முன்னாள் எகிப்து அதிபர் நீதிமன்றில் மயங்கி விழுந்து வபாத்


எகிப்து முன்னாள் அதிபரும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவருமான முகமது மோர்சி (67) நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

எகிப்தில் நீண்டகாலம் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, முகம்மது மோர்சி அதிபரானார். இதனிடையே, எகிப்தில் மோர்சியின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதை பயன்படுத்தி, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் அப்தல் பதா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியை பதவியை விட்டு நீக்கியதுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்தது. அந்த அமைப்பினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டோரை கொல்லும்படி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு உத்தரவிட்டதாக மோர்சிக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மோர்சிக்கு மரண தண்டனை முதலில் விதிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தண்டனை, 20 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் மோர்சி திங்கள்கிழமை ஆஜரானார்.  கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பேசிய அவர், தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும், அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மூத்த உறுப்பினர் முகம்மது சூடான் கூறுகையில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை. கடந்த ஒரு ஆண்டாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கவில்லை. இதுகுறித்து மோர்சியும் புகார் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணையிலும் கண்ணாடி கூண்டில்தான் நிறுத்தப்படுவார். அவர் பேசுவது அப்போது கேட்காது. அவரை படிப்படியாக கொலை செய்து விட்டனர் என்றார்.

(தினமணி)
Share:

No comments:

Post a Comment