இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறை  
செலுத்தியுள்ள உலக முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி
...................................................................................................................... 
பைசல் காசிம் தெரிவிப்பு 
....................................................
உலக முஸ்லிம் நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான ஒன்றியம் [ OIC ] இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தியுள்ளமை தொடர்பில் இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளனர்.இந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே நாம் எமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளோம்.

அத்தோடு நின்றுவிடாமல் நாம் முஸ்லிம் நாடுகளின் உதவிகளையும் நாடினோம்.எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்த முஸ்லிம் நாடுகள் இப்போது களத்தில் குதித்துள்ளன.குறிப்பாக,உலக முஸ்லிம் நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான ஒன்றியம் [ OIC ] இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.

அதனடிப்படையில் உடனடியாக இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உடன் உறுதி செய்யுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.முஸ்லிம் நாடுகளின் இந்த நடவடிக்கை இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளும் தலையீடுகளும் தொடர வேண்டும்.இலங்கையின் அபிவிருத்திக்காக உதவிகளை அள்ளி அள்ளி வழங்கும் முஸ்லிம் நாடுகள் எமது பிரச்சினைகள் தொடர்பில் தலையிடுவதற்கான பூரண உரிமைகளைக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.

இந்த நாடுகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் நான் இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.-என்றார்.

[ஊடகப் பிரிவு]

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.