50+ உருவாக்கியுள்ள சமநிலையும்; முஸ்லிம்களுக்கான சாதகமும்.........
எந்தத் தேர்தலிலும், ஒரு சிறுபான்மை/சிறு கட்சி ஒரு தேர்தல் கூட்டணியில் சேர்ந்தால் - அவர்கள் மாற்றுக் கூட்டணிக்கு "தேவையில்லாதவர்கள்" அல்லது "எதிரி" என்ற நிலைக்கி ஆளாகி விடுவதுதான் வழக்கம்.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது. எந்த கூட்டணியில் நின்றாலும் மற்ற கூட்டணியிலும் நமது தேவை உணரப்படப்போகிறது.
உதாரணமாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் "X" என்ற கட்சி "Y" என்ற கூட்டணியோடு சேர்ந்தால் - "Z" என்ற கூட்டணி X என்ற கட்சியை தேவையில்லாதவராக அல்லது எதிரியாக பார்க்கின்ற மனநிலையிலிருந்து தவிர்ந்துகொள்ளும். உறவு வைத்திருக்கவே விரும்பும்.
இந்த சமநிலை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகிறது.
ஏன்என்றால், SLPP யோ, UNP யோ வேறு யாராக இருப்பினும் அளிக்கப்படப்போகும் வாக்குகளில் 50+ என்ற நிலையை அடையப்போவதில்லை.
அதனால், மாற்றுக் கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகளில் இரண்டாவது தெரிவு வாக்கை வளைத்துப்போடுவதில் கவனமாக இருப்பார்கள். அதனால், தமக்கு இரண்டாவது தெரிவு வாக்குகளை வழங்கக்கூடிய கட்சிகளிடம் அவை மாற்று முகாமில் இருந்தாலும் ஒரு மென்போக்கையே கைக்கொள்ள முனைவர்.
இது முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு விதமான நன்மைகளை பெற்றுத்தரும்
1) முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான இனவாத பிரச்சாரத்தை கட்டுப்படுத்தும்
2) எல்லா கூட்டணிகளும் முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும்
இந்த சமநிலை ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு பெரும் சாதகமான நிலையாக பார்க்க வேண்டும். ஏன்எனில், எதிர்வரும் தேர்தலில்;
👉🏿பொருளாதார வளர்ச்சி
👉🏿வேலைவாய்ப்பு
👉🏿அந்நிய செலாவணி
👉🏿வறுமை ஒழிப்பு
👉🏿புதிய முதலீடு
👉🏿சேவைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி
👉🏿இனப்பிரச்சினை தீர்வு

என்பவற்றை பற்றி பேசுவதை விட,
👉🏿அடிப்படைவாதம்
👉🏿தேசிய பாதுகாப்பு

என்ற இரண்டு விடயங்களே அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக, "பேசுபொருளாக" மாறி இருக்கிறது. அதனை அடிப்படையாக வைத்தே தமது வேட்பாளர் அறிமுகத்தையும் செய்திருக்கிறார்கள்.
அதாவது, இந்த இரண்டு விடயங்களும் "முஸ்லிம்களின் தலையிலேயே விடிய" இருந்தது.
இவ்விரண்டு விடயங்களின் போர்வையிலும் முஸ்லிம்களின் மீதான இனவாதத்தை கொட்டித் துளாவி - நாட்டுபுற சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான - தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தலை பிரகடனம் செய்யும் நோக்கம் இருந்தது.
ஆனால், மேற்கூறிய சமநிலை இவர்களின் இந்த எண்ணத்தில் இடி விழ வைத்துள்ளது. இப்போது சிறுபான்மை / சிறு கட்சிகளுக்கு எதிராக பேச வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கும் நிலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களை இனவாதத்திற்கு காவுகொடுக்கும் மிகப்பெரும் பயங்கர நிலவரத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதில் இந்த சமநிலைக்கு பெரும்பங்குண்டு என்பதை யாரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

(ஏ.எல்.தவம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.