ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற நிலையில் இரண்டு பிரதான தேசிய கட்சிகளும் யாரை வேட்பாளராக நிறுத்தப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் உள்ளது. 

பெரும்பான்மை சமூகத்தினர் அவ்வாறு எதிர்பார்ப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களும் அவ்வாறு எதிர்பார்ப்பதுதான் அப்பாவித்தனமாகும். 

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துவருகின்ற இரண்டு பிரதான கட்சிகளும் மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்தி கொள்வதற்காக பச்சை என்றும், நீலம் என்றும் நிறத்தில் வேறுபடுத்திக் கொண்டார்களே தவிர, அவர்களது கொள்கைகளில் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. 

அபிவிருத்தி என்ற போர்வையில் சில சலுகைகளை காண்பித்துக்கொண்டு தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவுவதுடன், திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் இனப்பரம்பலை சிதைவடைய செய்வது என்பது இவர்களது பிரதான கொள்கைகளாகும். 

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற பலத்த போட்டி ஏற்படுகிறது. 

இதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அம்மக்களின் பிரதிநிதிகளுடன் தேர்தல் காலங்களில் ஒப்பந்தங்களை செய்து கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் அனைத்து ஒப்பந்தங்களும் காலாவதியாகிவிடும்.

மீண்டும் அடுத்த தேர்தல் வருகின்றபோது இரண்டு கட்சிகளும் புதிய வேட்பாளர் ஒருவரை காட்சிப்படுத்தி மீண்டும் சிறுபான்மை சமூகத்தை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்வார்கள். 

இதுதான் இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரைக்கும் நடைபெற்று வருகின்ற தொடர்கதையாகும். 

ஆனாலும் நாங்கள் தொடர்ந்து இந்த இரண்டு பிரதான கட்சிகளினாலும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்று தெரிந்திருந்தும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இன்னமும் இந்த இரண்டு தேசிய கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்து வருவது ஆச்சர்யத்தை தருகின்றது. 

இவ்விரண்டு கட்சிகளின் கொள்கைக்கு முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளை கொண்ட மூன்றாம் தரப்பு பற்றி தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது கவலையை தருகின்றது. 

இந்த நாட்டை சிங்களவர்களை தவிர வேறு யாரும் ஆட்சி செய்யப் போவதில்லை. அந்தவகையில் பச்சை நீல நிற கட்சிகளின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாற்றமான கொள்கைகளை கொண்ட ஜே வீ பி என்னும் சிங்கள கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி அமைப்பது பற்றி ஏன் முயற்சிக்கவில்லை ? 

ஜே வீ பி தலைமையில் நீலம், பச்சை ஆகிய கட்சிகளை சார்ந்திருக்கின்ற சிங்கள இடதுசாரி கட்சிகளையும், அதிருப்தியாளர்களையும் ஒன்றிணைப்பதுடன், தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்தால், தங்களை ஒரு சக்தியாக காண்பிப்பதன் மூலம் இவ்வளவு காலமும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வந்த இரண்டு பெருந்தேசிய கட்சிகளுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க முடியும். 

அத்துடன் இரண்டாக பிளவுபட்டுள்ள பெரும்பான்மை சமூகத்தை மூன்றாக பிளவு படுத்துவதுடன் குறைந்தது தமிழ் முஸ்லிம் பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவுகின்ற திட்டத்தையாவது தற்காலிகமாக தடுத்து நிறுத்த முடியும். 

இது சாத்தியப்படுமா என்று சிலர் கேள்வி கேட்கக்கூடும். ஆம். கொளுத்த பணம் இருந்தால் இது சாத்தியமாகும். 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.