ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள் சிலர் பயங்கரவாத தலைவர் ஒருவரை சந்தித்ததாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முன்வைத்த  குற்றச்சாட்டை எமது அமைப்பு முற்றாக நிராகரிக்கிறது.

2013 ஆம் ஆண்டில் கட்டார் நாட்டில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கட்டார் நாட்டு அரச தலைவரின் ஆலோசகராக செயற்படும் மார்க்க அறிஞர் ஒருவரான யூசுப் அல் கர்ளாவி குறித்த மாநாட்டின் போது எமது அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

அந்த சந்திப்பு எவ்வித இரகசியமான ஒரு சந்திப்பாக இருக்கவில்லை என்பதுடன், கலகொடஅத்தே ஞானசார தேரரினால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட புகைப்படம் 2013 ஆம் ஆண்டில் எமது அமைப்பினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் வெளியான புகைப்படமாகும்.

யூசுப் அல் கர்ளாவி என்பவர் அல்ஜஸீரா தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்படும் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியொன்றை நடாத்துபவரும், தற்பொழுது கட்டார் அரசின் மற்றும் கட்டார் அரச தலைவரின் ஆலோசகர் ஒருவராக செயற்படும் மார்க்க அறிஞருமாவார். குறித்த சந்திப்பின் போது அவர் எமது அமைப்பிடம் தெரிவித்ததாவது, இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினரான பௌத்த மக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதே. அவ்விடயம் பத்திரிகைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நிராகரித்து இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப தற்பொழுது எமது அமைப்பு கடும் பிரயத்தனம் எடுத்து செயற்படும் இத்தருணத்தில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அந்த வேலைத்திட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என நாம் அனைத்து தரப்பினரிடமும் வேண்டிக் கொள்கிறோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.