ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்
பாகம்-4
=================================
ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒரேபக்கம்
———————————————————
சஜித்-ரணில்: கோட்டா- மஹிந்த
**********************************
வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதியும் பாராளுமன்றப் பலமும் ஒரே கட்சியிடம் செல்லும்போது ஜனாதிபதியும் பிரதமராக எதிர்பார்க்கப்படுபவரும் கருத்தொற்றுமை உடையவர்களாக இருந்தால் பிரதமர் நியமனம் சுமுகமான இடம்பெறும். அதற்காக எதிர்காலத்தில் பிரச்சினை தோன்றாது; எனக்கூறமுடியாது. கருத்துவேற்றுமை உடையவர்களாக இருந்தால் பிரதமர் நியமனத்திலேயே பிரச்சினை தோன்ற இடமுண்டு.

நாம் கடந்த மூன்று பாகங்களில் ஜனாதிபதி, பிரதமர், ஆகியோருக்கிடையில் பிரச்சினைகள் தோன்றக்கூடிய அரசியலமைப்பு சட்ட பின்னணிகள், ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளில் வரும்போது தோன்ற சாத்தியமான பிரச்சினைகள் தொடர்பாக பார்த்தோம்.

இப்பொழுது ஒரே கட்சியில் அதன் சாத்தியப்பாடுகளைப் சில உதாரணங்களைக்கொண்டு பார்ப்போம்.

சஜித்- ரணில்
——————
ஐ தே க ஐப் பொறுத்தவரை ரணிலே வேட்பாளராக வரவிரும்புகின்றார் அல்லது கருவை வேட்பாளராக்க விரும்புகின்றார்; என செய்திகள் அடிபடுகின்றன. எதுஎவ்வாறிருந்தபோதிலும் சஜித்தைப் வேட்பாளராக்க அவர் விரும்பவில்லை; என்பது புலனாகின்றது.

மறுபுறம், றணிலுக்கு சஜித்தை வேட்பாளாராக்குவதைத்தவிர வேறு வழியில்லை; என்கின்ற அளவு அழுத்தங்கள் சஜித் அணியினால் கொடுக்கப்படுகின்றது.

த தே கூ ரணிலுக்கு மட்டுமே ஆதரவு வழங்கப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. ஆனாலும் சஜித்தை வேட்பாளாராக அறிவித்தாலும் அவர்கள் ஆதரவு வழங்கியே ஆகவேண்டும். ஏனெனில் கோட்டாவை அவர்கள் ஆதரிக்கமுடியாது; என்பது தெளிவு. வாக்களிப்பை பகிஸ்கரித்தால் கூட அது கோட்டாவுக்கே சாதகமாக அமையும்; என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

மறுபுறம் ரணில் வெற்றிபெறமாட்டார். எனவே, சஜித்தையே வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மு கா இருப்பதாகவும் தவறின் எதிரணிக்கு செல்ல இருப்பதாகவும் கதைகள் அடிபடுகின்றன. இதன் உண்மைத் தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ரணில் வேட்பாளர்
————————
வேட்பாளர் போட்டியில் ரணில் வேற்றிபெறுகிறார்; எனக்கொள்வோம். தேர்தலிலும் வெற்றிபெற்றால் ஓரளவு ஸ்திரமான ஆட்சி நிலைக்கும். காரணம் அவர் கட்சியின் தலைவராகவும் இருப்பதனால். பிரதமராக சஜித்தை புறக்கணித்து வேறு ஒருவரை நியமித்தாலும் ரணில் ஜனாதிபதி என்பதனால் எல்லோரும் அனுசரித்து போகவே விரும்புவார்கள்.

இன்று சஜித்தை ஆதரிப்பவர்களில்  கூட அதிகமானவர்கள் அவரில் உள்ள அபிமானித்திற்காக என்பதைவிட, ரணில் வெற்றிபெறமாட்டார்; சஜித்திற்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருக்கின்றது; என்பதற்காகவே ஆதரிக்கிறார்கள்.

ரணில் தேர்தலில் தோல்வியடைந்தால் அவரது தலைமைத்துவம் மீண்டும் சவாலுக்குட்படுத்தப்படும். அச்சவாலில் கடந்த காலங்களைப்போல் வெற்றிபெறுவாரா? தோல்வியடைவாரா? என்பதை காலம்தான் சொல்லவேண்டும். ஆனாலும் கட்சி மீண்டும் நீண்டகால எதிர்க்கட்சி அரசியலுக்குள் தஞ்சம்புக வேண்டிவரலாம்.

மறுபுறம், சஜித்திற்கு வேட்பாளர் நியமனம் வழங்காவிட்டால் அவரும் ஒரு பெரமுனவை உருவாக்கி போட்டியிடுவாரா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சஜித் வெற்றியடைதல்
——————————
சஜித் வேட்பாளர் நியமனத்திலும் வென்று தேர்தலிலும் வெற்றிபெற்றால் பெரும் ரணிலின் அரசியல் அத்துடன் அஸ்தமனமாகும். சஜித் ரணிலை பிரதமராக்குவார்; என்பது பெரியதொரு கேள்விக்குறியாகும்.

அவ்வாறு நியமித்தாலும் இடைக்காலத்தில் அவரை நீக்கி வேறொருவரை சஜித் பிரதமராமாக்கமாட்டார்; என்பதற்கு உத்தரவாதமில்லை.

தன்னை நியமிக்காவிட்டாலும் அல்லது நியமித்து சிறிது காலத்தின்பின் நீக்கினாலும் மைத்திரியுடன் போராடியதுபோல் போராட, கட்சி அங்கத்தவர்கள் ரணிலின் பின்னால் மொத்தமாக ஒன்றுசேரூவார்கள்; என எதிர்பார்க்க முடியாது.

எனவே, சஜித்தை வேட்பாளர் ஆக்குவதும் சஜித்தை வெற்றிபெற வைப்பதும் ரணில் தனக்குத்தானே வெட்டும் குழியாகிவிடும். இந்நிலையில் சஜித் தனது வேட்பாளர் போட்டியில்  வெற்றிபெறுவாரா? என்பதில் அரசியல் நோக்குனர்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ( இந்த சூழ்நிலை முஸ்லிம்களைப் பொறுத்தவரை எவ்வாறான சாதக, பாதக தாக்கத்தைச் செலுத்தும்; என்பதை வேறாகப் பார்ப்போம்.

அடுத்த பாகத்தில் கோட்டா- மஹிந்த தொடர்பான சூழ்நிலையையும் கருவை தெரிவுசெய்வதால் ஏற்படும் சூழ்நிலையையும் பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ்.

( தொடரும்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.