நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் குலைந்துள்ள அமைதியை மீட்டெடுக்கும் செயற்றிட்டமொன்றினை முன்னெடுத்துச் செல்வதற்காக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மேல் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தலைமை அதிகாரி, பிரதம செயலாளர் மற்றும் பல்வேறுபட்ட திணைக்களங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட மாகாண சபையின் சிரேஷ்ர உத்தியோகத்தர்களுக்கு பத்திரமுல்லையிலுள்ள மேல் மாகாண சபையின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது இது தொடர்பாக ஆளுநரால் குறிப்பிடப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு நிலவரம் மற்றும் பாதீட்டு ஒதுக்கீடுகள் தொடர்பாக இந்த ஒன்றுகூடலில் ஆராயப்பட்டது.

இச் செயற்றிட்டமானது மாகாண மற்றும் பிரதேச ரீதியாகவும், பாடசாலைகளூடாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயம் எனவும் இத் திட்டமானது நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கான உந்தசக்தியாகவும் அமையுமென ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.
ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்த குறைபாடுகளைக் கேட்டதோடு, அவை விரைவில் நிவர்த்தியாக்கப்படும் எனவும் கூறினார்.

இதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது இக்கலவரங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களிற்கெதிராக செயற்படுத்தப்படுவதாக கூறினார். அவர்களுடைய உடமைகள், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றை சேதப்படுத்துகின்ற இச் செயற்பாடுகள் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது எனவும் குறிப்பிட்டார்.

அறியப்படாத குழுவொன்றினால் இச் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இவர்களிற்கு தகுந்த தண்டனை அரசால் வழங்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார். அத்துடன் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த நேரத்திலேயே இவ் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு பின்னால் அரசியற்தலைமைகள் இருப்பதாகவும், இக்கலவரங்களை மேற்கொள்வதற்காக வேறு பிரதேசங்களில் இருந்து ஆட்கள் அமர்த்தப்பட்டதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான சுனில் விஜயவர்த்தன குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.