ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்
பாகம்-3
=================================
வை எல் எஸ் ஹமீட்

பாகம்-2 இல் 19இன் கீழ் அடுத்து வரப்போகும் ஜனாதிபதியின் முக்கிய அதிகாரங்கள் எவை? எனப்பார்த்தோம். இவ்வதிகாரங்கள் வித்தியாசமான சூழ்நிலைகளின்கீழ் எவ்வாறு பாவிக்கப்படலாம்? என்பதைப் பார்ப்போம்.

ஜனாதிபதியும் பாராளுமன்றமும் வெவ்வேறு பக்கம்
—————————————————————-
ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறல்
——————————————————
ஜனாதிபதி ஒரு கட்சியில் இருந்து தெரிவுசெய்யப்பட, இன்னுமொரு கட்சி சுயமாக அறுதிப்பெரும்பான்மை பெறுகின்றபோது ஜனாதிபதி அக்கட்சியின் தலைவரையே பிரதமராக நியமிக்க வேண்டும். “ தான் பெரும்பான்மை இருப்பவராக கருதுபவரை நியமித்தல்” என்பதை இங்கு பாவிக்கமுடியாது. அது அப்பட்டமாக அரசியலமைப்பு சட்டத்தை மாத்திரமல்ல, அடிப்படை ஜனநாயக விழுமியத்தையும் மீறியதாக அமையும். ஆனாலும் நமது நாட்டைப் பொறுத்தவரை நிச்சயமாக எதையும் கூறமுடியாது.

அரசியலமைப்பு தெட்டத்தெளிவாக கூறிய ஒரு விடயத்தை மீறி பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் ஒரு ஜனாதிபதி இந்த நாட்டில் இருந்தார்; அவருக்கு அவ்வாறு செய்யலாம்;  என்று சட்ட ஆலோசனை வழங்குவதற்கும் சிலர் இருந்தார்கள்; என்ற ஒரு நாடு இது.

மட்டுமல்ல, பாராளுமன்றம் நம்பிக்கை இல்லை; என்றதன் பின்னும் சாக்குப்போக்குச் சொல்லி அதிகாரத்தில் இருந்தவர்களும் அதற்கும் சட்ட ஆலோசனை வழங்கியவர்களும் உள்ள நாடு இது.

இந்நிலையில் தனது கட்சியல்லாத ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்றபோதிலும்கூட, தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமித்துவிட்டு, பெரும்பான்மையை நிரூபிக்க  அடுத்த கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; ஆனாலும் இதற்கான சாத்தியம் மிகமிக குறைவு.

அதையும்தாண்டி ஜனாதிபதி அவ்வாறு செய்தால் அறுதிப்பெரும்பான்மை பெற்ற கட்சியின் உறுப்பினர்கள் கட்டுகோப்பாக இருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தோற்கடிக்கலாம். ( தோற்கடித்தாலும் குழப்பமும் செய்யலாம்- இது நமது அனுபவம்). அங்கத்தவர்கள் கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால் பெரும்பான்மை பெற்றும் பயனில்லை; என்ற நிலையும் வரலாம். ஆனாலும் இதற்கான சாத்தியம் மிகவும் குறைவே; ஏனெனில் தெரிவுசெய்யப்படுபவர்களெல்லாம் மைத்திரியாக இருப்பார்கள்; என நினைக்க முடியாது.

அறுதிப்பெரும்பான்மை பெறாமல் அதிகூடிய ஆசனங்களப் பெறல்
———————————————————-
2004ம் ஆண்டு சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி அறுதிப்பெரும்பான்மை பெறாமல் ஏனைய கட்சிகளைவிட அதிகூடிய ஆசனங்களைப் பெற்றதுபோல் ( பெரும்பான்மைக்கு எட்டு ஆசனங்கள் தேவைப்பட்டன) ஜனாதிபதியின் கட்சியல்லாத இன்னுமொரு கட்சி அதிகூடிய ஆசனங்களைப்பெற்றுள்ளது; என வைத்துக்கொள்வோம். பெரும்பாலும் அவ்வாறான முடிவுகள்தான் கடந்த காலங்களில் வந்திருக்கின்றன; ஒரு சில விதிவிலக்குகள் இருந்தபோதும். இப்பொழுது இரு சூழ்நிலைகள் எழலாம்.

ஒன்று: அந்தக்கட்சி எனைய சிறிய கட்சிகளின் தயவுடன் பெரும்பான்மையைப் பெறல்.

இரண்டு: எந்தச் சிறிய கட்சியின் ஆதரவும் கிடைக்காமையால் அக்கட்சி, அதிகூடிய ஆசனம் பெற்றபோதும் பெரும்பான்மை இன்றி இருத்தல். 2004ம் ஆண்டு இருந்த சூழல் இதுதான்; ஆனாலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றது ஜனாதிபதியின் கட்சி என்பதால் பெரும்பான்மை பெறுவதற்கு முன்பே பிரதமரை நியமித்துவிட்டு பெரும்பான்மையைத் தேடுகின்ற வேலையை சந்திரிக்கா செய்தார்.

அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சி வேறு கட்சியென்றால் பெரும்பான்மை இல்லாமல் அக்கட்சியிலிருந்து பிரதமரை நியமித்துவிட்டு அதன்பின் பெரும்பான்மையைத் தேடுவதற்கு ஜனாதிபதி இடமளிப்பாரா? மாறாக தனது கட்சி இரண்டாவது இடத்தில்தான் இருந்தாலும் தனது கட்சியில் இருந்து பிரதமரை நியமித்துவிட்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குவார்.

முதலாவது சூழல்
———————-
பெரும்பான்மையை  சிறிய கட்சிகளின் தயவுடன் பெற்றுக்கொண்டு அக்கட்சி ஜனாதிபதியை அணுகினால் அக்கட்சியிலிருந்துதான் பிரதமரை நியமிக்கவேண்டும். ஆனால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி இன்னுமொரு மைத்திரியாக இருந்தால் அவ்வாறு பெரும்பான்மை காட்டினாலும் எதையாவது காரணத்தைச் சொல்லி மறுத்து தனது கட்சியிலிருந்து பிரதமரை நியமித்துவிட்டு பெரும்பான்மை தேடலாம்.

இதற்குக் காரணம், சரத்து 42(4) இல் உள்ள , “ in the President’s opinion “ அதாவது ஜனாதியின் அபிப்பிராயத்தில்” என்ற சொற்றொடராகும். அவ்வாறில்லாமல் “ பெரும்பான்மை உள்ளவரை பிரதமராக நியமிக்க வேண்டும்” என்று நேரடியாக எழுதியிருந்தால் பெரும்பான்மையை ஏதோ ஒரு விதத்தில் நிரூபித்ததன்பின்தான் பிரதமரை நிரூபிக்க முடியும். ஜனாதிபதி அதில் விளையாட முடியாது.

கடந்த அரசாங்கத்தின்  சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் ( APRC) இந்த “ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில்” என்ற சொற்றொடர் புதிய யாப்பில் உள்வாங்கப்படக்கூடாது; என நான் வாதாடியிருக்கின்றேன்.

அமைச்சர்களை நியமித்தல்
————————————
அமைச்சர்களின் எண்ணிக்கை, அமைச்சர்களை நியமித்தல் பற்றி பாகம்-2 இல்  குறிப்பிடப்பட்டுள்ளது. வாசிக்கவும்.

ஜனாதிபதி அமைச்சுக்களை வைத்திருத்தல்
———————————————————
ஒரு அமைச்சராக ஒரு பா உறுப்பினரைத்தான் நியமிக்க முடியும்; ஜனாதிபதி தனக்குத் தேவையான அமைச்சுக்களை வைத்திருக்கலாம்; என்று ஏற்கனவே இருந்த சரத்து 19 இல் நீக்கப்பட்டுவிட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கு மாத்திரம் இடைக்கால ஏற்பாட்டினூடாக மூன்று அமைச்சுக்களை மாத்திரம் வைத்திருக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; எனவே, அடுத்த ஜனாதிபதி எந்த அமைச்சையும் வைத்திருக்க முடியாது; என்ற பொதுவான கருத்தை பாகம்-2 இல் பார்த்தோம்.

அதேநேரம் சரத்து 4(b) இல் “ இலங்கையின் பாதுகாப்பு ஜனாதிபதிக்குரியது” எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

இப்பொழுது கேள்வி
—————————-
இப்பொழுது இங்கு எழுகின்ற கேள்வி, ‘ பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்னகத்தே வைத்திருக்க முடியுமா? என்பதாகும். இல்லை. ஜனாதிபதி பா உறுப்பினர் இல்லை; எனவே, முடியாது; என்பது பதிலானால் இலங்கையின் பாதுகாப்பு ஜனாதிபதிக்குரியதே! இதனை சந்திரிக்காவின் ஆட்சியில் உயர்நீதி மன்றமும் உறுதிப்படுத்தி பாதுகாப்பை இன்னுமொருவருக்கு கையளிக்க முடியாது; எனக்கூறியிருக்கின்றதே! எனவே, பாதுகாப்பு அமைச்சை கையளிப்பதெப்படி? என்ற எதிர்க்கேள்வி எழும்.

இங்கு ஆராய வேண்டியது
———————————-
ஜனாதிபதி பா உ இல்லை என்பது அமைச்சுக்களை வைத்திருக்க ஒரு தகுதியீனமா? என்பதாகும். ஆம் என்போர் முன்வைக்கக்கூடிய வாதம், ஒரு பா உ வைத்தான் அமைச்சராக நியமிக்க முடியும், ஆனால் இதுவரை அரசியலமைப்பினுடாக ஜனாதிபதிக்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டன. அது அடுத்துவரும் ஜனாதிபதிக்கு இல்லை; என்பதாகும். ( மேலதிக விளக்கத்திற்கு பாகம்-2 பார்க்க)

இதற்கு எதிராக இரண்டு பிரதான வாதங்கள் இருக்கின்றன.

ஒன்று: ஜனாதிபதி அமைச்சுக்களை தன்னகத்தே கொண்டிருப்பதால் அவர் அமைச்சரா? பலரும் ஆம் அமைச்சர் என்றே பொதுவாக கூறுவார்கள்.

இது சரியா? என்பதற்கு இது தொடர்பான சில சரத்துக்களை ஆராய்வோம்.
1. பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளிருந்து அமைச்சர்களை நியமிக்கவேண்டும். சரத்து 43(b)
இங்கு கவனிக்கவேண்டியது: அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள்; என்பதில் உள்ள ‘நியமித்தல்’ என்ற சொல்லாகும். அவ்வாறு நியமிக்கப்படுகின்றவர் ஒரு பா உ ஆக இருக்க வேண்டும். அவ்வாறாயின் ஜனாதிபதி தன்னைத்தானே அமைச்சராக நியமிக்கின்றாரா? என்றால் நிச்சயமாக இல்லை.

இது தொடர்பாக 19 இற்கு முந்திய சரத்து 44(2) பின்வருமாறு கூறுகின்றது. “ எந்தவொரு விடயாதானத்தையும் தொழிற்பாட்டையும் தனக்கு வைத்துக்கொள்ளலாம் ( subjects and functions) அதேபோன்று எந்தவொரு அமைச்சருக்கும் குறித்தொகுக்காத எந்த விடயதானம், தொழிற்பாடுகளுக்குப் பொறுப்பாகவும் இருக்கலாம்; அத்தேவைக்கான அமைச்சுக்களையும் தீர்மானித்துக் கொள்ளலாம்”.

இங்கு தன்னைத்தானே அமைச்சராக ஜனாதிபதி நியமிக்கவில்லை; அவரை அந்த விடயத்தில் அமைச்சரென அழைப்பதற்கு. மாறாக ஜனாதிபதியானவர் தன்னுடன் குறித்த அமைச்சுக்களை வைத்துக்கொண்டிருக்கின்றார். ஆனாலும் அவர் ஜனாதிபதியேதவிர அமைச்சரல்ல.

அதேநேரம், அச்சரத்து மேலும் இவ்வாறு கூறுகின்றது; “ அரசியலமைப்பிலோ அல்லது வேறு சட்டங்களிலோ குறித்த விடயதானங்களுக்கான அமைச்சராக குறிப்பிடப்படுகின்ற இடங்களில் அக்குறிப்பிடுகை ஜனாதிபதியைக் குறிப்பிடுவதாக வாசிக்கப்படவும் பொருள்
கொள்ளப்படவும் வேண்டும். “ accordingly any reference in the Constitution or any written law to the Minister to whom such subject or function is assigned, shall be read and construed as reference to the President “

இங்கு கவனித்தால் “ ஜனாதிபதியையே அவ்வமைச்சராக கொள்ளப்பட வேண்டும்”; என குறிப்பிடப்படவில்லை. “ The President shall be deemed to be the Minister in respect of such reference “ என்று குறிப்பிடப்படவில்லை.

இதே விதமாகத்தான் 19 திருத்தத்தின் இடைக்கால ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரேயொரு வித்தியாசம் “ எந்தவொரு அமைச்சும், என்பதற்கு பதிலாக குறித்த மூன்று அமைச்சு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயங்களில் ‘ அமைச்சர்’ என்பது ஜனாதிபதியைக் குறிப்பிடுவதாக கொள்ளவேண்டுமேதவிர, ஜனாதிபதியை அமைச்சராக கருதவேண்டுமென்பதல்ல. எனவே, பாராளுமன்ற உறுப்பினரைத்தான் அமைச்சராக நியமிக்கவேண்டுமென்பது ஜனாதிபதி விடயத்தில் பொருந்தாது.

இந்த நிலைப்பாட்டிற்கு  மேலும் வலுச்சேர்க்கும் சரத்துக்கள்:
19 இற்கு முன் சரத்து 35(3) கூறியது: இச்சரத்தினால் ஜனாதிபதிக்கெதிராக வழக்குத் தொடுப்பதை தடுக்கின்ற பாதுகாப்பு ஜனாதிபதிவசம் உள்ள விடயதானங்கள் ( subject and function)  தொடர்பாக செல்லுபடியாகாது.

இங்கும் ஜனாதிபதியின்வசம் உள்ள என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர ஜனாதிபதி அமைச்சராக தொழிற்படுகின்ற விடயங்களில் என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோன்று 19வது திருத்தத்தின் 35 வது சரத்திலும் ‘ ஜனாதிபதிக்கெதிராக தனிப்பட்டரீதியில் வழக்குத்தொடுக்க முடியாது, உத்தியோகபூர்வ ரீதியிலான அவரது செயல்களுக்கு எதிராக சட்டமா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு வழக்குத் தொடுக்கமுடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு விடயதானம் என்றோ அமைச்சு என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, 19 இன் இடைக்கால ஏற்பாடு வெளிப்படையாக மூன்று அமைச்சுக்களை வைத்திருக்க அனுமதியளித்தபோதும் அவற்றை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்குள்தான் இனங்கண்டிருக்கின்றதே தவிர அவரை அமைச்சராக இனங்காணவில்லை.

சுருங்கக்கூறின் ஜனாதிபதியை அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும் ஒரு அமைச்சராக குறிப்பிடப்படவில்லை. அவரின் கீழ் வருகின்ற அமைச்சுச் செயற்பாடுகள் அனைத்தையும் அவர் ஜனாதிபதி என்ற முறையிலேயே செய்கின்றார்.

எனவே, ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத்தான் அமைச்சராக நியமிக்கவேண்டுமென்பது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரியதே, அதாவது வெளியிலிருந்து ஒருவரை அமைச்சராக நியமிக்கமுடியாதேதவிர ( உதாரணமாக இந்தியாவைப்போன்று நியமிக்க முடியாது) ஜனாதிபதி தன்னகத்தே அமைச்சுக்களை வைத்திருப்பதைத் தடுக்கவில்லை.

அவ்வாறாயின் 19 இன் இடைக்கால ஏற்பாட்டில் குறித்த மூன்று அமைச்சுக்களை தற்போதைய ஜனாதிபதி வைத்திருக்கலாம்; என்று கூறியதன் பொருளென்ன?

இதை பலவாறாக வியாக்கியானப்படுத்தலாம். ஆனாலும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை; என்பதனால் அவர் அமைச்சுக்களை வைத்துக்கொள்ள முடியாது; என்பது ஏற்புடையதல்ல.

இதன் வியாக்கியானத்தைப் பொறுத்தவரை இவ்வாறு மூன்று அமைச்சுக்களை மாத்திரம் ஜனாதிபதிக்கு குறித்தொதுக்கியதன்மூலம் எதிர்கால ஜனாதிபதிகள் எந்த அமைச்சையும் வைத்திருக்கக்கூடாது; என்பதுதானே பாராளுமன்றத்தின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்; என்ற வாதம் வலுவானது.

நவீன வியாக்கியானமுறை, குறிப்பாக அரசியலமைப்பு வியாக்கியானமுறை மிகவும் மாற்றமடைந்திருக்கின்றது. பொதுவாக எழுதிய அரசியலமைப்பு இல்லாத பிரித்தானிய முறையைப் பின்பற்றி ஒரு சட்டத்தில் மயக்கம் இருந்தால் அச்சட்டத்தின் பின்னால் உள்ள பாராளுமன்றத்தின் நோக்கத்தைப் பார்க்கும் மரபு இலங்கையில் இன்னும் பின்பற்றப்படுகின்றது.

மாறாக, மேற்கத்தைய உலகில் குறிப்பாக அரசியலமைப்பு வியாக்கியானத்தில் மயக்கமே இல்லாத தெட்டத்தெளிவான சரத்துகள் இருந்தால்கூட சட்டவாக்க சபையின் நோக்கம் தெளிவாக தெரிந்தாலும் அந்த நோக்கம் முக்கியமல்ல. குறித்த சரத்துக்கள் என்ன கூறுகின்றன; என்பதுவே முக்கியம்.

எதைவைத்து, குறித்த சரத்துக்கள் என்ன சொல்கின்றன; எனத் தீர்மானிப்பது என்ற கேள்வி எழும்போது பல விதமான அம்சங்கள், முறைமைகள் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையாக அமைவது  ஒவ்வொரு சொல்லினுடைய value மாகும். இதற்குள் இங்கு செல்ல விரும்பவில்லை.

இதனை சுருக்கமாக குறிப்பிட்டதன் காரணம், தற்போதைய ஜனாதிபதி குறித்த மூன்று அமைச்சுக்களை வைத்திருக்கலாம்; என்றதன்மூலம் எதிர்கால ஜனாதிபதிகள் எந்த அமைச்சையும் வைத்திருக்கக்கூடாது; என்பதுதானே இத்திருத்தத்தைக் கொண்டுவந்தபோது பாராளுமன்றத்தின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்; என்ற வாதம் நியாயமாக இருந்தபோதிலும் அரசியலமைப்பின் சரத்துக்களை வியாயக்கியானம் செய்யும்போது நோக்கம் பிரதான அம்சம் அல்ல. சொற்களின் பெறுமானமே பிரதான அம்சம்; என்பதுதான்.

இந்தப் பின்னணியில் சரத்து 4(b) யை மீண்டும் ஆய்வுசெய்வோம்.
————————————————————
இச்சரத்தின் பிரகாரம், ‘ நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதிக்குரியது; அது இலங்கையின் பாதுகாப்பை உள்ளடக்குகின்றது’. இச்சரத்தானது சரத்து மூன்றில் கூறப்பட்ட மக்களின் இறைமை தொடர்பானது. அதாவது நிறைவேற்றதிகாரமும் மக்களின் இறைமையின் ஓர் அங்கமே. அதனை மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றார்கள். இது நாட்டின் பாதுகாப்பை உள்ளடக்குகின்றது. சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகாரமின்றி சரத்து மூன்றை மாற்றமுடியாது.

சரத்து 4 இற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்று வெளிப்படையாக கூறப்படாதபோதும் ஏதாவது ஒரு திருத்தம் சரத்து மூன்றை பாதிக்குமளவு சரத்து 4 இல் மாற்றத்தை ஏற்படுத்துமானால் சர்வஜன வாக்கெடுப்பு தேவை; என்பதே இதுவரையான பல தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ள நிலைப்பாடாகும்.

4(b) இல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பொறுப்பு அகற்றப்படுவதென்பது சரத்து 3 இல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சர்வஜன வாக்கைடுப்பில்லாமல் ஜனாதிபதியிடம் இருந்து பாதுகாப்பு பொறுப்பை அகற்றமுடியாது.

ஜனாதிபதி தொடர்ந்தும் முப்படைகளின் தளபதியாக இருந்தபோதிலும் பாதுகாப்பு அமைச்சை வேறுவொருக்கு வழங்கிவிட்டு பாதுகாப்பைக் கையாளமுடியாது. எனவே, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சையும் கையளிக்க வேண்டும்; என்பது மேலே கூறப்பட்ட திருத்தங்களின் அர்த்தமாக இருக்கமுடியாது; நோக்கங்கள் எவ்வாறானபோதிலும்கூட.

எனவே, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கலாம்; என்பது சரியானமுடிவானால் தற்போதைய ஜனாதிபதி இம்மூன்று அமைச்சுகளையும் வைத்திருக்கலாம்; என்ற இடைக்கால ஏற்பாட்டின் பொருள் எதிர்கால ஜனாதிபதி எந்த அமைச்சையும் வைத்திருக்கக்கூடாது; என்பதல்ல; என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.

சிறுபான்மையின் நிலை
——————————
ஏனைய அமைச்சுக்களை ஒரு புறம் வைத்தாலும் சரத்து 4(b) யின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியும். தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழேயே சட்டம், ஒழுங்கும் வருகின்றது.

இனவாதம் உக்கிரமடைந்துள்ள இக்காலத்தில் பாதுகாப்பு ஒருவரிடமும் அரசாங்கம் ஒருவரிடமும் இருந்தால் நிலை என்ன? என்பதை அண்மையில் அனுபவரீதியாக கண்டோம். இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதியும் நாம் தெரிசெய்தவர்; அரசாங்கமும் நாம் தெரிவுசெய்தது. எனவே, ஜனாதிபதியிடமும் போய் பாதுகாப்புத் தொடர்பாக உரிமையுடன் பேசக்கூடியதாக இருந்தது.

எதிர்காலத்தில் நாம் வாக்களிக்காதவர் வெற்றிபெற்று வேறு கட்சி அரசாங்கத்தை அமைத்தாலும் நிலைமை கஷ்டமாகத்தான் இருக்கும்.

இந்தப்பின்னணியில்தான் யாரை ஆதரிப்பது என்பதை மிகவும் ஆழமாகச் சிந்தித்து முஸ்லிம்கள் முடிவுசெய்ய வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமானது.

( தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.