குண்டுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்பே முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவது ஏன் ?


குண்டுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்பே முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவது ஏன் ?

எந்தவொரு சமூகமோ அல்லது தனிநபரோ பலயீனமாக இருந்தால் அவர்கள் மீது பலமுள்ளவன் அரசியல் காரணங்களுக்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது உலக நடைமுறையாகும். 

இவ்வாறு பலமுள்ளவர்கள் நசுக்க முற்படுவார்கள் என்று உணர்ந்து பலயீனமாக உள்ளவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ளாதவரை வேறு வழியின்றி தொடர்ந்து அடிவாங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் 21 இல் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களுக்குள் முஸ்லிம்கள் மீது எந்தவொரு வண்முறை சம்பவங்களும் கட்டவிழ்த்து விடப்படவில்லை. 

அவ்வாறு பழிக்குப்பழி வாங்குவதாக இருந்தால், தமிழ் மக்கள் அல்லது கிருஸ்தவ மக்கள்தான் முஸ்லிம்கள் மீது ஆத்திரத்தில் தாக்குதல் நடாத்தியிருக்க வேண்டும்.

ஆனால் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அமைதியை கடைப்பிடிக்கின்றபோது, சிங்கள இனவாத குண்டர்கள் முஸ்லிம்கள் மீது நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகளை கட்டவிழ்த்து உள்ளதானது ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து அவர்களை அச்சமூட்டும் நோக்கில் பலதடவைகள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள்.

தமிழர்களின் ஆயுதப்போராட்ட ஆரம்பகாலங்களில் புலிகள் இயக்கத்தினர் சொற்ப எண்ணிக்கையிலான சிறு குழுக்களாகவே இயங்கினார்கள். 

1983 இல் யாழ்பாணத்தில் புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலில் பல இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டதனால், அதற்கு பழிதீர்க்கவே தென்னிலங்கையில் தமிழர்கள்மீது பாரிய இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இது ஜூலை கலவரம் எனப்படுகிறது.

வடக்கிலே இராணுவத்தை கொலை செய்தால் தென்னிலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்ற அச்சத்தினால் புலிகள் தங்ககளது நடவடிக்கயிலிருந்து பின்வாங்கவில்லை.

தொடர்ந்து இராணுவத்துக்கெதிரான செயல்பாடுகளை மேற்கொண்டதுடன், இரு தரப்பும் பழிதீர்ப்பதில் குறியாக இருந்தன. 

பின்னாட்களில் புலிகள் பாரிய இயக்கமாக பலமடைந்ததன் பின்பு இராணுவத்தை கொலை செய்தார்கள் என்பதற்காக பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் தமிழர்கள் மீது காடையர்கள் தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்துவதனை கைவிட்டார்கள். 

மவுலவி சஹ்றான் தலைமையிலான குழுவினர் தற்கொலை தாக்குதல் நடாத்தியதும், முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்கள் இவ்வாறு தாக்குதல் நடாத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சிறிய விடயங்களுக்கெல்லாம் முஸ்லிம்களுக்கெதிராக வரிந்துகட்டிக்கொண்டு மல்லுக்கு வருகின்ற பல தென்னிலங்கை இனவாதிகள், சஹ்ரான் குழுவின் தாக்குதலின் அச்சத்தினால் அடக்கி வாசித்ததனை காணக்கூடியதாக இருந்தது.   

இந்த தாக்குதல் நடாத்திய குழுக்களின் பலமும் பலயீனமும் தெரியாததனாலும், சிரியாவை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற ஐ எஸ் இயக்கத்தின் பின்னணியில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது என்ற அச்சமே இனவாதிகளை அடக்கிவாசிக்க வைத்தது.

ஆனால் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டதனாலும், வேறு எந்த தாக்குதல்களும் குறித்த காலப்பகுதிகளில் நடைபெறாததனாலும் இனவாதிகளிடம் இருந்த அச்சம் நீங்கியது.

அத்துடன் “நாங்கள் அனைவரையும் கைது செய்துவிட்டோம். இன்னும் இரண்டு மூன்று நபர்களை மட்டுமே கைதுசெய்ய வேண்டி உள்ளது” என்று ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்ததால் சிங்கள இனவாதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டு மீண்டும் வீரத்துடன் முஸ்லிம்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்கள்.

எனவே ஆட்சியை பிடிக்க எதிர்பார்க்கும் சக்திகள் முஸ்லிம்களை தாக்குகின்றார்கள் என்று கூறப்பட்டாலும், முஸ்லிம்கள் பலமாக உள்ளார்கள் என்ற அச்சத்தினால் அமைதிகாத்தவர்கள் இன்று முஸ்லிம்கள் பலயீனமானவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் மீண்டும் முஸ்லிம்களை தாக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான் யதார்த்தமாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

No comments:

Post a Comment