தழுவப் போகும் நிர்வாணம்....
********************************
புர்கா,நிகாப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றார்கள்.சரி பெண் வேடமிட்டு ஆண் போகலாம் என்ற நியாயத்தில் விட்டுக் கொடுத்தாயிற்று.அதற்காக குட்டக் குட்ட குனிய வேண்டுமென்பது போல தொடர்ந்து துகிலுரியப் படுகிறோம்.

அரச பணியாளர்களுக்கான அபாயா தடை என்பது  சங்கிலித் தொடர் தான்.அத்தோடு நிற்கப் போவதில்லை.அந்த தொற்று நோய் முஸ்லீம் பாடசாலைகளின் காற்சட்டை,பர்தா வரை தாக்கி அழிக்கத் தான் போகிறது.

அரச துறையில் பணிபுரியும் அத்தனை பெண்களும் சாரி அல்லது ஒசரி அணிய வேண்டுமென்ற சுற்று நிரூபம் திருத்தப்படும் என்று ஒரு பக்கம் பூச்சாண்டி காட்டப்பட்டுக் கொண்டிருக்க,மறு பக்கம் கஞ்சி ஆறவிடப்பட்டுள்ளது,அவ்வளவே.

பிரதமர் அலுவலக கடிதங்களும் நவமணி,தினமின பத்திரிகைகளும் சுற்று நிரூபமாகப் போவதில்லை.நீர் வற்றினால்  மீன் பிடிக்கலாம் என காத்திருப்பது போலிருக்கிறது.

எதிர்வினையாற்ற தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் தவணை முறையில் நிர்வாணப்படுத்தப் படப் போகிறோம்.

ஹிஜாபிற்காக உயிர்துறந்த ஆளுமைகளை கொண்டாடிய எந்த பெண்ணும் நீதிமன்ற படியேற தயாரில்லை என்பது அவர்கள் கோழைகள் மட்டுமல்ல,சுயநலவாதிகள் என்பதையும் சத்தமாக சொல்கிறது.

யாரோ நெருப்பு மூட்ட நாம் குளிர் காயலாம் என காத்திருக்கிறோம்.
ஆனால் எங்கோ ஊற்றப்படும் நீரினால் எங்கள் வாசலிலுள்ள பூச்செடியில் பூ பூக்காது.

நானும் அரச துறையில் பணியாற்றவில்லையே என்று முதல்முறையாக  கைசேதப் படுகிறேன்.
எங்கே எங்கள் முஸ்லீம் பெண் ஆளுமைகள்?
குரலற்றவர்க்காக கோஷமிட்டவர்கள் எங்கே?

எம்மிடையே உள்ள பெரும்பாலான அரச துறை பணியாளர்கள் கிழக்கிலோ ,முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும் அலுவலகங்களிலோ தான் பணியாற்றுகிறார்கள்.அவர்களுக்கு எந்த நெருக்குவாரமும் இதுவரை நடந்திருக்காது.
அதனால் அவர்கள் குரலெழுப்பப் போவதில்லை.

ஆனால் மற்றவருடன் கலந்து வாழும் ஒரு சிலரின் ஓசையை விட அவர்களது ஆரவாரமே சாதிக்க வல்லது.

உடலின் ஏதோ அங்கம் தாக்கப்பட இன்னொரு அங்கம் துடிக்கவில்லை என்றால் சமூகமாய் நாம் வெட்கப்பட வேண்டும்.

பஸ்ஸில் யாரோ ஒரு முஸ்லீம் பெண் மேலுள்ள கம்பியை எட்டிப் பிடிக்கும் போது அமர்ந்திருக்கும்  யாரோ ஒருவரின் கண்கள் அவளை  மேய்ந்ததற்கு நாம் எல்லோருமே பதில் சொல்லியாக வேண்டும்.

இன்று தாதியர்,காவல் துறையினர் போல ஏன் அரச  துறையில் பணிபுரியும் பெண்களும் பொதுவான ஆடை அணிய முடியாது? என தர்க்க நியாயம் பேசுபவர்கள், நாளை சீருடையாக ஒரு t-shirt உம் tight skirt ம் பிரகடணப்படுத்தப் படும் போதும் ஏதோ நியாயம் பேசத் தான் போகிறார்கள்.அணிய வேண்டியது நீங்கள் தான்..

✒ஆயிஷா அபூ பக்ர்

கருத்துரையிடுக

  1. https://m.facebook.com/story.php?story_fbid=2292288291099289&id=100009544212792

    பதிலளிநீக்கு
  2. இஸ்லாமிய பெண்களே ஏன் இந்த தயக்கம்?அபாயா உங்களுக்கு பாரமா?அது எமது உரிமை.. அதில் கை வைக்க அனுமதியாதீர்.

    பதிலளிநீக்கு
  3. அரச பணி ஊழியர்கள் என்ற பெயரில் அரச பணியற்ற இஸ்லாமிய பெண்களின் கரங்கள் கட்டப் பட்டுள்ளது.யாது செய்வோம்?

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.