பிறவ்ஸ்
முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கருப்பொருள் காலம்காலமாக பேசப்பட்டு வந்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுசேர்வது என்பது நடக்கமுடியாத ஒரு நிகழ்வாகவே கடந்த காலங்களில் பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 51 நாட்கள் அரசியல் புரட்சியின்போது பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து செயற்பட்டமை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
பிரச்சினைகளின்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்தாலும், தேர்தல் வரும்போது பிரிந்துவிடும் நிலைமையே காணப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகளை ஒரு கூட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கு சமூக மட்டத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டும் அவை சாத்தியப்படவில்லை. காலம் காலமாக எதிர் அரசியல் செய்துவந்த காரணத்தால், அதனை கட்சிகளின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை.
இந்நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ள நிலையில் சமூக நலன்கருதி நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் என ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை துறந்துள்ளனர். ஏனைய பன்னிரெண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவர்களுடன் துணைநின்றனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமூகத்துக்காக ஒரே நிலைப்பாட்டை எடுத்தது இதுவே முதற்தடவையாகும். இந்த செயற்பாட்டுக்கு முஸ்லிம்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்தது. மாற்று சமூகத்தின் மத்தியின் ஒற்றுமையின் உதாரணத்துக்கான பேசுபொருளாகவும் இது அடையாளப்படுத்தப்பட்டது.
ஒற்றுமை எப்படி சாத்தியமானது?
ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சரான றிஷாத் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாதத்துக்கு துணைநின்றதாக குற்றம்சாட்டி, அவர்களை பதவிவிலகுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்தார். இதன்போது மூவரும் தங்களது பதவிகளை துறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.
போராட்டத்துக்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்தது. பெளத்தர்கள் தலதா மாளிகையின் முன்னால் ஒன்றுதிரண்டார்கள். இந்நிலையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஞாயிற்றுக்கிழமை கண்டிக்கு வந்தார். மூவரும் பதவி விலகவேண்டுமென ஞானசார தேரர் அடுத்தநாள் 12 மணிவரை காலக்கெடு விதித்தார். இல்லாவிட்டால் நாட்டில் கலவரம் ஏற்படுமென எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்போது குழுக்களாக கூடியிருந்து கதைப்பதற்குகூட அனுமதியில்லை. அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் என்பது அவசரகாலச் சட்ட நியதிகள்படி அனுமதிக்க முடியாத செயலாகும். அதேபோன்று மக்கள் ஒன்றுகூடுவதற்கும் அனுமதிக்க முடியாது. ஆனால், இவையெல்லாம் நடக்கும்போது அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இதன்மூலம் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் முஸ்லிம்களை இலக்குவைத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்த பேரினவாத சக்திகள் தயார்நிலையில் இருந்தன. குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்களை விட, ஏற்படவிருந்த வன்முறைகள் உக்கிரமாக இருக்குமென்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊகித்தனர். இந்த வன்முறை சம்பவங்கள் நாடுதழுவிய ரீதியில் நடத்தப்படலாம் என்ற அச்சம் மேலோங்கியிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீமை தொலைபேசியில் தொடர்புகொண்டு இக்கட்டான சூழ்நிலையில் நாம் அடுத்ததாக என்ன செய்வோம் என்று தொலைபேசியில் கலந்துரையாடினார். மூவரையும் இராஜினாமா செய்யுமாறுதான் போராட்டம் நடக்கிறது. எனவே, பிரதமருடன் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் தான் கதைப்பதாகவும், ஆனால் அவர் வழங்கிய உறுதிப்பாட்டில் நாட்டின் நிலைமைகளை பார்க்கும்போது திருப்திகொள்ள முடியாதும் என்றும் கூறியுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பில் நாளை முக்கியமான முடிவொன்றை எடுக்கவேண்டும். என்னால் கொழும்புக்கு வரமுடியாது. எனவே, உங்கள் தலைமையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வாருங்கள். அதன்போது நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் என்ற ஒபபுதலை கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீமிடம் வழங்கியிருந்தார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் ஆளுநர்கள் இராஜினாமா செய்வதற்கு தயாராக இருந்ததால், அடுத்ததாக றிஷாத் பதியுதீன் மாத்திரமே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தார். றிஷாத் பதியுதீன் இராஜினாமா செய்யுமாறு கூறமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்தது. நான் பதவியிலிருந்து தான விலகமாட்டேன், வேண்டுமானால் நீங்கள் என்னை பதவி விலக்குங்கள் என்ற நிலைப்பாட்டில் றிஷாத் பதியுதீன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பில் கபீர் ஹாசிம், றிஷாத் பதியுதீனிடம் பேசியபோது தன்னால் பதவியை இராஜினாமா செய்யமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். கடந்த ஆட்சிக் கவிழ்ப்பின்போது, தான் உங்களது கட்சிக்கு வழங்கிய பங்களிப்புக்காக எதிர்க்கட்சியினால் பழிவாங்கப்படுவதாகவும், அவர்களது சதிமுயற்சிக்கு என்னை பலிக்கடாவாக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்துகளில் இருக்கின்ற நியாயங்களை புரிந்துகொண்டுதான் முடிவெடுக்கும் பொறுப்பை கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீமிடம் வழங்கியிருந்தார்.
மறுநாள் திங்கட்கிழமை சந்திக்கு சந்தி கறுப்புக் கொடிகளோடும் தடிகளோடும் கடைகளை மூடச்சொல்லி கோசங்கள் எழுப்பியவாறு நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பொலன்னறுவை முதல் அக்குறணை வரை ஊர்வலமாகச் சென்றனர். அத்துடன் நாட்டின் நாலா பகுதிகளிலும் முஸ்லிம்களை இலக்குவைத்து வன்முறைகளை கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் காணப்பட்டது. ஞானசார தேரர் கூறிய அந்த களியாட்டம் நடைபெறுவதற்கு தயார்நிலையில் இருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். சட்டத்துக்கு முரணான இருந்தாலும் தேரர்களை என்று வரும்போது அவர்கள் விடயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் நெகிழ்வுப்போக்கு குறித்து சகலரும் அறிந்துவைத்திருந்தார்கள். நாடு பற்றி எரியப்போகும் நிலையில், முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை அரசாங்கத்தினால் வழங்கமுடியாது என்ற யதார்த்ததை புரிந்துகொண்டார்கள்.
முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான மாற்றுவழிகள் எதுவுமில்லாத நிலையில், இளைஞர்கள் வன்முறையின்பால் சென்றுவிடலாம் என்ற அச்சம் காணப்பட்டது. இதனால் நாடு மிகவும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்பட்டது. முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஆட்சியில் இருந்தும், தங்களது மக்களை காப்பாற்றமுடியாத கையாலாகாத நிலையில் இருப்பதை உணர்ந்தர்கள்.
இந்நிலையில் முஸ்லிம் அரசியல் அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய பதவிகளை துச்சமென மதித்து, அவற்றை தூக்கியெறிவதற்கு முன்வந்தனர். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நிறைவடைய வேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் என ஒன்பது பேர் தங்களது பதவிகளை தூக்கியெறிந்தனர்.
பதவி துறப்பின் எதிரொலி
முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவிதுறந்த பின்னர், இலங்கை வரலாற்றில் முதல்முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை காணப்பட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியது, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தைக் காட்டியது. இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அரசாங்கம் ஒருவகையான நெருக்குதலுக்குள்ளானது.
பெளத்த மகாசங்கத்தினர் முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை மீளப் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தினர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களை நேரில் சந்தித்து தங்கள் பக்க நியாயங்கள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள். இந்நிலையில் அமைச்சு பதவிகளை பெறவேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் முஸ்லிம் தரப்புகளிடையே வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சு பொறுப்பை ஏற்கவேண்டுமென அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சை பொறுப்பேற்குமாறு அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். இந்த சூழ்நிலையில், அமைச்சுகளை பொறுப்பேற்பது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுன்றத்தில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். ஆனால், எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் அந்த கூட்டம் நிறைவடைந்தது.
ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம் ஆகியோர் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இதனால் முஸ்லிம்களின் ஒற்றுமை முறிவடைந்துபோகும் என்பதை சுட்டிக்காட்டியபோது, தங்களது கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
அதன்பின்னர், கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. பிரதமர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி, பிரதி சட்டமா அதிபர், முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சருமான திலக் மாரப்பன உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன. அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் பெருமளவானவர்களை விடுவிப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உயர்பீட உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை இரவு ரவூப் ஹக்கீமின் வீட்டில் ஒன்றுகூடி இதுதொடர்பில் ஆராய்ந்தனர். விசாரணைகள் நிறைவடையாத நிலையிலும், அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படாத நிலையிலும் எவ்வித காரணங்களுக்காகவும் அமைச்சு பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக காணப்பட்டது.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ரவூப் ஹக்கீமை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவரும் மீள அமைச்சுகளை பொறுப்பேற்பதற்கு தயாராக இருக்கின்றனர். ஆனாலும், முஸ்லிம்களின் ஒற்றுமையை குழப்பும் நோக்கில் அவர்களது செயற்பாடு அமைத்துவிடக்கூடாது என்பதால், சிறிது காலத்துக்கு இப்படியே இருக்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்தார். அதன்பின்னர் அமைச்சுப்பதவி விடயத்தில் உயர்பீடத்தை கூட்டவேண்டிய தேவை இல்லையெனக் கருதி, கூட்டம் அத்துடன் கலைந்தது.
பதவியேற்ற ஐ.தே.க. எம்.பி.க்கள்
ஆனால், மறுநாள் கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம் இருவரும் தத்தமது அமைச்சுகளை மீளப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் அமைச்சுகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் பிரதமர் அதுதொடர்பில் ரவூப் ஹக்கீமுக்கு அறவித்துள்ளார். முஸ்லிம் அரசியல்வாதிகள் நிபந்தனைகளை முன்வைத்து கூட்டாக விலகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரும் அமைச்சுகளை பொறுப்பேற்பது உசிதமானதல்ல என ரவூப் ஹக்கீம் இதன்போது ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாக்குகளில் தங்கியிருக்கின்ற இவர்கள், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து அமைச்சு பதவிகளை துறந்ததே பெரிய விடயம். ஒற்றுமையாக இருந்த முஸ்லிம் கூட்டை உடைத்துக்கொண்டு சென்றாலும், இரு அமைச்சர்களும் தொடர்ந்தும் கூட்டாக இயங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களின் பிரச்சினை விடயத்தில் ஒருமித்து செயற்படுவதற்கும், கூட்டங்களுக்கு சமூகளிப்பதற்கும் அவர்கள் உடன்பட்டுள்ளனர்.
தேசியக் கட்சியில் பிரதான பதவிகளை வகிக்கின்ற இவர்கள், முஸ்லிம் சமூகத்துக்காக ஓரணியில் நின்றது என்பது சாதாரண விடயமல்ல. அமைச்சர் கபீர் ஹாசிம்தான் பதவி விலகுவதற்கான முதலாவது விருப்பத்தை தெரிவித்திருந்தார் என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும். இவர்களை தவிர்த்து, முஸ்லிம் கட்சிகள் மட்டும் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அது இந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்தியிருக்காது என்பது வெளிப்படையான உண்மை.
கேகாலை மாவட்டத்தில் கபீர் ஹாசிம் பெரும்பான்மை வாக்குகளின்றி பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொள்வது அல்லது முரண்படுவது என்பது அவரின் அரசியல் இருப்புக்கு கேள்விக்குறியாக மாறலாம். அதேபோன்று, கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தொகுதியில் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஏ.சி.எஸ். ஹமீட் சேர்த்துவைத்துள்ள வாக்குவங்கியை தக்கவைக்கவேண்டிய தேவை அப்துல் ஹலீமுக்கு இருக்கின்றது.
ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின்மீது சந்தேகப் பார்வை திரும்பியுள்ள நிலையில், முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சரவையில் இருக்கவேண்டியது காலத்தின் தேவையாகும். முஸ்லிம்களுக்கு எதிரான மசோதாக்கள் அமைச்சரவையில் வரும்போது, அதுதொடர்பில் விளக்கமளிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு ஒரு முஸ்லிம் அமைச்சராவது அமைச்சரவையில் இருக்கவேண்டும்.
அப்துல் ஹலீம் முஸ்லிம் சமய விவகார அமைச்சை பொறுப்பெற்றதன் மூலம், கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதற்கு பெரும் பங்காற்ற முடியும். அரபு கிதாபுகள், இஸ்லாமிய சஞ்சிகைகளை ஆதாரமாக வைத்து கைதுசெய்தவர்களை விடுவிப்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் ஊடாக குறித்த கிதாபுகளில் பயங்கரவாத விடயங்கள் இல்லையென்பதை அவர்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
அதுதவிர, பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுவதில்லை என்பதையும் அங்கு நல்லிணக்கம் பற்றிய விடயங்களே போதிக்கப்படுகின்ற என்பதையும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு முஸ்லிம் ஒருவரின் கையில் இருக்கவேண்டும். முஸ்லிம் விவகார அமைச்சு முஸ்லிம் ஒருவரிடம் இருந்தால்தான் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும்.
தலைமைதாங்கும் ரவூப் ஹக்கீம்
இக்கட்டான பிரச்சினைகள் வருகின்றபோது, முஸ்லிம் சமூகத்துக்கு தலைமைதாங்கும் வல்லமை ரவூப் ஹக்கீமிடம் இருப்பதை இன்றை சூழலில் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர். முஸ்லிம் சமூகத்தை விட்டுக்கொடுக்காமலும் பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொள்ளாமலும் காய்நகர்த்தும் ரவூப் ஹக்கீமின் ஆளுமை சாமானியமானதல்ல. பேரினவாத சக்திகள் அவரைநோக்கி விரல் நீட்டமுடியாதளவுக்கு அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
கண்டி மாவட்டத்தில் தெரிவாகும் அவருக்கு கனிசமான சிங்கள மக்கள் வாக்களிக்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு அப்பால் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கென தனியொரு செல்வாக்கு இருக்கின்றது. இந்த முடிவினால் அது பாதிப்படைந்தாலும் பரவாயில்லை, தனக்கான சிங்கள வாக்குகள் குறைந்தாலும் பரவாயில்லை என்று சமூகத்துக்காக தனது பதவியை தூக்கியெறிந்துள்ளார். இதற்கு முன்னர் மூன்று தடவைகள் அவர் அமைச்சு பதவியை தூக்கியெறிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள ஊடகங்களில் பேசுகின்றபோது, அவர்களின் இனவாத கேள்விகளினால் எவ்வித சஞ்சலமும் அடையாமல் நிதானமாக பதில் சொல்லும் பக்குவம் வேறு யாருக்கும் வராது. சிங்கள ஊடகங்களின் நிகழ்ச்சிநிரல் பற்றி தெரிந்திருந்தும், அவர்களின் இடத்துக்கே சென்று பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் உண்மை நிலையை நிதானமாக எடுத்துவைக்கும் பக்குவமான பணிக்கு ரவூப் ஹக்கீமுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளது.
றிஷாத் பதியுதீன் சம்பந்தமாக பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடத்தக்கூடாது என்று தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு முன்னரே ரவூப் ஹக்கீம் சபாநாயகரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த காரணத்தினால்தான் எதிர்க்கட்சி தெரிவுக்குழுவை புறக்கணித்துள்ளது. அதேவேளை, தெரிவிக்குழுவின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டால், அதிலிருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இப்போதைய சூழலில், ரவூப் ஹக்கீம் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகளை வழிநடாத்தவேண்டும். ஆட்சியில் இருக்கின்ற இரண்டு முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் ரீதியான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் விடயங்களை செய்யவேண்டும். இந்த ஒற்றுமை மூலம் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகள் களையப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டு, விரைவில் இயல்புநிலை வழமைக்கு திரும்பவேண்டும்.
(நன்றி: நவமணி – 21.06.2019)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.