கறுப்பு ஞாயிறுக்குப் பிறகான இந்தப் பத்து நாட்களில்.....

கறுப்பு ஞாயிறுக்குப் பிறகான இந்தப் பத்து நாட்களில்.....தென்மாகாணத்தில் பெரும்பான்மையின சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கல்யாண மண்டபத்தை சில வாரங்களுக்கு முன்பு திருமணத்திற்கு புக்கிங் செய்து இருக்கிறது முஸ்லிம் குடும்பம் ஒன்று... அவர்களைக் கூப்பிட்ட மண்டபத்தின் சொந்தக்காரர் " ஐயா ! இங்கே உங்கள் ஆட்கள் யார் யார் வரப் போகிறார்களோ யார் அறிவார்..எனக்கு பணமும் வேண்டாம் எதுவும் வேண்டாம்.அட்வான்ஸை திருப்பித் தருகிறேன்.பேசாமல் கிளம்பிக்கோங்க" என்று சொல்லி வணக்கம் போட்டு அனுப்பி இருக்கிறார்.....

வங்கிகளில் பணம் வைப்பு செய்யும் போது திகதியோ அக்கவுண்ட் நம்பரோ ஒரு இலக்கம் தவறினால் அதை வெட்டிவிட்டு சரியானதை எழுதி கையொப்பமிட சொல்வார்கள்.ஒரு வங்கியில் கிரெடிட்கார்டுக்குப் பணம் செலுத்தும் போது நான் எழுதிய ஒன்பது ,பூச்சியம் மாதிரி இருந்து இருக்க வேண்டும்.அதை சரியாய் எழுதச் சொல்லி கையொப்பமிட சொன்னது மட்டுமில்லாமல் ஐ டி கார்டையும் கேட்டார்கள்.இது புதுசு.குறித்த வங்கியின் பதின் மூன்று வருட வாடிக்கையாளர் நான்.இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை.

கொழும்பில் இப்போது வாடகைக்கு வீடுகள் எடுப்பதைப் போன்ற சவால் வேறு ஒன்றுமில்லை.யாரும் யாரையும் நம்ப முடியாத ஒரு அச்ச சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருப்பதால் எக்ஸ்ட்ராவாய் வீடு வைத்து இருப்பவர்கள் மூடிக் கொண்டு இருக்கவே விரும்புகிறார்கள்.ஏதாவது ஒரு அசாம்பாவிதம் நடந்தால் வீட்டு உரிமையாளரும் சேர்ந்து தான் கோர்ட் ,கேஸ் என்று இழுபட வேண்டி வரும் என்பதே இந்த அச்சத்திற்கு காரணம் " பன்சலைக்கு போகும் போது உடுக்கும் 'சில்ரெதி' வாங்குகிற அளவுக்கு துணிபவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள் இவர்களை நம்பி எப்படி வீட்டைக் கொடுப்பது ?"என்று காதுபடவே பேசுகிறார்களாம்.

மாற்றுமதத்தவர்கள் எப்படிப் போனாலும் முஸ்லிம்களே முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கத் தயங்குகிறார்கள்.வாடகை மூலம் கிடைக்கும் மேலதிக பணம் எதுவும் தேவை இல்லை.நிம்மதியாய் இருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

புறக்கோட்டையில் நடந்து கொண்டிருந்தேன்.எங்கேயோ இருந்து ஓடி வந்த சிங்கள அன்பர் ஒருவர் " எங்கடா போகிறாய்,பேக்கைக் காட்டு" என்றார்.அவரை எனக்கு ஏழு வருடங்களாய் தெரியும்.ரொம்ப நாளைக்குப் பிறகு என்னை சர்ப்ரைஸ் பண்ண இவர் பின்னால் இருந்து கத்துகிறாராம்.ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.ஏழெட்டுப் பேர் சுற்றி வேடிக்கை பார்த்தார்கள்.பேக்கை கழற்றி அவரிடம் கொடுத்து 'வா சோதனையிடுவோம் " என்றேன்.துணைக்கும் சாட்சிக்கும் நான்கு பேரைக் கூப்பிட தயாரானேன்." டேய் ஜோக்குடா ஏன் இப்படி டென்ஷனாகுறாய்" என்றார்.நடு பஜாரில் ஜோக்காம்.ஏசி விரட்டிவிட்டேன்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெரும்பாலான சிங்கள நண்பர்கள் மிகுந்த சோகத்துடன் துயரத்தைப் பகிர வார்த்தைகள் இன்றி இருக்கிறார்கள்.தமக்கு என்ன நடந்தது என்று இன்னும் ஒரு புதிராகவே அவர்களுக்கு இருக்கிறது.

எனது மாற்றுமத நண்பர்களுடன் இதுவரை ஆழமாய் விவாதிக்காத டாபிக்குகளில் முக்கியமானது இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் பற்றியது.இனி எப்போதுமே இதுபற்றி பேசவே முடியாது.சந்தோஷம்..

அத்தனை இழவிலும் ஒரு நன்மை என்ன என்றால் ஊரில் ஒரு கள்வன்,குடுகாரன் இப்போது இல்லை.

தனியார், அரச அலுவலகங்களில் வேலை செய்யும் முஸ்லிம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் கேள்விகளில் சில

' அடுத்து என்ன பளான்?'
 ' பேக்ல என்ன ? '
'உங்களது சமூகத்தில் என்ன பேசுகிறார்கள்?'
'நீ ஃபேஸ்புக்கில் தமிழில் என்ன எழுதுகிறாய் ?'

இப்படி.சிங்களமும் தெரியாமல் இருந்தால் அவ்வளவுதான்.யாரும் இதற்கெல்லாம் நீட்டி முழங்கிப் பதில் கொடுக்க தேவை இல்லை.விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது என்றால் போதுமானது.யார் யார் கடந்த காலங்களில் என்ன செய்தார்கள்.இப்போது என்ன செய்கிறார்கள்.திடீர் நல்லவர்களானோர் எத்தனை பேர் போன்ற அத்தனை விசயங்களையும் இப்போது கறந்து முடித்து இருப்பார்கள்.நாம் இங்கே தமிழில் என்ன எழுதுகிறோம் எல்லாம் பாதுகாப்புத் தரப்புக்குத் தெரியும்.

ஒப்பீட்டளவில் என்னோடு வேலை செய்யும் நண்பர்கள் மிகுந்த நாகரீகமாகவே நடந்து கொண்டார்கள்.எனது சிங்கள நண்பர் ஒருவர் அடர்த்தியாய் தாடி வைத்து இருக்கிறார்.கண்டியில் இருந்து நண்பர் கொழும்பு செல்லும் சொகுசு பஸ்ஸில் ஏறினாராம்.பஸ் நிறைந்துவிட்டது.இவர் பக்கத்தில் யாருமே வந்து உட்காரவில்லையாம்.இவர் வெளிநாட்டு சுற்றுலா பயணி போல கை, கால்களை அகல விரித்து வந்தாராம்.இதைக் கூறிவிட்டு வருத்தப்பட்டார்.அவர் முஸ்லிம் என்று நினைத்து யாரும் பக்கத்தில் கூட வரவில்லை.இப்படி மாற்றுமத சகோதரர்களே பாதிக்கப்படும் போது அவர்களுக்கு எதற்குமே சம்பந்தம் இல்லாத அப்பாவி முஸ்லிம்கள் மேல் ஒரு பரிவை ஏற்படுத்திவிடுகிறது.

(Zafar Ahmed)
Share:

No comments:

Post a Comment