கேம எபாவெலா தேரரின் 'வானத்தில் ஒரு உண்ணாவிரதம்'(ஸபர் அஹ்மத்)

கேம எப்பாவலா தேரர் திடீர் என்று எழுந்து நின்றார்.அவருடன் தடித்தடியாய் நான்கு பேர் எழுந்தார்கள்.தேரரின் வலது பக்கம் இரண்டு பேரும் இடது பக்கம் இரண்டு பேருமாக சேர்ந்து கொண்டார்கள்.விமானத்தின் நடுமையத்திற்கு வந்து 'கருணாகரல ஸவன் தென்ன ' என்று சிங்களத்தில் உரத்துச் சொன்னார் தேரர்...

வாட்காக்களும் குளிர்பானங்களும் ஏந்தியவண்ணம் பயணிகள் வேடிக்கை பார்க்கத் தொடங்க, விமானப் பணிப்பெண்களின் நெற்றிப் பரப்பு எங்கும் ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஆச்சர்ய சுருக்கங்கள் ,எல்லை தாண்டி வில்லு போல வளைந்து இருந்த மெருகூட்டப்பட்ட புருவங்கள் வரை தொடர , உறங்கிக் கொண்டு இருந்தவர்கள்,மானிட்டர் திரையில் படம் பார்த்தவர்கள்,பாட்டுக் கேட்டவர்கள், 'தி வீல்ஸ் ஒன் தி பஸ்' என்று கத்திக் கொண்டு இருந்த வெள்ளைக்காரச் சிறுவன் உட்பட அத்தனைபேரும் அலேர்ட்...

தேரர் சிங்களத்தில் பேசத் தொடங்கினார்..." இது எனது முதல் விமானப் பயணம்.நான் பயணம் செய்து கொண்டிருப்பது எமது நாட்டின் தேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில்...ஆனால் பாருங்கள்.இங்கே என்ன தேசியம் இருக்கிறது..ஆயுபோவனில் கூட ஆங்கில உச்சரிப்பு மிதக்கிறது..ஏர் இந்தியா விமானத்தில் இந்தியாவின் தேசிய கீதம் பாடுகிறார்கள்..ஏன் நமது நாட்டின் தேசிய கீதத்தை பாடக் கூடாது..

அதைவிடுங்கள்.கட்டார்,எமிரேட்ஸ்,எதிஹாட் விமான சேவைகளின் விமானங்களில் ஒரே அரபுமயம்..பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் குர் ஆனின் வசனங்கள் ஓதப்படுகின்றன..இது பெளத்த நாடு..நாம் ஏன் இதே போல பிரித் ஓதக் கூடாது ?விமானியின் அறையில் இருந்து வரும் அறிவித்தல்கள் சிங்களத்தில் வர வேண்டும்..நமது சுதேச உணவுப் பழக்கம் அழிந்து போய்விட்டது..

மரவள்ளிக் கிழங்கு, ,வற்றாலை கிழங்கு,தேங்காய்ச் சம்பல்' என்று எதுவும் இதில் பரிமாறப்படுவதில்லை..நமக்கென்று ஒரு அடையாளமே இல்லாது போய்விட்டது...இப்போது விமானம் புறப்பட்டு ஒரு மணித்தியாலம் ஆகிறது..லண்டன் போய்ச் சேர இன்னமும் ஒன்பது மணித்தியாலங்கள் இருக்கின்றன..அதுவரை சாகும் வரை  உண்ணாவிரதத்தில் இறங்கப் போகிறோம்..எம்மைத் தாண்டி ஒருவரும் நகரக் கூடாது...யாருக்கும் இனி சாப்பாடு போகக் கூடாது..நான் சொல்கிற மாதிரி இந்த விமான சேவை மாற வேண்டும்.."..சொல்லிவிட்டு அப்படியே வழியை மறித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டார்கள்.....

எழுதிக் கொண்டு இருக்கும் ' வானத்தில் ஒரு உண்ணாவிரதம்' சிறு கதையில் இருந்து.......
Share:

No comments:

Post a Comment