Dilshan Mohamed நாநா கைது செய்யப்பட்டு இருப்பதாக அவரது உறவுக்காரர் ஒருவர் எனக்கு மெஸேஞ்சரில் செய்தி அனுப்பிய போது சனி பின்னேரம் என்று நினைக்கிறேன்.அந்த அதிர்ச்சியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

'இதை இங்கே எழுதக் கூடாது அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கலாம்.சில மணி நேரத்தில் மீண்டு வருவார்' என்று நான் அவருக்கும் எனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.ஆனால் நாட்கள் கரைகின்றன.காலை வேளை மீடியா வெளிச்சத்தில் இந்த செய்தி அடிபட தொடங்கி இருந்தது.நெத் எப் எம் ஸ்கிரீன் ஷொட்களை சிலர் எனக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள்.பேச முடியாத இறுக்கமும் ஒருவித மன அழுத்தமும் ஏற்பட்டுவிட்டது.மாலை ஹிரு டி வி இன் செய்தி அறிக்கைகளில் Headline ஐ மேலோட்டமாய்ப் பார்த்த போது இந்த செய்தியை முதலில் அலறினார்கள்.நான் மிகவும் மதிக்கும் எனது பெரு மதிப்புமிக்க சகோதரரின் பெயரை இந்த இனவாத ஊடகத்தில் கேட்கவே கூடாது என்று டி வி ஐ மூடிவிட்டேன்.

டில்ஷான் நாநாவை எனக்கு 2016களில் இருந்து தெரியும்.சர்வதேச அரசியல் விமர்சகர்.காத்திரமான சமூக செயற்பாட்டாளர்.கல்வித்திணைக்களத்தில் உயர் பதவி ஒன்றில் இருப்பவர்.ஆரம்பகாலங்களில் இருந்தே மனித குல விரோதிகளான ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராய் எழுதி வருபவர்.அத்தனை விசயங்களையும் சர்வதேச மீடியா ரிப்போர்ட்டர் போல துல்லியமாய் எழுதி வைத்து இருப்பார்.பயங்கரவாதிகளுக்கு 'கருங்குஞ்சி 'என்ற பதத்தை அறிமுகப்படுத்தியவரும் அவர் என்றே நினைக்கிறேன்.இஸ்லாமிய கிலாபா என்று சொல்லிக் கொண்டு இங்கே இருக்கும் விசிலடிச்சான் கூட்டத்தையும் பக்த கோடிகளையும் நம்பவைக்க பயங்கரவாதிகள் முனைந்த போது அவர்களின் இடுப்பு எலும்பு முறியும்படி எழுதியவர்.பயங்கரவாதிகளின் பிரச்சாரம் டில்ஷான் நாநா என்ற தனிமனிதனின் வன் மேன் ஷோ வால் கடாசி எறியப்பட்டது.அவருடைய கருத்தியல் ரீதியான வாதங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஃபேக் ஐ டி கருங்குஞ்சிகள் அடிக்கடி நரகவாதி ஃபத்வா கொடுப்பதை பார்த்து இருக்கிறேன்.

இப்பேர்பட்டவரை ஏன் பிடித்து இருக்கிறார்கள் என்பதற்கு இதுவரை விளக்கம் கிடைக்கவில்லை.இவர் போன்ற ஒருவரை இந்த அரசும் புலனாய்வுப் பிரிவும் சிவப்புக் கம்பளம் விரித்து எப்போதோ வரவேற்று இங்கே தமிழ் ஃபேஸ்புக் உலகத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டு இருந்தால் இந்த சீரழிவுகள் எதுவும் நடந்து இருக்காது.குற்றவாளி சமூகமாய் நாம் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு இப்படிப் புலம்பிக் கொண்டு இருக்கவும்மாட்டோம்.

அவசரகால சட்டத்தைப் பற்றி புதிதாய் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.காணி பிரச்னை முதல் காதல் பிரச்னை வரை தனிப்பட்ட குரோதங்களை தீர்க்க யாரையும் மாட்டிவிடலாம்.அப்பாவிகள் தண்டிக்கப்படலாம்.முப்பது வருட யுத்தத்தில் தமிழர்கள் பார்க்காதது எதுவும் இல்லை.அதே போன்று ஒரு நிலை இப்போது எம்மை எதிர் நோக்கி இருக்கிறது.டில்ஷான் நாநா போன்றவர்களை காயடித்து மெளனியாக்க யாராவது முயற்சி செய்கிறார்களோ தெரியவில்லை.மிகுந்த கவலையும் ஆற்றாமையும் நிறைந்து இருக்க எழுதிக் கொண்டு இருக்கிறேன்.டில்ஷான் நாநா மீண்டு வரவேண்டும்.பிரார்த்திப்போம்.

(Zafar Ahmed) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.