எங்கள் வீட்டிலும் பொலிஸ் விசாரணை
=========================================

27.04.2019 சனிக்கிழமை காலை கண்ணியத்துக்குரிய கல்கந்தே தம்மானந்த தேரர் அவர்கள் வல்பொல ராஹுல நிறுவகத்துடன் தொடர்புடைய கிறிஸ்தவ மற்றும் ஹிந்து அன்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு சப்ரகமுவ பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் எனது வீட்டுக்கு வருகை தந்திருந்தார். வந்திருந்தோரில் அன்புக்குரிய திரு. கனகரத்தினம் தம்பதியர், சகோதரர்கள் மகேந்திர, தெனிபிட்டிய என்போர் உள்ளடங்குவர்.

இடம்பெற்ற துர்ப்பாக்கியமான சம்பவங்களால் மனம் கலங்கிப் போயிருந்த  என்னையும் என்னிரு குழந்தைகளையும் நலம் விசாரித்துத் தைரியமூட்டிச் செல்வது அவர்களின் வருகைக்கான பிரதான நோக்கமாக இருந்தது. அதனூடே, இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்க்கு, தம் சக முஸ்லிம் சகோதர சகோதரிகளைத் தனிமைப் படுத்தாமல் ஆதரவோடும் பரிவோடும் அணுகித் தெம்பும் நம்பிக்கையும் ஊட்டுவது கடமையே என்ற ஆதர்ஷத்தை அவர் வழங்க முயன்றார் எனலாம்.

நடந்த பயங்கரமான சம்பவங்கள் இந்நாட்டின் சமூக நல்லிணக்கத்தில் எத்தகைய பெரும் தாக்கத்தை விளைவித்து இருக்கிறது, அதை எப்படி வெற்றி கொள்வது, மனம் சோர்ந்து விடாமல் நாம் தொடர்ந்து முன்னரை விடவும் வீரியத்துடன் நம் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தெல்லாம் கலந்துரையாடிக் கொண்டு இருந்த தருணத்தில் திடீரென இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வாசலில் வந்து நின்று, "இந்த வீட்டில் யார் வசிக்கிறீர்கள்?" என்று கேட்டபடி உள்ளே வந்தனர்.

மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் ஏன் அந்த இடத்தில் வசிக்கிறேன், இங்கே வந்திருக்கும் இவர்கள் யார் என்று கேள்விகளை அடுக்கினார்கள். நான் என்னுடைய பணி அடையாள அட்டையை காட்டி அந்தப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணி ஆற்றுகிறேன் என்பதை நிரூபிக்க வேண்டிய தாயிற்று. தம்மானந்த தேரர் தான் களனி பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் என்பதைக் கூறித் தனது அடையாள அட்டையைக் காட்டி தன்னுடைய அடையாளத்தை நிறுவ வேண்டிய தாயிற்று.

அதன் பிறகு அவர் எனக்கும் Walpola Rahula நிறுவனத்துக்கும் இடையிலான நீண்டகால தொடர்பு, சமூக நல்லிணக்கப் பணிகளில் அவர்களோடு இத்தனை வருட காலமும் இணைந்து நான் ஆற்றி வந்த பங்களிப்பு என்பன குறித்தெல்லாம் தேரர் காவல்துறை அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தினார். "அந்த நல்லுறவும் நன்மதிப்புமே நேரில் வந்து இவரது சுகதுக்கங்களை விசாரித்து செல்வதற்கு காரணமாக அமைந்தன" என்று சொன்னார்.

இடையில் வந்து திடீர் விசாரணை செய்து அங்கே இடையூறு விளைவித்தமைக்கு மன்னிப்புக்கோரி தேரரை வணங்கி விடைபெற்றுச் சென்றனர், அவர்கள்.

போகும் போது அவர்கள் சொன்ன ஆலோசனையின்படி அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று குறித்த விலாசத்தில் நான் இரு குழந்தைகளோடு வசித்து வரும் விடயத்தை தெரிவித்து விட்டு வரலாம் எனப் புறப்பட்டேன். என்னுடன் தேரரும் தெனிபிட்டிய சகோதரரும் உடன் வருவதாகப் புறப்பட்டு வந்தார்கள். அங்கே போன போது தான் காவல் துறையின் திடீர் பிரவேசத்தின் காரணம் தெரிந்தது.

'வெள்ளை வானில் வந்து இறங்கிய ஒரு குழு ஒரு முஸ்லிம் வீட்டுக்குள் நுழைவதை கண்டோம். வந்தவர்களில் ஒருவர் புத்த பிக்கு போலத் தோற்றமளித்தாலும். அவர் அப்படி வேஷம் தரித்து வந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்' என எங்களுடன் அறிமுகமற்ற யாரோ  ஓரிருவர் அவசர பொலிஸ் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். அதனை அடுத்து கொழும்பில் இருந்தும் அது குறித்து விசாரித்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதை அடுத்துத் தான் இன்ஸ்பெக்டர் அதிகாரிகள் இருவரை விசாரணைக்காக அனுப்பியிருந்தார். குறித்த வீட்டில் நான் தான் இருக்கிறேன் என்பதை அவர் முன்கூட்டியே அறிந்து இருக்கவில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.

மேலும், 'ஒரு பௌத்த பிக்குவின் காவி ஆடை கூட சந்தேகத்துக்கிடமானதாகப் பார்க்கப்படும் அளவுக்கு மக்கள் பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர் என்பது மிகுந்த கவலை தருகிறது' என்று சொல்லித் தேரரிடமும் திரும்பத் திரும்ப மன்னிப்பு கோரினார். என்றாலும், அவர் அப்படித் தன் கடமையை சரியாக செய்தது குறித்து நாங்கள் எமது பாராட்டுதல்களைத் தெரிவித்தோம். எல்லோர் நன்மை கருதியும் அப்படி எச்சரிக்கையாகச் செயல்படுவது சரிதான் என புரிந்து கொள்கிறோம் என்றும் சொன்னோம். சுமுகமான பரஸ்பர உரையாடலின் பின்பு நாங்கள் அங்கிருந்து விடை பெற்றோம்.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால், என்னதான் சமூகத்தளத்தில் நீண்ட காலம் செயல்பட்டிருந்தாலும், பிரபலம் பெற்றிருந்தாலும், எவ்வளவு உயர் அந்தஸ்தில் இருந்தாலும், காவி உடை தரித்த பௌத்த தேரர் ஆகவே இருந்தாலும்கூட இது போன்ற சந்தர்ப்பங்களில் மக்கள் அவர்களையும் கூட சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அளவுக்கு சமூகநிலை மோசமடைந்துள்ளது.

எல்லோர் மனதிலும் பயமும் சந்தேகமும் நிறைந்துள்ளன. எனவே, இலங்கை முஸ்லிம்களாகிய நாம், நம் மீது மட்டும்தான் அப்படியான சந்தேகப் பார்வை விழுகிறது என நினைத்து மனம் சோர்ந்துவிடத் தேவையில்லை. நாட்டில் இப்போதைய பரவலான நிலை இதுதான்.

எனவே, நமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையை, நல்லெண்ணத்தை, நல்லுறவை மீளக் கட்டியெழுப்பும் பணியில் முதலில் இருந்து களத்தில் இறங்க வேண்டிய ஒரு தேவை நம் அனைவர் முன்னும் உள்ளது என்பதை உணர்ந்து கொள்வோம். நம்முடைய சக்திக்கு உட்பட்ட வகையில் அது தொடர்பில் நம்முடைய பங்களிப்பை வழங்க முற்படுவோம்.

(லறீனா அப்துல் ஹக்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.