் நடாத்துவதற்கு முன்பாக தனது சமூகத்தின் முழுமையான அங்கீகாரத்தினை பெறும்பொருட்டு பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வார்கள்.

இதற்காக அரசியல்துறையை ஏற்படுத்தி தாங்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறோம் என்றும், எமது எதிர்கால இலக்கு என்ன என்பது பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்துவார்கள்.

தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டத்தின் அவசியம் உணரப்பட்டபோது, தமிழ் அரசியல் கட்சிகளே முன்னின்று அதற்காக பிரச்சாரம் செய்தன. அதற்கு தமிழ் மக்கள் பூரண அதரவு வழங்கினார்கள்.

மக்கள் ஆணையை பெற்றபின்பே பல போராட்ட இயக்கங்கள் களத்தில் இறங்கின. அதில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக திறமையாக போரிட்டதற்காக விடுதலை புலிகளை அதிகமான தமிழ் மக்கள் ஆதரித்தார்கள்.

அப்போது வீட்டுக்கு வெளியே சமையலறை உள்ள தமிழர்களின் வீடுகளில் இரவில் படுக்கைக்கு செல்ல முன்பு போராளிகளுக்காக சமைத்து வைத்துவிட்டு தூங்கிவிடுவார்கள். அந்தளவுக்கு போராளிகள்மீது மக்களுக்கு அன்பு இருந்தது. எந்தவித இக்கட்டான நிலைமையிலும் போராளிகளை பாதுகாத்தார்களே தவிர, காட்டிக்கொடுக்கவில்லை. 

அதுபோல் உலகில் ஆயுத போராட்டம் நடாத்துகின்ற அனைத்து போராட்ட இயக்கங்களும் தாங்கள் சார்ந்த மக்களின் ஆதரவுடனேயே போர் செய்கிறார்கள். அவ்வாறு மக்களின் ஆதரவினை பெற்றால்தான் இயக்கத்துக்கு ஆட்கள் திரட்டுதல், நிதி வசூலித்தல் போன்ற செயல்பாடுகளுக்கு பலம் கிடைப்பதோடு, போராட்டம் இலக்கை அடையாதுவிட்டாலும் மக்கள் மனங்களில் அது நிலைத்திருக்கும்.

ஆனால் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடாத்திய குழுவினர் தாங்கள் என்ன நோக்கத்திற்காக இந்த தாக்குதலை நடாத்துகிறோம் ? தங்களது இலக்கு என்ன ? என்பது பற்றி தாங்கள் சார்ந்த முஸ்லிம் சமூகத்துக்கு தெளிவுபடுத்தவில்லை.

அதிலும் அவர்கள் தாக்குதல் நடாத்தியது அப்பாவி பொதுமக்கள் மீது என்பதனால் இதனை முஸ்லிம் மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தாது தங்களது இலக்கை வேறுபக்கம் திருப்பி இருப்பார்களேயானால் சிலநேரம் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு வேறுவகையாக இருந்திருக்கலாம்.   

அதாவது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் தங்களது போராட்டத்தின் நோக்கமும் இலக்கும் என்ன என்பது பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தியிருந்தால் இவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கும்.

நாங்கள் இன்னுமொரு விடயத்தினை ஆராய வேண்டும். அதாவது உலகையே திரும்பி பார்க்கவைத்த ஈஸ்டர் பண்டிகை தாக்குதலுக்கு முன்பு இவர்கள் ஒரு ஜனரஞ்சகமானவர்களாக இருக்கவில்லை.

அதாவது இவர்களை ஓர் சக்தி உள்ளவர்களாக யாரும் பார்க்கவில்லை. இவர்களின் தலைவர் மவுலவி சஹ்ரான் ஹாசிமி அவர்களின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தவில்லை. அரசியல்வாதிகளை போன்று சொல் வீரராகவே பார்க்கப்பட்டார். 

“நாங்கள் உங்களுக்கு பதிலடி தருவோம் என்றும், உங்களை திருப்பி தாக்கி அழிவை ஏற்படுத்துவோம்” என்றும் கடந்த வருடம் கண்டி திகனவில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய இன வன்முறைக்கு எதிராக மவுலவி சஹ்ரான் அவர்கள் தெரிவித்த கருத்தானது அப்போது ஓர் நகைச்சுவையாகவே பார்க்கப்பட்டது. 

ஆனால் ஈஸ்டர் பண்டிகை மனித வெடிகுண்டு தாக்குதளுக்கு பின்பு ஒரேநாளில் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசப்படுகின்ற நபராக உள்ளதனால், மவுலவி சஹ்ரானின் கடந்தகால உரையினை கேட்பதற்கு பலர் ஆர்வமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.   

எனவேதான் மனித வெடிகுண்டு தாக்குதல் நடாத்திய குழுவின் கொள்கை மற்றும் இலக்குகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தாததனாலும், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியதனாலும் அதாவது மக்கள் உணர்ச்சியூட்டப்படாததன் காரணமாக இவர்களையும், இவர்கள் சார்ந்தோரையும் அரச படைகளிடம் காட்டிக்கொடுப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.