நாச்சியாதீவு பர்வீன்.

பன்மைத்துவ சமூக கட்டமைப்பை கொண்ட இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சமூகங்களிக்கிடையிலான முறுகல் நிலைமை தோன்றுவது சாதாரணமான விடயமாகும்.
ஆனால் அந்த நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மை சமூகம் அங்கு வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதும், மத ரீதியான கடமைகளுக்கும்,மத ஸ்தலங்களுக்கும் பாதிப்பினையும் சேதத்தினையும் ஏற்படுத்துவதும் ஒரு ஜனநாயக நாட்டில் அங்கீகரிக்க முடியாத செயலாகும். பேரினவாத கடும்போக்கு பௌத்த அமைப்புக்களின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளினால் இலங்கையிலுள்ள இரண்டு சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் சமூகங்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்சிக்கு கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்கள் வெவ்வேறான காரணங்களை முன்வைக்கின்றன. 
1915 ஆம் ஆண்டு தொடக்கம் வளர்க்கப்பட்ட பௌத்த இனவாத சிந்தனையும் முஸ்லிம் விரோதப்போக்கும் பெரும்பான்மை சமூகத்தினரிடத்தில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்திருக்கின்றது. அதுதான் வேண்டும் என்றே முஸ்லிம் சமூகத்தின் மீது பொய்யான கற்பிதங்களை முன்வைத்து அவர்களை தாக்குவதற்கான காரணங்களை தேடி நிற்பதானது, அவர்களது தொடரான இனவாத தாக்குதல்களை அவதானிக்கின்ற போது புலனாகின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றிக்குப்பின்னர்  பௌத்த இனவாத சிந்தனையை தூண்டுகிற அமைப்புக்களின் உருவாக்கமானது முஸ்லிம்கள் மீதான பகையுணர்வை வளர்ப்பதற்கு கடுமையாக உழைத்து வருகின்றமை ஆழமாக நோக்குமிடத்து தெளிவாக தெரிகிறது.
முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள், அதிகம் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள், விரைவில் இது ஒரு முஸ்லிம் நாடாக மாறிவிடும், அவர்கள்  சிங்கள மக்களை ஏமாற்றி  சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்கின்ற பொய்யான பரப்புரைகளை அப்பாவி சிங்கள மக்கள் மீது திணிக்கின்ற ஒருவகையான உளவியல் போராட்டத்தை சில பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் தூண்டுதல், வழிகாட்டுதல் என்பன சிங்கள மக்கள்  முஸ்லிம் சமூகத்தின் மீது தொடராக தாக்குவதற்கு ஏதுவான காரணமாக அமைந்துள்ளது.
பௌத்த கடும் போக்கு வாத அமைப்பினரால் மூளை சலவை செய்யப்பட்ட பௌத்த இளைஞர்களே அநேகமாக இவ்வாறான இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நிலைப்பாடெல்லாம் காரணம் இருக்கோ இல்லையோ முஸ்லிம்கள் தாக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்க வேண்டும், முஸ்லிம்களின் மதஸ்தலங்களை அடித்து நொறுக்க வேண்டும் என்பது மட்டுமே. கடந்த காலங்களில் இவர்கள் முஸ்லிம்களை தாக்க பல காரணங்களை கூறினார்கள் ஹலால் பிரச்சினை, புர்க்கா பிரச்சினை, ஒலி பெருக்கியில் பங்கு சொல்லுகின்ற பிரச்சினை, கருத்தடை மாத்திரை பிரச்சினை என பௌத்த மதத்திற்கோ அல்லது பௌத்தர்களுக்கோ எவ்விதமான பாதிப்பும் இல்லாத முஸ்லிம்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட சமய விடயங்களையும் காரணமாக காட்டி பல தாக்குதல்களை முஸ்லிம்கள் மீது நடத்தினார்கள். வெறும் சில்லரைக்காரணங்களை காட்டி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைத்தார்கள் எல்லாவற்றையும் முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொண்டது.
இதற்கிடையில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிர வாதிகள் சிலரின் மிலேச்சத்தனமான தற்கொலை தாக்குதலில் கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த சுமார் 250 மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதை காரணம் காட்டி அதற்க்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத அப்பாவி  முஸ்லிம்கள் பௌத்த கடும்போக்கினரால் தாக்கப்பட்டதும், அவர்களது வீடுகள்,சொத்துக்கள்,வியாபார நிலையங்கள்,வாகனங்கள் போன்றவற்றை முற்றாகவும்,பகுதியளவிலும் தாக்கப்பட்டமையும்,அழிக்கப்பட்டமையும் இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே. ஆனால் இந்தத்தாக்குதலினால் சுமார் 500க்கு மேற்பட்ட சிிங்கள பௌத்தர்கள் நேரடியாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளமை வன்முறையில் ஈடுபட்ட காாடையர்களுக்கு தெெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிலாபம்,மினுவான்கொடை  போன்ற  நகரங்கள்  உட்பட குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழுகின்ற நிக்கவரட்டிய, பிங்கிரிய, பண்டுவஸ்நுவர போன்ற இடங்களில்  கடந்த திங்கட்கிழமை (13) முழுநாளும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டும்,அவர்களது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும், வியாபார ஸ்தலங்கள் சூறையாடப்பட்டும் கடும்போக்கு தீவிரவாத பௌத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான இனவாத தாக்குதல்களினால் இத்தோடு மூன்றாவது உயிரும் பலியாகியுள்ளது, ஏற்கெனவே இதையொத்த அலுத்கம, திகன தாக்குதல்களில் இரண்டு அப்பாவி முஸ்லிம் உயிர்கள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் ஒரு உயிர் உட்பட15 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், நூற்றுக்குமேற்பட்ட வீடுகள்,வியாபார ஸ்தலங்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் என்பன  சேதமாக்கப்பட்டுள்ளன. 
இந்த தாக்குதலும் இதற்க்கு முன்னர் திகன, பேருவளை, ஜிந்தோட்ட, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களும் ஒரே சாயல் கொண்டவை. இதுதான் காரணம் என்ன  என்று அறுதியிட்டு சொல்லாமல் வெவ்வேறு காரணங்களை இவர்களாகவே கற்பிதம் செய்து கொண்டு இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை தாக்குதல்தாரிகள் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தெரியும் முஸ்லிம்களை மனதளவில் வலுவிழக்க செய்ய முஸ்லிம்களின் மத ஸ்தலங்களை தாக்குவதும்,பொருளாதாரத்தில் சேதத்தை உண்டு பண்ணுவதுமே அவர்களின் பிரதான இலக்கு. அதில் அவர்கள் வெற்றியும் காண்கிறார்கள். இவ்வாறான பௌத்த இனவாத தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது விழுகின்றபோது முஸ்லிம் சமூகம்  தேடுவதெல்லாம்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் அல்லது அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  ஆகியோர்களையே  ஆனால் தேர்தல் காலங்களில் நாங்கள் யானை என்றும், வெற்றிலை என்றும் முஸ்லிம் அரசியலை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கிவிடுகின்றனர். 
எப்படியிருந்தாலும் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுகின்ற போதுகளில் முதல் நபராக அங்கு செல்பவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம். இதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செல்வதில்லை என்று கருத்தாகாது. அவரும் அவரது சக்திக்கு உட்பட்ட வகையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறார். அந்த வகையில் குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பு தொடர்பில் இருவரும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுடன் பேசியதோடு மேலதிக பாதுகாப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பேசியுள்ளனர். அதன் காரணமாகவே அன்று இரவுடனே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
மறுநாள் செவ்வாய்க்கிழமை (14) அதிகாலையே அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினர்,பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சர்களான ரவிகருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம்,அலிசாஹிர் மௌலானா, ஜே.சி.அலவத்துவல, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹபீஸ், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா ஆகியோர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டனர். புனித நோன்புகாலத்தில் நிம்மதியாக நோன்பினை நோற்கின்ற அமைதியான சூழலை ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு சென்றிருந்த அரசியல் பிரதிநிதிகளிடம் வேண்டிக்கொண்டார்கள். 
கடந்த காலங்களில் இடம்பெற்ற “கிறிஸ் யக்கா” என்ற மர்மமனிதனின் ஊடுறுவல் புனித நோன்புகாலங்களில்  முஸ்லிம்களை குறி வைத்தே இயக்கப்பட்டதாகும். முஸ்லிம்களை ஒரு பதற்ற நிலையில் வைத்துக்கொண்டு பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் ஒரு குறுக்கு வழியாகவே இந்த செயற்பாடுகள் கணிக்கப்படுகின்றன. இந்த நாட்டில் சுமார் 1300 வருட கால வரலாற்றினை கொண்ட முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கைக்கும், நற்பெயருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒரு கருப்பு புள்ளியாகும். ஆனால் சுமார் ஒருவார காலத்திற்கும் அந்த தீவிரவாத அமைப்பினை அடையாளம் காட்டி அந்த தீய சக்திகளை அழிக்க அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முஸ்லிம்கள். எனவே முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த முஸ்லிம் தீவிரவாதிகளுக்குமிடையில் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது புலனாகின்றது.
ஆனால் சில தனியார் ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது தமது விரலை நீட்டி ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக சித்தரித்து பௌத்த கடும்போக்கு வாதிகளின் முஸ்லிம் வெறுப்புணர்வுக்கு தூபம் இட்டு இந்த தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. உண்மைக்கு புறம்பான செய்திகளை பக்கசார்பாக வழங்குவதிலும், திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வழங்குவதிலும் அவர்கள் முன்னின்று செயற்பட்டதன் விளைவே இந்த பேரழிவு என்றால் மிகையாகாது. 
அமைச்சர் ஹக்கீம் குழுவினர் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். இவ்வாறான கடும்போக்கு வாத தாக்குதல்கள் இனிமேலும் முஸ்லிம்கள் மீது நடத்தப்படாமல் இருக்க ஏதாவது ஒரு  பொறிமுறையை அல்லது கடுமையான சட்டத்தை அமுலாக்குவது தொடர்பிலும் அங்கு பேசப்பட்டது. சம்பவ தினத்திற்கு முதல் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (12) அன்று பூவெல்ல,கினியம போன்ற முஸ்லிம் கிராமங்களில் இனவன்முறையில் ஈடுபட்ட குழுவில் ஆறுபேர் கினியம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டபோதும் அவர்கள் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் விடுவிக்கப்பட்டது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அத்தோடு பிலித்துரு ஹெலஉறுமய கட்சியின் பிரதான செயற்பாட்டாளர் மதுமாதவ அரவிந்த மினுவான்கொட தாக்குதலின் போது சம்பவ இடத்தில் காணப்பட்டதும் பலத்த சந்தேகத்தை விதைப்பதோடு  ஆட்சியை கவிழ்ப்பதற்கு மகிந்த தரப்பினர் ஆடுகின்ற தப்பாட்டமாக இதனை சிலர் கருதுகின்றனர். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க முஸ்லிம்களை வேறு நாட்டுக்கு சென்றுவிடுமாறு கோருகின்ற செய்தியும், அம்பாறை, திகன, ஜிந்தோட்ட, பேருவளை இனவாத சம்பவங்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்ஷ சார்பானவர்கள் செயற்பட்டிருப்பதும் முன்னாள் ஜனாதிபதி மீது பலத்த சந்தேகத்தை விதைத்துள்ளது. 
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பௌத்த சிங்களவர்களுக்கு எதிரானவர்களாக காட்டி,இந்த அரசாங்கம் பௌத்த மதத்தை அழிக்க முனைவதாக ஒரு மனப்பதிவை சிங்கள மக்கள் மீது விதைத்து அடுத்து வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாப ராஜபக்ஷ வை ஜனாதிபதியாக்கும் திட்டமே என அரசல் புரசலாக கதை வருகின்றது. எப்படியோ முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்ற பாவப்பட்ட சமூகமாகவே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இதற்கான தீர்வினை நாடி அரசாங்கத்துடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் இந்த இனவாத சுழியிலிருந்து முஸ்லிம் சமூகம் மீளுவதாயில்லை. 
இந்த தொடரான பிரச்சினையை  முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம் சமூகத்திற்கு  நிம்மதியான வாழ்வினை பெற்றுக்கொடுப்பது அரசியல் தலைமைகளின் கடமையாகும்.  தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முஸ்லிம் அரசியலின் வகிபாகமும்,ஒற்றுமையும் இங்கு பிரதானமானதாக கொள்ளப்பட வேண்டும். எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுதான் மீண்டும் நாம் தலை நிமிர்ந்து வாழ வழிகோலும். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.