ஜனாதிபதியின் பதவிக்கால ஆரம்பம் எப்போது?
================================
வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பது 19 அமுலுக்கு வந்த திகதியிலிருந்தா? அல்லது தெரிவுசெய்யப்பட்ட தினத்திலிருந்தா? என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள்  19 அமுலுக்கு வந்த திகதி இலிருந்து ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் சர்வஜன வாக்கெடுப்பின்றி பதிக்காலத்தை 5 வருடமாக குறைத்தது பிழையென்றும் சுட்டிக்காட்டியதாக இன்றைய Sunday Times தெரிவிக்கின்றது.

இந்த வாதத்தின் பின்னணி அரசியலமைப்பு சட்டம் முன்னோக்கியே அல்லாது பின்னோக்கி தாக்கம் செலுத்தாது; என்பதாகும். அதாவது திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு முன் நடந்தவைகளில் அவை தாக்கம் செலுத்தாது; என்பதாகும். இது பொதுவான நிலைப்பாடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் விதிவிலக்கில்லாத விதிகளும் கிடையாது.

மறுபுறம் இலங்கையில் post enactment judicial review இல்லை. ஒரு சட்டம் ஆக்கப்பட்டபின் அதன் வலிவுத்தன்மை தொடர்பாக கேள்வியெழுப்ப முடியாது. இந்தியாவில் முடியும்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் 19 இற்குமுன் ஆறு வருடம் என சரத்து 30(2) கூறியது. 19 இன் கீழ் திருத்தப்பட்ட சரத்து 30(2) இன்படி 5 வருடங்களாகும். இங்கு கேள்வி இந்த 5 வருடமென்பது தெரிவுசெய்யப்பட்ட தினத்திலிருந்தா? அல்லது திருத்தம் அமுலுக்கு வந்த தினத்திலிருந்தா? அரசியலமைப்புச்சட்டம் அமுலுக்கு வரமுன் நடந்தவைகள் மீது தாக்கம் செலுத்தாதே; என்பதாகும்.

இங்குதான் நாம் தற்காலிக சரத்துகளுக்குள் ( transitional provisions) செல்லவேண்டும். இதன் பிரகாரம் ( S 49(1)(b)  குறித்த திகதிக்குமுன் ( அமுலுக்கு வந்த திகதி ) பதவியில் இருந்த ஜனாதிபதி இதனால் ( 19 வது திருத்தத்தால்) திருத்தப்பட்ட அரசியலமைப்பின் சரத்துகளுக்கேற்ப பதவி வகிப்பார்.

இங்கு அவதானிக்க வேண்டியவை:

(1) 19 இற்கு முன்பிருந்த ஜனாதிபதியின் பதவி தொடர்வதையே 19 கூறுகிறது. எனவே ஜனாதிபதியின் பதவி 19 இல் இருந்து ஆரம்பித்திருக்க முடியாது. இங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற continue என்ற சொல்லிற்கு தொடர்வது என்ற அர்த்தமே தவிர ஆரம்பித்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்க முடியாது. 19 இற்கு முன் ஆரம்பிக்காத ஒன்று 19 வரும்போது இருந்திருக்க முடியாது தொடர்வதற்கு. 

(2) பதவிக்காலம் 19 ஆல் திருத்தப்பட்ட சரத்தின்படி என்று கூறுவதால் அத்திருத்தத்தின்படி பதவிக்காலம் 5 வருடம்.

ஆரம்பித்தது தேர்தல் நிறைவடைந்தவுடனாகும். எனவே, சந்தேகமில்லாமல் பதவிக்காலம் தேர்தல் முடிந்ததிலிருந்து 5 வருடமாகும்.

எனவே, இவ்வருட இறுதிக்குள் தேர்தல் நடக்கவேண்டும்.

அடுத்தது, ஆறு வருடம் மக்கள் ஆணைபெற்றவரின் பதவிக்காலத்தை மக்கள் அங்கீகாரமின்றி பாராளுமன்றம் 5 வருடங்களாக குறைக்க முடியாது; என்பது.

உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் பதவிக்காலத்தை மக்களின் அங்கீகாரமின்றி நீட்டமுடியாது; ஆனால் சுருக்கலாம்; ஏனெனில் அது அம்மக்களிடம் மீண்டும் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. எனவே மக்களின் இறைமை மீறப்படாது; என்று குறிப்பிட்டிருக்கின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.