83 ஆம் ஆண்டு அரச ஆதரவுடன் காடையர்களால் தமிழ் மக்கள் மீது இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பீக்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்தனர்.ஆனால் ஜே ஆர் அரசில் தொண்டமான் போன்ற "ஆமா சார் களும் " இன்னும் ஒன்று இரண்டு பஞ்சிகாவத்தை ஸ்பேர் பார்ட்ஸ்களும் இருந்ததால் இவர்களைக் கொண்டு வந்து ஷோ ரூமில் நிறுத்தி "இதோ பார்,தமிழருக்கு இன்னமும் ஜனநாயகம் சலிக்கவில்லை"என்று ஜே ஆர் அரசு உலகத்திற்கு அடித்து சொன்னது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சாமானிய முஸ்லிம்கள் மேல் தொடுக்கப்பட்ட உளவியல் போர்,குப்பை போலக் குவிந்த பொருத்தமற்ற கைதுகள்,மே 13 ,14 தினங்களில் குளியாப்பிட்டியிலும் மினுவாங்கொடையிலும் முஸ்லிம்களின் வீடு ,வியாபாரஸ்தலங்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டம் ,ரத்னவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பதட்டம் என்று அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது மன வளர்ச்சியடைந்த மனிதர்கள் வாழும் நாடுகளில் எதெல்லாம் நடக்காதோ அதெல்லாம் இங்கே நடந்தது.சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை சரித்திரத்தில் திடுக்கிடும்விதமாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் அத்தனை பேரும் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.1983இல் ரணிலின் மாமா ஜே ஆருக்கு தொண்டமான் வகையறாக்கள் கெபினட்டில் பேச்சுத் துணைக்கு இருந்தது போல இங்கே ஒருவரும் இருக்கவில்லை.இந்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்து முக்கியத்துவம் பெற்ற அரசியல் பின்னணியே இதுதான்.

மாபெரும் ஒற்றுமை கரை புரண்டு வந்துவிட்டது என்று போராளிகள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட "சிங்கள வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற ரவூப் ஹக்கீம்,கபீர் ஹஷீமும் ,ஹலீம் போன்றவர்கள் பதவி விலகியதுதான் சாதனை" என்று போகிற போக்கில் புளகாங்கிதம் அடைந்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ஹிஸ்புல்லா.பிரிவினையின் நச்சுவிதை விழுந்த இடம் இதுதான்.இதைத் தூக்கிப் பிடித்த சிங்கள மீடியாக்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் பெரும் பிரச்சாரமாக்கின. இப்படித்தான் அதிகமான உணர்ச்சிவசத்தால் போடும் நோபோல்களுக்கு Free hit நினையாதபுரத்தில் இருந்து  கிடைத்துவிடுகிறது.

இப்போது மீண்டும் கபீர் ஹஷீமும் ஹலீமும் பதவியைப் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.அவர்களது இருப்பில் சிங்களம் கலந்து இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் வந்த வினை.முஸ்லிம் அமைச்சர்கள் அத்தனை பேரும் அரசாங்கத்தில் இருந்து கூட்டாய் ஆட்டமிழந்தபோது சாமானிய முஸ்லிம் மக்கள் மேல் அதிகாரங்களால் பிரயோகிக்கப்படும் நெருக்குவாரங்கள் குறைந்து இருந்தன.பெளத்த மகா சங்கத்தினர் சரித்திரத்தில் முதல் தடவையாய் "என்னடாப்பா உம் பிரச்சினை "என்று கேட்டார்கள்.சர்வதேசத்தில் கூனிக் குறுகிப் போய் திரைச் சீலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் நிலமைக்கு இலங்கை போனது.ஆனால் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை தீர்க்கப்படவே இல்லை.மினுவாங்கொட குளியாப்பிட்டிய பகுதிகளில் கைது செய்யபட்ட வன்முறைக் கும்பல் எல்லாம் விடுவிக்கப்பட்டு இருக்கிறது.பயங்கரவாதக் கும்பலின் ஒட்டுமொத்த நெட்வேர்க்கையும் நிர்மூலமாக்கிய காவல்துறைக்கு கடைசியில் இத்தனை கோடி சொத்து இழப்புக்கு ஆலோசனை வழங்கிய இனவாதக் கும்பலின் ஆதி மூலத்தைக் கண்டுபிடித்து பகிரங்கப்படுத்த முடியாமல் போனது.

இந்த விவகாரத்தில் மிக நிதானமாக நடந்து கொண்ட ஒரே ஒருவர் யாரென்றால் அது ரவூப் ஹக்கீம் தான்.இனவாதக் கூடாரமான ஹிரு சலகுனவில் பேசுவதாகட்டும் சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு பேசுவதாகட்டும் ,தென் இந்திய தொலைக்காட்சி இல் பேசுவதாகட்டும் மிகச் சிறந்த ராஜதந்திர ஆட்டம் அது.மும்மொழி வித்தகர் அவர்.இதைச் சொன்னதற்காக அந்த பெட் ஸ்கேனர் மொஹம்மட் கணக்காய் ஹக்கீமைக் கொண்டாடிவிடாதீர்கள்.விமர்சனத்துடன் தூரத்தில் இருந்து பாருங்கள்.

இப்போது பிரித்தாளும் தந்திரத்தினால் மீண்டும் இந்தக் கூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது.சிங்களக் கலப்பின்றி தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்கவில்லை.ஹக்கீமைத் தவிர கபீர் ஹஷீமும் ஹலீமும் ரணிலுடன் சேர்ந்து கொண்டனர்.இத்தனைக்கும் ரணில் என்ற தோல்விகளின் கடவுளின் கைவசம் பாதுகாப்பு அமைச்சு கூட இல்லை.அது ஜோக்கரிடம் இருக்கிறது.இனி என்ன நரகத்தின் இடை வேளை முடிந்தது.மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் காட்சிகள் ஆரம்பம்....கெமரா ஆக்‌ஷன்.

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.