பேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேலதிகமான பேரீத்த மரங்களை இந்நாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்கு கொண்டு சென்று மறு நடுகை செய்தார்.

புத்தளம் வண்ணாத்திவில்லு மற்றும் கல்பிட்டி பிரதேசங்களில் ஆங்காங்கே பற்றை புதர்களாக காட்சியளிக்கும் பேரீத்த மரங்கள் பிராந்தியத்தில் நிலவுகின்ற காலநிலை காரணமாக பூ பூத்தும், காய்க்காமல் அருவடையில்லாது மலட்டுத்தன்மை கொண்டதாகவே காணப்படுகிறது.

முன்னாள் விவசாய உத்தியோகத்தர் ஒருவரின் ஆலோசனை ஒத்துழைப்போடு, சரியான முறையில் மகரந்தச் சேர்க்கை செய்து பராமரிக்கப்பட்ட, சுமார் 70 மரங்களில் காய்த்து தொங்கும் பேரித்தம் பழங்களை அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளமை இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கின்றது.

பேரினவாத அடிப்படைவாதிகளால்; முஸ்லிம் சமூகத்தையும், மரபுகளையும், கலாச்சார எழுச்சியினையும் விமர்சிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இன்று கிழக்கு மாகாணத்தில் காய்த்துத் தொங்குகின்றன பேரீத்தம் மரங்கள் மீதும் தமது விஷமப் பார்வையை திருப்பி இனவாத கருத்துக்களை கக்காமல் இல்லை.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி "மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசங்கள் பேரீச்சம் மரங்களால் அலங்கரிக்கப்பட்டு சவுதி மயப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது, ஆக அந்த மரங்களை வெட்டி அகற்றி மீண்டும் இலங்கையாக மாற்றுமாறு நான் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சருக்கு தெரியப்படுத்துகிறேன்" என்று அண்மைய ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்தார்.

அரபு நாடுகளிலிருந்து நோன்பு காலங்களில் போது முஸ்லிம் விவகார அமைச்சின் ஊடாக ஒரு சில தசாப்தங்களாக, நமக்கு கிடைத்துவரும் பேரீத்தம் பழங்களை உண்டுவிட்டு வீசிய விதைகள்தான், புத்தளத்தில் பேரீத்த மரங்களாகியதும், அவை கிழக்கிலங்கைக்கு கொண்டு போய் நாட்டப்பட்டதும் முன்னைய வரலாறு.

நாத்தாண்டிய பெருங்குடிகளின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய ஹெக்டர் ஒரு சில வருடங்களாக ஐ. தே. க புத்தளம் தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவரே தவிர; புத்தளத்தினதும் முஸ்லிம்களினதும் வரலாறு, பண்பாடு, அரசியல், கலாச்சாரம் போன்ற எதையும் அறியாத கெபினட் அமைச்சு பதவிகளுக்கு கனவு காண்பவராவர்.

தன்னுடைய நாத்தாண்டிய தொகுதியில் தும்மோதர, மானிங்கள, தப்போவ மற்றும் கொற்றாமுள்ள பிரதேசத்தில் மே13 இடம்பெற்ற இனவாத செயல்களை தடுக்கவோ அல்லது அசம்பாவித செயல்களால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல், கடைகள், வீடுகளுக்கு இன்று வரை பார்வையிட போகாமலிருக்கும் நாத்தாண்டிய பெரும்பான்மை வாக்குகளை சேகரிக்கும் ஆளுங்கட்சி முகவர்.

வெள்ளையர்கள் வெளி நாடுகளிலிருந்து பயிர்ச் செய்கைக்காக கொண்டுவந்த தேயிலை, ரப்பர், மகோகனி போன்ற பெருந்தோட்ட விவசாயத்தினால் நமது நாட்டுக்கு வருமானம் தேட முடியும் என்றால்; இனி மேலும் அரபு நாடுகளில் கையேந்தாமல் உள்நாட்டில் பேரீத்தம் பழ தேவையில் தன்னிறைவு கண்டு மேலதிக உற்பத்தியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இன்று பிறந்துள்ளது.

ஆக எக்காரணம் கொண்டும் சவுதி மயமாதலில் இருந்து காத்தான்குடியை மட்டக்களப்பை மீட்பதாக சொல்லி வீதி நெடுகிலும் உயர வளர்ந்து காய்த்துத் தொங்கும் பேரித்தம் மரங்களை வெட்டுவதற்கும், புத்தளத்தில் பேரித்தம் மரத்தை தடை செய்வதற்கும் முனையும் யாரையும் அனுமதிக்க மாட்டோம் அவர்களுக்கு மக்கள் தேர்தலில் வாக்களிக்க விடவும் மாட்டோம்.

இப்ளால் அமீன்
29.05.2019

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.